வேத வனம் விருட்சம் 67

This entry is part of 24 in the series 20100108_Issue

எஸ்ஸார்சி


யாம் கவிகளின் கவி
வெற்றிதரும் கணங்களின்
தலைவனை அழைக்கிறோம்
பிராம்ணர்களின் உத்தமத் தலைவனவன்
எமக்குச் செவி சாய்த்து
ஆசி அருளித்
தன்நிலை அமரவும் ( கிருஷ்ண .யஜுர் 2/129 )

பிதிர்க்களே நீவிர்
அவி உண்ண வாரும்
அக்கினியால் பதப்பட்ட நீவிர்
தருப்பை மீதுள்ள
அவி புசிக்க வேண்டுகிறோம்
சுவதா ஒலி அழைப்பால்
வரும் இப் பிதிர்கள்
விட்ணு பாதம் விரும்பிகள் ( கி.ய.2/136 )

அக்கினியே யாம்
காண ஒளிரும் நீ
எமக்கும் ஒளி வழங்குகிறாய்
உள்ளொளி உடையோன்நீ
உள்ளொளி எமக்கு அருள்கிறாய் ( கி.ய.3/152 )
அக்கினி அக்கினியுடனே
உற்சாகம் பெறுகிறான்
கவிஞன் காளையவன்
கிரகபதி அவி ஏந்து ஊடன்
தீக்கொழுந்துடை வாயன் ( கி.ய.3/173 )
ருது அயனம்
வருடம் முனிபுருடர்
சத்யங்கள் இவை தாம்
அக்கினிக்கு வலிமை கூட்டுகின்றன

அக்கினியே நின்னை
அணுகுவோன் நலம் பெறுக
நின்னோடு நேர்நிற்கும் பிராமணர்கள் மேன்மையுறுக
பிறர் ஒங்குதல் இல்லாதொழிக
அக்கினியே எதிர்ப்பை
அக்கினியே தடையை
அக்கினியே அறியாமையை
அக்கினியே அளியாமையை வெல்க ( கி. ய. 4/180)
பலம்பொறுந்திய பனிப் பர்வதங்கள்
நீராலான சமுத்திரங்கள்
இவையொடு
திசையாகிய தோட்களுடைத்
தேவனுக்கு எமது அவி சேரட்டும். ( கி.ய.4/181)
எமக்கு அந்நியன்
எம்மை வெறுப்போன்
எம்மை இகழ்வோன்
எம்மை இம்சிப்போன்
அழியட்டும் அணுஅணுவாய்
எனது அறிவும் வீரமும் கூர்மையுறுக
யாருக்கு யான் புரோகிதனோ
அவன் வெற்றி உறுதியாகுக
வடிவம் பலவுடை
இரவுக்கும் பகலுக்கும்
குழந்தை ஆகிறான்
அழகன் எனும் விண்.
அன்னம் பாலிக்கிறார்கள்
இரவும் பகலும் அன்னையர்களாய்
விண்ணெனும் அச்சேயுக்கு. ( கி.ய. 4/183)
——————————————–

Series Navigation