புறாவின் அரசியல்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

டீன்கபூர்



குடிபோதையில் ஒரு வேம்பு
காற்றைப் பருகி.
நடுத்தெருவில் விழுந்துவிட
யாரேனும் நடைபாதையாளி
அள்ளி ஒதுக்க அசைந்து நிற்கிறது.
தேர்தல் காலம்.

இது தொழில்
ஆடுவதும் விழுவதும்.
அடியோடு எடுத்து
அதன் தொண்டையில் கயிற்றைவிட
படைத்தவன்; இன்னும் காலம் விட்டிருக்கிறான்.

வளர்த்தவன் இன்னும் விலைபேச
முற்றி முற்றி
இன்னும் வளர்கிறது
ஆயிரம் கிளிகளையும்
ஆயிரம் காகங்களையும் தங்கவைத்து
உணவின் பாத்திரங்களை கழுவிக் கொடுத்திருக்கிறது
வேம்பு.
ஓவ்வொரு தேர்தல் காலமும்.

புன்னகையை வளர்த்தவன்
முகத்தில் தொங்கிய
நிலாவை இறக்கிவைத்து
பூவரம் பூக்களை மலரச் செய்ய
இந்த தேசத்தில் யாரும் இல்லை.
தேசம் கறைகளால் உறைந்துபோய் கிடக்கிறது.
தேசம்?
தேசம்?

பால் தர மறுக்கின்ற பசுக்களின் கால்களால்
உதைபட்டு
தேசம் காயப்பட்டு
பாத்திரம் விசிரப்பட்டு.

போதாத குறைக்கு
புறாவை பிடித்து வந்து
அரசியல் பாடம் நடத்துகிறது உலகம்
கால்கள் முறிக்கப்பட்டும்
இறைக்கைகள் ஒடிகப்பட்டும்
புறாக்கள் அரசியலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டன.
புறாக்களை காதலுக்குப் பயன்படுத்தியவன்
உயரப்பறக்கவிட்டு
சமாதானத்தை பொறுக்கிவரச் செய்வதே விந்தை.

என் பானை நிரம்புகிறது.
என் தோட்டம் சம்பாதிக்கிறது
என் மாளிகை மின்னிக்கொண்டே இருக்கிறது

என் வாக்குகளும்
என் மக்களும்
எனக்காக காத்துக்கொண்டிருக்கும் வரை
புறாக்களைப் பற்றியே சிந்திப்பேன்.
ஆயிரம் புறாக்களை அடைகாக்க
புதிய புதிய
கூண்டுகளை
நிர்மாணிக்க பொறியியலாளர்களிடம்
விண்ணப்பம் கோரப்படுகிறது.

இம்முறைத் தேர்தலில் என்மடி வெடிக்கும்.

டீன்கபூர்


deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை