சீனக்கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

தமிழில்: ஜெயந்தி சங்கர்


டாங் முடியாட்சிக்கு முற்பட்ட கவிதைகள்
************************************************************

‘லியூ பாங்’கின் (247 – 195 கி.மு)

சண்டமாருதத்திற்கொரு ஒரு சிந்து

ஓ, சண்டமாருதம் எழுந்திட,
மேகங்கள் சூல்கொள்கின்றன.
என் பலம் நான்கு கடல்களையும் தாண்டிப் பரவிட,
இப்போது நான் என் கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறேன்.
எப்படி வீரர்களைப் பெறுவேன்
என் நாட்டின் நான்கு மூலைகளையும் காவல்காத்திட.

***

ஸியாங் யூ (232 – 202கி.மு)

காய்ஸியாவில் ஒரு பாடல்

ஒருகாலத்தில் எதிர்த்திட ஆளில்லாத பலத்துடன்
மலைகளைப் பறித்திடுவேன் நான்.
ஆனால், இப்போதோ காலத்தால் புறக்கணிக்கப்பட்டு,
என் குதிரை ஓடாதினி.
அது ஓடிட முடியாதபோது
நான் செய்யக் கூடியதுதான் என்ன?
ஓ, யூ, என் அன்பு யூ,
அடுத்து உனக்கு எப்படி நான் உதவிட?

*******************************************************************
டாங் முடியாட்சி காலக் கவிதைகள் (618-907கி.பி)
*******************************************************************

ச்சென் ஜீயாங் (661-702கி.பி)

யோவ்ஜோவ் கோபுரத்தை ஏறிடும் போது

எங்கே போனார்கள் பழைய ஞானிகள் எல்லோரும்?
எங்கே வரவிருக்கும் எதிர்காலத் தலைமுறையினர்?
அகண்ட பெரும் மேலுலகையும் பூமியையும் நினைத்திடு,
நான் சோகத்திற்குள் வீழ்கிறேன், கண்ணீர் ஓடையென கீழே வீழ்ந்திட.

***

பாய் ஜுயி (772-846கி.பி)

புற்கள்

புற்கள் நிலமெங்கும் பரவுகின்றன,
செழித்து வளர்ந்து வாடிடும் ஒவ்வொரு வருடமும்.
தீயினால் எரிந்து போய், ஆனால் அழிந்திடாமல்,
மீண்டும் முளைக்கின்றன, வசந்தத்தின் ஊதல் வீசிடும் போது.

***


sankari01sg@yahoo.com

அம்ருதா – ஆகஸ்ட் 2007

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்