டெக்ஸன்
இந்தியாவின் மென்வேர் தொழில் வளர்ச்சி பற்றி Computerworld பத்திரிகையில் ஏப்ரல் முதல் வாரம் வெளிவந்திருந்த இரண்டு கட்டுரைகளிலிருந்து ( ‘Made in India ‘ a New Sign of Software Quality, Lessons from India Inc.) சில சுவாரசியமான தகவல்கள்: கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலிருந்து செயல்படும் Software Engineering Institute, மென்வேர் தயாரிக்கும் நிறுவனங்களின் முதிர்ச்சியை நிர்ணயிக்க CMM (Capability Maturity Model) என்ற ஒரு அளவுகோலை வகுத்திருக்கிறது. இந்தத் தராதரத்தின் அடிப்படையில், ஐந்துதான் எந்த நிறுவனமும் அடையக் கூடிய உச்ச நிலை. இந்த ஐந்தாவது நிலையை (வைரமுத்து குறிப்பிடும் காதலின் ஐந்தாம் நிலைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை!) அடைந்து விட்டதாகக் கருதப்படும் நிறுவனங்கள் உலகிலேயே 42 தாம். இதில் 25 இந்தியாவில் உள்ளன. (ஒன்று ஜப்பானிலும் மற்றவை அமெரிக்காவிலும்) நமக்குப் பரிச்சயமான விப்ரோ, டாடா கன்ஸல்டன்ஸி ஸர்வீஸஸ், சத்யம் போன்றவை இதில் அடக்கம்.
சென்ற ஆண்டு இந்தியாவிற்கு மென்வேர் மூலம் வந்த பண வரவு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 1989 இல் 20 மில்லியனில் தொடங்கி, இது வருடாவருடம் 50 சதவீதம் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 260,000 மென்வேர் வல்லுனர்கள் இன்று இந்தியாவில் வேலை பார்க்கிறார்கள். வருடந்தோறும் மேலும் 40,000 உயர்கிறது இந்த எண்ணிக்கை.
இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாய் இருந்த NASSCOM (National Association of Software and Service Companies) நிறுவனத்தின் தலைவர் Dewang Mehta சமீபத்தில் மாரடைப்பால் இறந்த விஷயம் பற்றிப் படித்திருக்கலாம். மேத்தாவுக்கு வயது 39. சில மாதங்களாய் நீடித்து வரும் பொருளாதாரத் தேக்கத்திற்கும் இவரது மரணத்திற்கும் தொடர்பு இருந்ததா என்று தெரியவில்லை.
பெங்களூரின் கடும் நெரிசல்களுக்கு அப்பால், 29 ஏக்கர் நிலத்தில் இந்தியாவின் மென்வேர் சாதனைக்கு உதாரணமாகத் திகழும் Infosys Technologies Ltd. பற்றியும் இதே இதழில் படிக்க முடிகிறது. 1981 இல் 6 பொறியியல் வல்லுனர்களால், 250 அமெரிக்கன் டாலர் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். 8900 பேர்கள் இன்று மாடாய் இங்கு உழைக்கிறார்கள். சென்ற ஆண்டு இதன் லாபம் மட்டும் 93 மில்லியன் டாலருக்கு மேல்.
இது போல் குபேரனான (Rags to Riches) கதைகள், கலிபோர்னியாவின் ஸிலிக்கான் பள்ளத்தாக்கிலும் ஏராளம். இதில் சோகம் என்னவென்றால், இந்தக் குபேரனான கதைகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டன சமீபத்திய குசேலனான (Riches to Rags) கதைகள். சென்ற ஆண்டின் நடுவில் வெடித்த இந்த ‘டாட் காம் ‘ குமிழியின் தெறிப்பு இன்னும் அடங்கிய பாடில்லை. இதற்குப் பல சுவாரசியமான பெயர்கள் தரப்படுகின்றன இப்போது: ‘Dot Gone ‘ ‘Dot Coma ‘ இத்யாதி.
ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் எழுதுவதில் சில சங்கடங்கள். ஒரு ‘க ‘, ‘ட ‘, ‘த ‘, ‘ப ‘ வை வைத்துக் கொண்டு திண்டாட வேண்டியிருப்பது மட்டுமல்ல பிரச்சனை. உதாரணத்திற்கு, Harry Potter ஐ எடுத்துக் கொள்வோம். Harry ஐ, ஹாரி என்றோ, ஹேரி என்றோதான் தமிழில் எழுத முடியும். முன்னது ‘லாரி ‘க்கு மோனை. ஹரியின் அமெரிக்க அவதாரம் எனலாம். பின்னது கரடியையோ சட்டையைக் கழற்றிய கதாநாயகனையோ, நினைவு படுத்துகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட Harry ஐ எழுத்தில் கொண்டுவருவது எப்படி ? (எனக்குத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எதுவும் தெரியாதென்று சத்தியம் செய்ய விரும்புகிறேன்!)
ஹரியோ, ஹாரியோ, ஹேரியோ போகட்டும். பாட்டர் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பாட்டர் எனும் இளம் மந்திரவாதியின் கதைகளை இன்னும் படிக்காதவர்கள் (இதோடு நான்கு புத்தகங்கள் வந்து விட்டன) யாரும் இருந்தால் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: உடனே படிக்க ஆரம்பிக்கவும். (இது சினிமாவாக நவம்பரில் வர இருக்கிறது – அதற்கு முன் நிச்சயமாய்!) வெறும் அம்புலிமாமா கதையென்று யாரும் அலட்சியம் செய்து விட முடியாத படி அற்புதமாய் எழுதியிருக்கும் இங்கிலாந்து ஆசிரியை ஜே.கே. ரெளலிங் இன்று பெரிய நட்சத்திர எழுத்தாளர். கடந்த சில ஆண்டுகளில் நான் முழுக்கப் படித்த ஆங்கிலப் புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் இந்த நான்கும் அடக்கம் என்பதே இவற்றின் சுவாரசியத்திற்குச் சாட்சி. இத்தனைக்கும் இதன் நான்காவது பாகம் மட்டும் 734 பக்கங்கள்.
இந்தப் புத்தகங்களின் இலக்கிய அந்தஸ்து பற்றியோ, பிரசுரம் சம்பந்தப் பட்ட மிகைப்படுத்தல் (hype) பற்றியோ, கவலைப்பட வேண்டாம். சிறியவர்களும் பெரியவர்களும் வித்தியாசமில்லாமல் ரசிக்கும் விதம் அழகாய்க் கதை சொல்வது எப்படியென்று இவரிடம் ஆரம்ப எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ளலாம்.
கடந்த ஜூலையில் நான்காவது பாகம் வெளியான போது, நடு இரவில் புத்தகக் கடைக்குச் சென்று க்யூவில் நின்று வாங்கிச் சென்ற வாசகப் பெருமக்கள் ஏராளம். அடுத்த நாளைக்குள் முதல் பிரசுரம் பெரும்பாலான் கடைகளில் விற்றுத் தீர்ந்தும் விட்டது. இன்டர்னெட் புத்தகக் கடையான அமேசான்.காமில், புத்தகம் வெளிவருவதற்கு முன்பே ‘ரிஸர்வ் ‘ செய்து வாங்கியவர்கள் சுமார் மூன்றரை லட்சம் பேர்! (இதற்கு முந்தைய ரெக்கார்ட் வெறும் 43,000 தானாம்) அடுத்து வரவிருக்கும் ஐந்தாவது பாகத்திற்கு, புத்தகக் கடைகள் ரிஸர்வேஷன் தொடங்கி விட்டன.