கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
கோழிச்சிறகால்
காது குடைகிறான்
காதுக்குள் கவிதை
2
பூட்டிய கோவில்
உள்ளே கடவுள்
சுதந்திரமாய் மனிதன்
3
அப்படியேவா குடிக்கிறாய்
இல்லை
கண்ணீர் கலக்கிறேன்
4
வயல்கிணற்றில்
சுதந்திரமாய்க் குளிக்கிறாள்
காவல் சோளக்கொல்லை பொம்மை
5
உச்சிப்பகல்
பாறை நிழலடியில்
தட்டாரப்பூச்சி
6
போகிறேன் நத்தையே
சந்திப்போம் மீண்டும்
இதே இடத்தில்
7
தீபாவளிக்கு
பழைய டிரஸ் மாற்றும்
சோளக்கொல்லை பொம்மை
8
ராணுவ முற்றுகை
யாருமில்லை ஊரில்
பறவைகள் கூட
9
பொதி சுமக்கும் குதிரை
முன்னால் நடக்கவிட்டு
பின்னால் யோசனையாய் மனிதன்
10
தேன்கூடு கலைந்து
சிந்திய தேனை
ஏந்தும் மலர் ஒன்று
11
சோன்பாப்டி விற்றுவரும்
வண்டிக்காரத் தாத்தா
தலைநிறைய சோன்பாப்டி
12
கராத்தே கத்தலில்
கேட்கவில்லை
பேன்ட் கிழிந்த சத்தம்
13
அரண்மனை அல்ல
என் ராஜ்யம் பெரிது
வெளியேறும் புத்தர்
14
ஈசன் சூடிய
பிறை நிலாவுக்கு
இல்லை பௌர்ணமி
15
கண்கொள்ளா வானம்
கண்மூட
காணாமல் போகும்
16
புயல் வீழ்த்திய மரம்
பொந்துக்குள் உறக்கத்தில்
குருவிக்குஞ்சுகள்
17
யாரது புதிய நண்பன்
கண் திறந்தார் தாத்தா
வந்தது எமன்
18
கிருஷ்ண ஜெயந்தி
காலடிச் சுவடுகள்
உற்றுக் கேள்
19
நிலா வெளிச்சம்
ஊரெல்லாம் நடைபயிலும்
பிச்சைக்காரன்
20
அடடா கோடை
என்னானதோ
பிறந்த ஊர்க் குளம்
21
கச்சேரியில் அம்மா
மடியில் வயலின்
குழந்தையின் அழுகை
22
பாழடைந்த
வீட்டு வாசல்
பூத்துக் குலுங்கும் மரம்
23
மரத்தடி
சருகுகளால் மூடிக்கிடக்கும்
கல்லறை
24
மழைக்காற்று கிளம்ப
எழுந்து திசைபார்க்கும்
தெருநாய்
25
மழை விட்டாச்சு
எப்போது குளித்தாய்
சூரியக் கதிரே
26
சோளக் கொல்லையில்
இயேசுநாதர்
காவல் பொம்மை
27
பனியில் குளித்து வந்து
மலர் அமர்ந்து
மணமேற்றும் பட்டாம்பூச்சி
28
இறங்கி வா
நிலவே
பூத்திருக்கிறது மரமல்லி
29
பாட்டு வாத்தியார்
வாசல் குட்டையில்
தவளைக் கச்சேரி
30
எங்க போயிட்டு வரே
அப்பா கேட்குமுன்
வாசலில் புதிய நண்பன்
31
இளவேனில் எழ
மீண்டும் துளிர்க்கும் மரம்
தலை தடவும் தாத்தா
32
மாடியில் உலர்த்திய
கருவாடு மேல்
பெய்கிறது மழை
33
இருமும் கிழவன்
உத்திரத்துக் குருவி
வெளியே போகும் வரும்
34
இருளையும் ஒளியையும்
கலந்து பிசைந்து
வீழ்கிறது பனி
35
அதிகாலை விடியல்
திறந்திருக்கும் கோயில்
காத்திருக்கும் கடவுள்
36
நதியின் கவலை
கோடை வருகிறது
நீந்திக் களிக்கும் மீன்கள்
37
பசியுடன் குழந்தை
உறக்கத்தில் அம்மா
பாத்திரம் உருட்டும் பூனை
38
உச்சி வெயில்
கோவில் வளாகம்
தனிமையில் கடவுள்
39
மரத்துக்கு வருத்தம்
பறவைகள் கூட்டிவருகின்றன
இரவை
40
துவைத்தது போதும்
வலிக்கிறது
கல்லுக்கு


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்