இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

நட்சத்ரவாசி


பனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி

நான் காத்திருக்கிறேன்

பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை

காற்றில் சுழலவிடுகிறேன்

சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து

தனித்திருந்து தியானிக்கிறேன்

குளிர்காலங்களின் இராக்காலங்களில்

அவர்களின் வருகை நிகழக்கூடும்

ஏதொரு முன்னறிவிப்பின்றி

நான் போதையற்று தளும்பும்

திராட்சை ரசத்தை மதுக்கிண்ணங்களிலூற்றி

அவர்களுக்கு விருந்துண்ணக்கொடுப்பேன்

தட்டுகளிலும் கூடைகளிலும் அடுக்கிவைக்கப்பட்ட

காய்கனிகளை உளமார கொடுத்து மகிழ்வேன்

புசிக்கும் அப்பங்களையும்,மாவினாலான

பணியாரங்களையும் நிறைய அளிப்பேன்

பின்னர் கடுங்கதைகள் பேசி

நேரத்தை கழிப்போம்

நெடுந்துயில் வேண்டி படுக்கைகளை

தாயார் செய்துள்ளேன்

அவர்கள் தேவதூதர்கள்

பரிசுத்தமானவர்கள்

அன்னை மரியாவிற்கிரங்கி தேவப்பிரச்சன்னம்

போதித்தவர்கள்

ஓராயிரம் இறக்க்கைகள் அவர்கட்கு

இருக்கக்கூடும்

பிரகாசமான கண்கள்

ஒளிரக்கூடும்

கைகளிலே சின்னஞ்சிறு செங்கோல்கள்

இருக்கக்கூடும்

நான் காத்திருக்கிறேன் அவர்களின் வருகைக்காய்

எவ்வொரு நற்செய்தியை அறியவோ

தேவநிச்சயத்தை தெரியவோ

மாத்திரமின்றி பரிசுத்த இரவில்

தேவனுடனுன் கலந்து போகுதல் பற்றி

வாக்களிக்கப்பட்ட நன்மையை தேவன்

கொண்டுவருவதாய் சொன்ன கனவினை நம்பி

தேவன் வருகை சாத்தியமே

ஆயினும் பரிசுத்த இரவை குறித்து

தேவதூதர்களுக்கு சேதி சொல்லி அனுப்புவான்

இந்த இரவுகளில் நான் உண்பதுமில்லை

நித்திரை செய்வதுமில்லை

விடியும் வரை காத்திருக்கிறேன்

தேவதூதர்களின் வருகைக்காய்

அதன் பின்னர் வாக்களிக்கப்பட்ட நன்மை

அடைந்தே தீரும்

அந்த பரிசுத்த இரவில்

நான் எனை இழக்கும் அவ்வொரு பொழுதுக்காய்

ஆகவே நான் காத்திருக்கிறேன்

தினமும் விருந்தினை ஏற்பாடு செய்து

இராக்காலங்களில் அவர்களின் வருக்கைக்காய்

காத்திருக்கிறேன்.

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

நட்சத்ரவாசி

நட்சத்ரவாசி