செப்புவோம் இவ்வன்னை சீர்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அ. கி. வரதராஜன்


சீனாவில், நிலநடுக்கத் துயர் துடைப்புப் பணிகளில் பலர் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவை ஞாலத்தின் மாணப் பெரிது. காவல் துறையில் பணியாற்றிவரும் ஒரு தாய், எண்ணிப் பார்க்கவும் இயலாத பெருந் தியாகம் செய்துள்ளார். சீச்சுவான் மாநிலத்தின் நாளிதழ் ஒன்று ஒரு முழுப்பக்கத்தை அவருக்கு ஒதுக்கியிருக்கிறது. ஜியாங் (Jiyang) என்னும் பெயருள்ள அந்த அன்னை சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். தங்கள் உடமைகள் முழுவதையும் நிலநடுக்கத்தில் இழந்ததால் முற்றிலும் -அதாவது, தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூட இயலாத அளவிற்கு முற்றுமாய் – நிலை குலைந்து போன மூன்று அன்னையரின் குழந்தைகளுடன் , அநாதையாகிவிட்ட மேலும் ஐந்து குழந்தைகளுக்கு இவ்வன்னை தன்னுடைய தாய்ப்பாலை அளித்து, போற்றி, பாதுகாத்து வருகிறார். மொத்தத்தில், தன் சிசுவையும் சேர்த்து, நவரத்தினங்களுக்கு இவர் பாலூட்டி வருகிறார்.
வெள்ளையுள்ளத் தாய்க்கு வெண்பாக்கள் , நம் சிறு அர்ப்பணம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வெண்பா. எல்லா வெண்பாவிற்கும் ஒரே ஈற்றடி- “செப்புவோம் இவ்வன்னை சீர்”.

செப்புவோம் இவ்வன்னை சீர்.

அன்னையின் பால்வேண்டி ஆர்ப்பரித்து வாடியழும்
சின்னக் குழந்தைகள் சீனாவில் – தன்னளவில்
தப்பாமல் மார்திறந்தாள் தன்பாலை ஊட்டிட்டாள்
செப்புவோம் இவ்வன்னை சீர். (1)

எத்தனையோ பேர்செய்தார் எண்ணிலா நற்பணிகள்
அத்தனையும் பின்னடையும் அம்மம்மா – முத்தனையாள்
துப்புரவாய் ஆங்கு துறந்தாளே தன்னலம்
செப்புவோம் இவ்வன்னை சீர். (2)

பண்ணிய சேவையும் பாரில் மிகப்பெரிது ,
கண்ணின்முன் காணும் கடவுளிவள் – புண்ணியமும்
இப்புவி செய்ததோ ஈங்கிவள் தோன்றிட
செப்புவோம் இவ்வன்னை சீர். (3)

தன்னுடைப் பிள்ளைக்கும் தாய்ப்பால் தரமறுக்கும்
பெண்ணும் சிலருண்டு பூவுலகில் – எண்ணுதற்கும்
ஒப்பில்லாச் சேவையது ஓசையின்றிச் செய்திட்டாள்
செப்புவோம் இவ்வன்னை சீர். (4)

பேருதவி செய்திடுவாள் பெற்றெடுக்காப் பிள்ளைக்கும்.
கூறுவோம் அத்தியாகம் கோடிபெறும். – யார்புரிவார்
இப்பாரில் ஈதொக்கும் இன்பப் பெருஞ்செயல் ?
செப்புவோம் இவ்வன்னை சீர். (5)

கட்டுடல் ஒன்றே கணக்கிடும் தாய்மாரை
வெட்கித் தலைகுனிய வைத்திட்டாள் – அட்டியின்றிக்
கப்புகளைக் காக்க கணமும் இவள்தயங்காள்
செப்புவோம் இவ்வன்னை சீர். (6)

பீறிச் சுரந்திடும் பேரமுது ஈந்திட்டாள்
வாரி வழங்கிடுவாள் வற்றாது – பாரினிலே
எப்புறமும் இல்லை இணையும் இவளுக்குச்
செப்புவோம் இவ்வன்னை சீர். (7)

“தனமும் எனக்கில்லை தந்து துயர்துடைக்க
தனமுண்டு தாய்ப்பால் தருவேன் – மனமுவந்து
தெப்பமாய் வந்தாள் துயரச் சுழலதனில்,
செப்புவோம் இவ்வன்னை சீர். (8)

மடியில் அமர்த்தி மழலையர் தம்மைக்
“குடியும்” எனவேண்டக் கூசாள் – மடிதிறந்தால்
அப்புறம் போமோ அழகும் ? அயர்ந்திடாள் .
செப்புவோம் இவ்வன்னை சீர். (9)

அ. கி. வரதராஜன் , சிங்கப்பூர். E mail: girijaraju@hotmail.com
(Source : “The Straits Times”, Monday 19th. May 2008)

Series Navigation

அ. கி. வரதராஜன்

அ. கி. வரதராஜன்