ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

புதியமாதவி, மும்பை


என் கவிதைகள் சாகவேண்டும்
சாகாவரம் பெற்ற
கவிதைகளுக்காக தவமிருக்கும்
எழுத்துலகில்
வேண்டாம் வரம்.
சாகவேண்டும்
என் கவிதைகள் சாகவேண்டும்.

ஹேராம் ..
என் கவிதைகளை
வாழவைப்பதற்காய்
நீ அரசியல்வாதிகளின்
அரண்மனையில்
அடிக்கடி
அவதாரம் எடுக்கிறாய்.

குண்டுமழையில்
இரத்த வெள்ளத்தில்
நனைந்த இரவில்
ஹேராம் ..
என் கவிதைகள்
உனக்கு குடைப் பிடித்தன.

ஹேராம்
உன் ராமராஜ்யத்தில்
நான் எழுதிய
உன் கவிதைகளை
எரித்துவிடு.

(இதோ அன்று நான் எழுதிய
உன் கவிதை..)

ஹே.. ராம்..!
உன் ஜனனம்
ஏன்
சாபக்கேடானது?

நீ-
முடிசூட வரும்போதெல்லாம்
எங்கள் மனிதநேயம்
ஏன்
நாடுகடத்தப்படுகிறது?

ஹே..ராம்..!
கோட்சேயின் குண்டுகளில்
மகாத்மாவின் மரணத்தில்
நீ
ஏன்
மறுபிறவி எடுத்தாய்?

ஹே..ராம்..!
உன் ராமராஜ்யத்தில்
மனித தர்மம்
ஏன்
வாலி வதையானது?

ஹே..ராம்..!
குரங்குகளின்
இதயத்தில் கூட
குடியிருக்கும் நீ
மனிதர்களின்
இதயத்தில்
வாடகைக்கு கூட
ஏன்
வர மறுக்கின்றாய்?

ஹே..ராம்..!
இந்து என்றும்
இசுலாமியன் என்றும்
கிறித்தவன் என்றும்
சீக்கியன் என்றும்
உன் ராமராஜ்யத்தில்
வழங்கப்பட்ட
அடையாள அட்டைகளை
தீயில் எரித்துவிட்டோம்.

ஹே..ராம்..!
எங்களுக்கும்
இனி
அவதார புருஷர்கள்
தேவையில்லை.

ஹே..ராம்..!
உன்னை இன்று
நாடு கடுத்துகின்றோம்..!

ஹே..ராம்..!
இது
தசரதன் ஆணையுமல்ல..
கைகேயி கேட்கும் வரமுமல்ல..
பூமிமகள் சீதை
உனக்கு இட்ட
சாபம்..!!!!.


( 2003ல் வெளியான என் கவிதை நூல் “ஹே..ராம்” கவிதை நூலிருந்து)

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை