யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

கலாசுரன்


—————————————————————

ஜன்னல் கண்ணாடிகளில்
ஒரு நிழல் ஆடி மறைந்தது… அங்கு
எவரும் இல்லாமல்கூட இருக்கலாம்

குளிர்காய்கிறது நிலவு….
எதோ ஒரு சலசலப்பின் ஓசைகள்
ஓய்வில்லாது ஒலிக்கிறது

சிந்தனைகளில் துளிர்விடும்
குளிர்நிலவின் கிளைகளில் மலர்கின்ற பனி …..
தன் பூவிதழ்த் துளிகளை தூவுவதாகலாம்

விழிகளில் வாழ்கின்ற காதலெனும்
பறவைகளின் இறக்கைகள் சோம்பலால்
படபடப்பதுமாகலாம் ….

அலையும் இந்த தென்றலும்
தன் விரல்களால் மெல்லமாய்
என் கற்பனை வீணையை இசைக்கின்றதுமாகலாம்

இதையத்தின்
ஓசைகள் சுவர்களில் மோதி
பிளவுண்டு காதுகளில் விழுகின்றதுமாகலாம் ….

கரைகளை வருடும்
நதி நீரின் அலைகள்
ரகசியமாய் காற்றிடம் பேசுவதுமாகலாம்…..

பனித்துளி மோதிச்
சிலிர்த்ததோர் புல்வெளி
இரவிடம் செல்லமாய்க் கொஞ்சுவதுமாகலாம்…..

மனதோரம் செல்லமாய்
தூங்குமென் கனவுகள்
ஒருகணம் திரும்பிப் படுத்துக்கொண்டதுமாகலாம் ….

அவ்வோசை இவை ஒன்றுமல்லாது
எவரும் விரும்பும் ஒருவர்
நம் வீட்டிற்கு படிதாண்டி வருவதுமாகலாம் …..

சப்தங்களரியாது சலனங்களரியாது
பூனைபோல் எழும்பி…… திறக்கும்படிக்கு
கதவண்டை நிற்கிறேன்…..!

—————————————————————-

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்