ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

ரஜித்


ஆண்டுகள்
அய்ம்பதுக்கு முன்
அரிக்கன் வெளிச்சத்தில்
பாரதி படித்தேன்

‘ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோமென்று’

அந்தப் பிஞ்சுவயசு ஆனந்தம்
கிய்யா கிய்யா தாம்பாளம்

அன்று நான் இளைய தலைமுறை
இன்று எனக்குக்கீழே இரண்டு தலைமுறை

திருவிழா வாழ்க்கையில்
தொலைந்துபோன ஆனந்தம்
முதுமையில் வந்தது
என் முதுகேறி விளையாட

இன்று
வாழ்தல் சுமையில்லை
இறத்தல் இழப்பில்லை
கூரை தொட்டுவிட்டன கொடிகள்
இனிக் கொம்பில் குற்றமில்லை
அடிமையாக்கவில்லை நேரம்
அந்நியமாக்கவில்லை உறக்கம்
இனிப்போ உப்போ பத்தியமேதுமில்லை
மறந்துபோனது கண்ணீர்
மறக்காதது காதல்
மத்தாப்பு வெளிச்சமாய்
மனத்தினில் தியானம்
கடமை என்பது
கடவுளை நினைப்பதே

ஆடுகிறேன்
பள்ளுப்பாடுகிறேன்
ஆனந்த சுதந்திரம் இன்று
அடைந்துவிட்டேன்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்