கடவுள் வந்தார்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

கவிதா நோர்வே


இன்று என்முன்

கடவுள் வந்தார்…

எத்தனைநாள் தவம்

பலித்தது என்றேன்.

வேண்டியதை கேள்

என்றார்.

புதிதாய் கேட்பதற்கு

எதுவுமில்லையென்றேன்.

நேற்றும், முன்தினமும்

கேட்டவைதான்

வேண்டுமெனக்கு.

மீண்டும்

கேள் என்றார்.

உன்னால் முடியாது

என்றேன்.

சினம் கொண்டார்

வானம் அதிர்ந்தது.

மரங்கள் முறிந்தன

பூமி பிளந்தது.

எங்கும் இருள

பார் எனது

சக்தியென்றார்.

பாவம் நீர்

என்றேன்.

இதைதானே

மனிதனும் செய்கிறான்

இதில் தெய்வ சக்தி

நான் காணவில்லை…

கடைசியாகக் கேட்கிறேன்.

ஒரு முறை

“பூ உதிர வேண்டும்!

பீரங்கிகளில்

தென்றல் புறப்பட வேண்டும்.

துப்பாக்கிகளில்!

ஒன்றாகுதல் வேண்டும்

இனமும் மொழியும்!

கடவுள் ஒன் று போதும ;

எல்லாருக்கும்

சமப்படுதல் வேண்டும்

உயிரும் உருவும் உயர்வும்

உணர்வுகளை இன்னும்

அதிகப்படுத்தும்

மனிதர்களுக்கும்..

உமக்கும்!”

என்றேன்

“நீ என்னை

அசிங்கப்படுத்துகிறாய்”

“எட்டாத பழம்

புளிக்குமோ கடவுளுக்கும்”

“வாக்கில் இனிமை இல்லை

உனக்கு”

“வரங்கள் தாரும் இல்லை

வந்த வழிபோய்விடும்”

கோபத்தில்

என் கண்கள் திறந்தன

கடவுளைக் காணவில்லை

எங்கும் இருள்

இனி வரமாட்டார் அவர்

என் முன்னே

கனவிலும் கூட.


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே