இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

வித்யாசாகர்


நிறைய அலமாரிகளில்
பணம் அடுக்கப்பட்டு
வயிறுகளில் பசி
இறுகக் கட்டி

பட்டில் ஆடையுடுத்தி
மாற்றுப் புடவைக்கு
பிச்சையெடுத்து

விமானத்தில்
நடுக்கடலில்
பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்
வாகன நெரிசலுக்கிடையே
திருமணம் நடத்தி
முதிர்கன்னிகளை
ஆங்காங்கே திரியவிட்டு

பெண்களின் கற்பு பேசி
விலைமகள்களுக்கு –
வீடமைத்துக் கொடுத்து

ஜனநாயக தேசமென
மார்தட்டி –
எடுத்ததற்கெல்லாம்
ஜாதி கேட்டு

எம்மதமும்
சம்மதமென சொல்லி
என் மதம் உன் மதமென்று
வெட்டிமாய்ந்து

அரசியலை அழகாக பேசி
அரசியல் வாதிகள் மட்டும்
சொகுசாக வாழ்ந்து

இல்லார்க்கு
இல்லாமலே போவதும்
இருப்பவர்
தனக்கு மட்டுமே வாழ்வதும்

அப்பப்பா..

மிக உன்னதமாக
வாழ்கிறோம் நாம்;

வரலாற்றுக் குறிப்பில் நம்மை
வளரும் தேசமெனக்
குறித்துக் கொள்வோம்,

நாளைய தலை முறை
காரி துப்பட்டும்!

—————————————————–

Series Navigation

வித்யாசாகர்

வித்யாசாகர்