கைப்பிடியளவு கணினி

This entry is part [part not set] of 6 in the series 20000417_Issue

வெங்கடரமணன்


வெகுவாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஆற்றிவரும் பங்கு அளவிடமுடியாதது. நாம் தினசரி வேலைகளைக் கவனிக்கும் விதமும், ஓய்வுப்பொழுதைக் கழிக்கும் முறையும் இணையத்தால் பெரிதும் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்கு சந்தையைப் பற்றித் தொலைக்காட்சியில் காட்டும் ஓவியம் ‘சந்தைக்கடைக் கூச்சல் ‘ என்பதை வரையறுக்கும் விதமாக இருக்கும், பலரும் கூச்சலிலும் சைகையிலும் வணிகம் ஆற்றுவது அதற்குச் சம்பந்தமில்லாதவர்களுக்கு ஒரு காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றும். இன்று பங்குச் சந்தைகள் பெரும்பாலும் அமைதியான வழிக்கு மாறிவருகின்றன. பங்குகளின் நிலவரத்தையும், நிறுவனங்களின் செயல்பாட்டையும் இணையத்தின் உதவியுடன் ஆழ்ந்து கவனித்து, உங்கள் விசையெலியின் ஒரு ‘கிளிக் ‘ ஒசையுடன் மட்டுமே நீங்கள் பங்குமாற்றத்தை நிகழ்த்தவியலும். சில ஆண்டுகளுக்குமுன் நான் காலை எழுந்தவுடன் என் அம்மா தரும் காப்பிக்கு முன்னால் வாசல்புறம் ஓடிச்சென்று அன்றைய செய்தித்தாளை எடுத்து வருவேன். நேற்று நடந்த நிகழ்வுகளை இனியும் தாமதம் இல்லாமல் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் இருந்தது. இப்பொழுது நான் பெரும்பாலும் செய்தித்தாட்களைப் படிப்பதில்லை, ஆனால் உலகின் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சி அடுத்த சில நிமிடங்களில் தெரிந்துவிடுகின்றது. உலகம் சுருங்கி ஒரு பெட்டியளவிற்கு கணினியாக அடங்கிவிட்டதுபோல் தோன்றியது. இந்த ஆச்சரியம் அடங்குவதற்குள் அது இன்னும் சுருங்கி கைப்பிடியளவிற்குள் வந்துவிட்டது.

நான் சொல்வது இந்த ஆண்டின் இணையற்ற தொழில்நுட்ப முன்னேற்றமான கையடக்க கணினிகள் (palmtop computers) குறித்து. சில மாதங்களுக்கு முன் தோக்கியோ நகரிலுள்ள உலகிலேயே மிகப்பெரிய மிண்ணனுச் சந்தையான அக்கிகபாரா- விற்குச் சென்றேன். (அது என்னுடைய போதை, அந்தச் சந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சென்று புதிதாக என்ன சாதனம் வந்திருக்கிறது எனப் பார்க்காவிட்டால் எனக்குத் தூக்கம் வராது, பெரும்பாலும் அது பார்த்தலோடு நிற்பதில்லை, திரும்ப வீட்டிற்கு வரும்பொழுது வங்கிக் கணக்கில் கணிசமான அளவிற்குக் குறைந்திருக்கும்). அன்று என்னுடைய பணஇருப்பில் கிட்டத்தட்ட இருபத்தையாயிரம் ரூபாய் குறைந்தது. கையில் ஒன்றும் பெரிய பையில்லை, எல்லாம் ஒரு சட்டைப்பைக்குள் அடங்கிவிட்டது. நான் வாங்கியது ஜப்பானிய நிறுவனமான காஸியோ வெளியிட்டிருந்த கையடக்கக் கணினி (Cassiopeia E-105), அந்த சமயத்தில் அது அமெரிக்காவில் கூட விற்பனைக்கு இல்லை. சாதனங்களை அளவில் சிறியதாகச் செய்வதில் ஜப்பானியர்களுக்கு இணையாக யாரும் இல்லை. இங்கே இட நெருக்கடியால் எல்லாமே சிறியவைதான். ஏன் கைக்கடக்கமாக வாக்மேனைச் செய்யவேண்டும் என பலரும் புருவம் உயர்த்திய வேளையில் அதைச் செய்துகாட்டி உலக மின்னணுச் சந்தையைத் தன் கைக்குள் அடக்கிய சோனி நிறுவனத்தின் கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த வரிசையில் காஸியோப்பியா கட்டாயம் வரலாற்றில் இடம்பெறும்.

என்ன இது ?

நான் இவ்வளவு பீடிகை போடுவதில் அப்படி என்னதான் இருக்கிறது ? கையடக்க கணினிகள் ஒன்றும் புதிதல்லவே. அமெரிக்க நிறுவனமான பாம்கம்ப்யூட்டிங்கின் பாம்பைலட் கணினிகள் ஏற்கனவே சந்தையில் இருக்கின்றனவே என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஏன், காஸியோப்பியா போலவே காம்பாக்-கின் ஏரேவும் ஹெச்.பி-யின் ஜோர்னாடாவும் இருக்கின்றனவே எனலாம். என்னுடைய இந்தக் கட்டுரை பொதுவில் கையடக்கக் கணினிகளைப் பற்றியதுதான். மற்றவற்றைக் காட்டிலும் காஸியோவினது சற்றே தொழில்நுட்பத்தில் உயர்ந்ததால் நான் அதை விவரிக்கின்றேன். 

இதன் மையம் MIPS 131 மெஹாஹெர்ட்ஸ் நுண்செயலி (microprocessor) (இது நான்காண்டுகளுக்கு முன் வழக்கில் வந்த முதல் தலைமுறை பெண்டியம் நுண்செயலிகளைக் காட்டிலும் வேகமானது). 32 MB RAM, இதன் அளவைக் கூடுதல் நினைவு அட்டைகளால் (compact flashcard) பெருக்கலாம். 240 x 320 அளவிற்கு 65,536 வண்ணம் காட்டவல்ல திரை, இது ஸ்டிரியோ ஒலிகளை இசைக்கவல்லது. இத்துடன் வரும் இதன் தளத்தின் மூலம் மேசைக் கணினிகளுடன் இதனால் தொடர்பு கொள்ள வியலும், சேமக்கலன்களில் சக்தி சேமிக்கவியலும். அகச்சிவப்புக் கதிர்களால் இயங்கும் தொடர்பின் மூலம் எந்தவிதமான இணைப்புகளும் இன்றி நேரடியாக மேசைக்கணினிகளுடனோ, நோட்டுக் கணினிகளுடனோ இதிலிருந்தும், இதற்கும் கோப்புக்கடத்தல் (file transfer) செய்யவியலும்.

திரை தொடுவுணர்வு கொண்டது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் எழுத்தாணி மூலம் இதில் கட்டளைகளை உள்ளீடு செய்யவியலும். மேலும் இத்திரையில் எழுதப்படும் உங்கள் கையெழுத்தையும் (கிறுக்கல்களை ?) உணரவல்லது. இதன் பின்புறமிருக்கும் கூடுதல் இணைப்பு வசதிமூலம் இதன் திறனைப் பெருக்கலாம். உதாரணமாக, அவ்விணைப்பில் உங்கள் செல்பேசியை (mobile phone) இணைத்து இணையத் தொடர்பு கொள்ளலாம்.

இது மைக்ரோஸாப்ட்-டின் சிறுகணினிகளுக்கான இயக்குதளமாகிய (operating system) விண்டோஸ்-சி.யி யில் இயங்குகின்றது. இதற்கான இலவச இயக்குதளமான லினக்ஸ்-கூட தற்பொழுது தயாரிப்பு முடிவடைந்து சோதனை நிலையில் உள்ளது. பல்வேறு மென்கலன் உற்பத்தியாளர்கள் இதன் செயல்பாட்டை விரிக்க பல செயலிகளைத் தினமும் வெளியிட்டு வருகின்றார்கள்.

என்னவெல்லாம் செய்கின்றது ?

ஒரு கையடக்க மின்நாட்குறிப்பைப்போல இதில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளைப் பதிவுசெய்யலாம், முகவரி ஏடாகப் பயன்படுத்தலாம், சிறிய கணிப்பானாக (calculator) உபயோகப்படுத்தலாம், உங்களுக்கு அவசரத்தில் தோன்றும் விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். திசைகாட்ட சிறிய கோட்டுப் படங்களை வரைந்து சேமிக்கலாம்.

உரை வடிவ கோப்புகளை (உதாரணமாக மைக்ரோஸாப்ட் வேர்ட் செயலி), மற்றும் அலுவல் கோப்புகளை இதில் எடுத்துச் செல்லவியலும். சிறிய மாற்றங்கள் செய்யவியலும்.

மின்னஞ்சல் அனுப்பலாம், ஒரு மின்னணு படத்தொகுப்பாக உங்கள் படங்களைச் சேமிக்கலாம், கையில் எடுத்துச் செல்லலாம், இதனுள் இருக்கும் குரல்பதிவு செய்யும் (voice recorder) நிரலைப் படுத்தி சிறிய ஒலிக்கோப்பாக உங்கள் செய்தியை சேமிக்கலாம்; சேமித்ததை மின்னஞ்சல் மூலம் நண்பருக்கு அனுப்பலாம். சலனப்படங்களைப் பார்க்கலாம். கூடுதல் இணைப்பாக காஸியோ வெளியிட்டுள்ள சலனப்பட கேமராமூலம் படமெடுக்கலாம். படங்களுடன் கூட ஒலியையும் சேமிக்கவியலும், பிறகு ஒலிச்சேர்க்கையும் தொகுப்பும் செய்யவியலும். சுருங்கக் கூறின், இது ஒரு முழுமையான பல்லூடகக் கணினியாகச் (multimedia computer) செயல்பட வல்லது.

இதனை ஒரு மின்னூல் படிப்பியாக (ebook reader) உபயோகப் படுத்தலாம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று), எண்ணற்ற மின்னூல்கள் இணையத்தில் இலவசமாகவும் விற்பனைக்கும் கிடைக்கின்றன. நம் தமிழில் மதுரைத்திட்டம் வெளியிட்டுள்ள எண்ணற்ற அரும் இலக்கியங்களை மின்னூல்களாக இதில் படிக்கவியலும். இந்தவிதத்தில் ராக்கெட் மின்னூல் படிப்பி இதனுடன் ஒப்பிடுகையில் சோகையாகத் தெரிகின்றது. காஸியோப்பியாவின் வண்ணத்திரையில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்து நிறத்தையும் கண்ணுக்கு உறுத்தாத தாள் வண்ணத்தையும் தெரிந்தெடுக்க முடியும். பிற மின்னூல் படிப்பிகள் பெரிதும் கருப்பு-வெளுப்பே.

பெரும்பாலான இந்தப் பயன்களுக்கு இணையத்தொடர்பு அவசியம் என்பது தெரிந்திருக்கும். முன்னரே சொன்னது போல் செல்பேசி மூலம் இணையத்தில் இணைக்கலாம். (என்னைப்போல் செல்பேசி இல்லாத சுதந்திரப் பறவைகள் பெரிய கணினிகளுடனும், நோட்டுக் கணினிகளுடனும் இணைக்கவல்ல வெளியே இயங்கும் ஏற்றிறக்கியின் (modem) மூலம் இணைக்கலாம் – கொஞ்சம் அதிகவேலை செய்யவேண்டியிருக்கும்). நல்லவேளையாக இணையத்தைத் தொடர்புகொள்ள இலவசச் செயலி ஒன்றும் கிடைக்கின்றது. இத்துடன் வரும் உலாவி (browser) யின் மூலம் இணையத்தில் பயணிக்கலாம். 

இத்துடன் வரும் நிலவரைபடப் படிப்பி (map reader) மூலம் நாடுகளின் புவியியல் வரைபடங்களிலிருந்து, தெருக்களின் வரைபடங்கள் வரைக் காணலாம். இந்த வகையில், செல்லும் இடத்திற்கான வரைபடத்தை இதில் கடத்தி, எடுத்துச்சென்று எந்த இடத்திலும் வழிகண்டுபிடிக்கவியலும். இன்னும் ஒருபடி மேலேயும் போகின்றது இது – தற்பொழுது பரவலாக செயலுக்கு வந்து கொண்டிருக்கும் துணைக்கோள் (satellite) உதவியுடனான உலகளாவிய இடங்காணும் சாதனமாகவும் (Global Positioning Device) இதனை உபயோகிக்கவியலும். எனவே காரில் இதனைப் பொருத்திவிட்டு சேருமிடத்தைப் பதிவு செய்தால் இது செயற்கைக்கோள் துணையுடன் உங்களுக்கு வழிகாட்டும்.

என்னுடைய அறிவியல் வேலைகளுக்கும் இதனைப் பயன்படுத்த முடிகின்றது. வெளியாகும் ஆய்வறிக்கைகளைச் சேமிக்க முடிகின்றது, இலவசமாகக் கிடைக்கும் செயலியைப் பயன்படுத்தி அறிவியல் கணிப்பானாக இதைமாற்ற முடிகின்றது. சிறிய ஆணைநிரல்களை (programs) வடிக்கமுடிகின்றது, வரைபடங்கள் கணிக்கமுடிகின்றது.

எல்லாம் சரிதான் பொழுதுபோக்க ஏதாவது விளையாட்டு உண்டா என்று கேட்பவர்களுக்கு – இத்துறையில் என்னுடைய அறிவு சற்றுக் குறைவுதான் – எனக்குத் தெரிந்த வரையில் இதில் எப்பொழுதும் பிரபலமான ஒற்றையன் (solitaire) விளையாட்டு இதன் கூடவே வருகின்றது. இதுபோக பலநிறுவனங்கள் இதன் பலவண்ணம் காட்டும் திறனையும் ஸ்டிரியோ ஒலித்திறனையும் கையாண்டு நல்ல விளையாட்டுகளை வடித்திருப்பதாகத் தெரிகின்றது. உதாரணமாக மிகவும் புகழ்பெற்ற டூம் (Doom) விளையாட்டு இதற்குத் தயார்.

நான் மிகவும் பயன்படுத்தும் பொழுதுபோக்கு ஒன்று உள்ளது; அது இணையத்திலிருந்து தருவித்த இசையை இதன் மூலம் இரசித்தல். இப்பொழுதெல்லாம் தேவையற்ற ஒலிக்குறுந்தகடுகளை (compact audio disk) வாங்கிக் குவிக்கவேண்டியதில்லை. இணையத்தின் மூலம் பாடல்களையோ, பாடல் துளிகளையோ கேட்டுவிட்டு பிறகு வாங்கமுடியும் (பெரும்பாலும் தவிர்க்க முடியும் என்பதுதான் உண்மை). இதன் ஒலிநயம் மிகவும் சிறப்பாகவுள்ளது. இத்துடன் வெளி ஒலிப்பான்களையும் இணைக்கமுடியும். இதுபோல இணைய இசையை (பெரிதும் mp3 கோப்புகளை) ஒலிக்கவல்ல mp3man, டைமண்ட்டின் ரியோ பிளேயர் போன்றவைகளும் சந்தையில் உள்ளன. இவற்றில் எல்லாவிதமான ஒலிக்கோப்புகளையும் இசைக்கமுடியாது. உதாரணமாக, வழக்கம்போல் தகுதரமாக விளங்கும் mp3 லிருந்து மாறுபட்டு, மைக்ரோஸாப்ட் வகுத்துள்ள விண்டோஸ் மீடியா வடிவில் கிடைக்கும் இசையை ரியோவில் கேட்கவியலாது. ஆனால் செயலிமூலம் இயங்கும் இசைக்கருவியான கையடக்க கணினிகளில் செயலியை மாற்றி இவற்றைக் கேட்கவியலும். இது மிகவும் அவசியம் நாளை mp3 லிருந்து மாறுபட்டு வெளிவரக்கூடிய சிறந்த வருங்கால ஒலிவடிவங்களையும் இதில் ஒலிக்கலாம்.

இன்னும் என்னவெல்லாம் செய்யக்கூடும் ?

பொதுவில் இது ஒரு இயக்குதளத்தின் அடிப்படையில் செயல்படும் சாதனம் என்பதால் இதன் பயன்பாடுகள் எந்த அளவிற்கு விரியக்கூடும் என்பதை வரையறுக்கவியலாது. மேலும் அதிவிரைவாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் இத்தகைய சோதிடங்கள் வருங்காலத்தில் பெரும் நகைப்புக்கு உள்ளாகக் கூடும். உதாரணமாக, நான் இந்த காஸியோப்பியாவை வாங்குகையில் கையடக்க கணினிகளிலேயே அதிக அளவு நினைவுக்கலன் கொண்டது இதுதான் (32 மெகாபைட்), சென்றமாதம் ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்திருக்கும் மாபெரும் காந்தத்தடை (Giant MagnetoResistence) அடிப்படையிலான கடினத்தட்டுகள் கையடக்க கணினிகளுக்குக் கிகாபைட்டுகளில் சேமிப்புத்திறனை அளிக்கவல்லவை. இத்தகைய இராட்சதத் சேமிப்புத்திறன் மூலம் இதன் செயல்திறன் எந்த அளவிற்கு உயரும் என்று என்னால் கற்பனை செய்துகூடக் காணவியலவில்லை. நாம் சிலவாரங்களுக்கு முன் திண்ணையில் வெளியிட்டிருந்த டிரான்ஸ்மெட்டாவின் குருஸோ செயலிகளும் இவற்றின் திறனைப் பெருக்கவும், சக்தித் தேவையைக் குறைக்கவும் வல்லவை.

இவையெல்லாம் விரைவிலேயே சந்தைக்கு வந்துவிடும். அதுவரை என் அருமைக் குட்டிச்சாத்தானுடன் நான் ஊர்சுற்றுவேன், இசை கேட்பேன், இணையம் உலாவுவேன், மின்னஞ்சல் அனுப்புவேன், இடையே அதன் அழைப்புமணியால் நினைவுபடுத்தப்பட்டு வேலையையும் கவனிப்பேன்.

தோக்கியோ
ஏப்ரில் 09, 2000

தொடர்புள்ள இணையப்பக்கங்கள்

Microsoft Windows CE
Casio ‘s cassiopeia
H.P ‘s Jornada
Compaq ‘s Aero
Palm Pilot
IBM ‘s new Hard disk technology based on GMR
Linux for Handhelds
Transmeta ‘s Crusoe Processor

Windows CE shareware collection
Mobibook free eBook reader and eBooks
Folio ‘s Free Webbrowser for Handheld PCs
For technology news about handheld PCs and embedded systems

கணினி உலகின் புதிய விண்மீன்
மிரட்டுகிறது மின்னணுப் புத்தகம்  – மின்னூல் பற்றிய கட்டுரை.
 

Series Navigation

வெங்கடரமணன்.

வெங்கடரமணன்.