எம் ஐ டி ரிவியூ – 2 – நெகிழும் டிரான்ஸிஸ்டர்கள்

This entry is part [part not set] of 11 in the series 20010122_Issue

செரீ காகென் (Flexible Transistors Cherie Kagan)


எல்லாப்பொருள்களிலும் செருகப் பட்டுவரும் கணிணிகள் சமூகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இண்டெர்நெட் வலைச் செய்திகளைக் கொண்டுசெல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று கணிணி மேஜை மீது மட்டும் இருக்கிறது. இது உலகம் முழுவதும் எல்லாப் பொருள்களிலும் உள்ளடக்கமாக ஆகும் காலத்தை நோக்கி வேகமாகச் செல்கிறது.

செய்தித்தாள்கள், உடைகள், பொருள்களின் மீது அடையாளத்துக்கு இருக்கும் லேபிள்கள் போன்றவற்றில் சிலுக்கான் சில்லுகள் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குச் செல்கிறோம். இதற்கு சில்லுகள் நெகிழும் தன்மையதாக இருக்க வேண்டும். அதே நேரம் அவை விலை குறைவானதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று சிலிக்கான் சில்லுகள் (மேஜை மீது இருக்கும் கணிணிகளுக்குள் இருக்கும் சிலிக்கான் சில்லுகள்) விலை அதிகமானவை. இன்னும் பெரிய விஷயம், இந்த சிலிக்கான் சில்லுகள் பிளாஸ்டிக் போன்ற வளையும் தன்மையதான பொருள்களுக்குள் வைப்பது கடினம்.

தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் இந்த எல்லைகளைக் கடக்க சில உபாயங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் தூள் சிலிக்கானை மறுகண்டுபிடிப்பு செய்ய விழைகிறார்கள். மற்றும் சிலர் சிலிக்கானை விட்டுவிட்டு கரி மற்றும் உயிர்சார்ந்த வேதிப் பொருள்கள் மூலம் டிரான்ஸிஸ்டரை மறுகண்டுபிடிப்புச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

லூசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் வியாபாரத்துக்கு உகந்த சில டிரான்ஸிஸ்டர்களை உயிர்வேதிபொருள்கள் மூலம் உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் காம்பிரிட்ஜ் வளாகத்திலும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்திலும் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். இருந்தும் ஒரு முக்கியமான விஷயம். இந்த பாலிமர் சார்ந்த டிரான்ஸிஸ்டர்கள் சிலிக்கான் சில்லுகளை விட மெதுவானவை. (கணக்குப் போடும் வேகம் குறைவு)

இப்போது ஐபிஎம் நிறுவனத்தில் பொருள்கள் துறை அறிவியலாளராக இருக்கும் 31 வயது நிரம்பிய செரீ காகென் விலை குறைவான ஆனால் வேகமான வளையும் தன்மை கொண்ட டிரான்ஸிஸ்டர் தொழில் நுட்பத்துக்கு வித்திட்டிருக்கிறார்.

இவரது கண்டுபிடிப்பு ?

ஒரு விட்டுக்கொடுப்பு. டிரான்ஸிஸ்டர்கள் எப்போதும் போல பழைய சிலிக்கான் கொண்டு ஆனால் அடிப்பதிமம் பாலிமரில்.

இந்த கலப்பினம் முன்பு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்யும் டேவிட் மிட்ஜி அவர்களால் உருவாக்கப்பட்டது. 1998இல் செரீ காகென் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். (1996இல் இவர் எம்ஐடியில் டாக்டர் பட்டம் பெற்றார்). டேவிட் உருவாக்கிய டிரான்ஸிஸ்டர்கள் மெதுவாக வேலை செய்தன. ஆனால் பாலிமர் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

செரீ இந்த டிரான்ஸிஸ்டர்களைப் பார்த்தார். அதில் இருக்கும் சில பொருள்களை மாற்றி மாற்றி அதன் வேகத்தை கூட்டிக்கொண்டே வந்தார், இறுதியில் அவரது டிரான்ஸிஸ்டர்கள் சிலிக்கான் போன்ற வேகத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தன. பாராட்டுடன், அவருக்கு தனி பரிசோதனைச்சாலையையும் செய்து கொடுத்தது ஐ பி எம்.

இவரது கண்டுபிடிப்பின் முக்கியமான விஷயம். இந்த டிரான்ஸிஸ்டர்களை ஒரு நல்ல அச்சி இயந்திரத்தில் கொடுத்து தேவையான மை (விஷேச மை) ஊற்றி அச்சிட்டால் கணிணி தயார். என்ன கணிணிக்கான மத்திய அமைப்பு (உதாரணமாக பெண்டியம்) கொஞ்சம் பெரிசாக இருக்கும் அவ்வளவுதான். ஆனால் ரொம்பவும் விலை குறைவல்லவா ?

இவரது கண்டுபிடிப்புகள் பல விதங்களில் உபயோகப்படும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது எல்சிடி கணிணித் திரைகள் அதிக விலைகளில் விற்கப்படுகின்றன. இந்த திரைகளுக்குப் பின்னால் இருக்கும் கணிணி அமைப்பு மிகவும் விலை மதிப்பு வாய்ந்தது. ஆனால் செரீ அவர்களின் கண்டுபிடிப்பு மூலம் இந்த திரைகளையே அச்சிட்டு எடுத்துவிடலாம்.

இன்னும் 5 வருடங்களில் இந்த தொழில்நுட்பம் வியாபாரநிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள், அப்போது, நமது சட்டையிலும், செய்தித்தாள்களிலும், சட்டையோடு சட்டையாக, தாளோடு தாளாக கணிணிகள் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

இன்னொரு விஷயம். அப்போது அந்த கணிணிகளுக்கு சக்தி தர பெரிய பாட்டரிகள் வேண்டுமே அதை யோசித்தீர்களா ? அதற்கு இப்போது செரீ யோசித்து அதில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எளிய விலைகுறைந்த அச்சடிக்கக்கூடிய சூரிய சக்தி செல்கள். ஒரு பிளாஸ்டிக்கில் அச்சிட்டு விட்டால் அது வெளிச்சத்தில் காண்பித்தால் சக்தி தரும்.

Series Navigation