வீராயி

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

தமிழ் ஒளி


வீராயி

சிதைந்த சேரி.

மழைபிடித்துப் பெய்கிறது ஐப்பசியில் ; ஏழை
மனங்குமுறும் விதம் போலும் இடிக்கிறது வானில்!
தழை பிடித்த மரமெல்லாம் குளிர் பிடித்துப் போக
தலை நீட்ட முடியாமல் பறவையெலாம் அங்கு
விழி மூடித் துணைகளுடன் சிறகணைத்துக் கொண்டு
வேடன் போல் தாக்குகின்ற ஊதலிடைத் துஞ்சும் !
கிழித்தெழுந்து முகில்தன்னைப் புரட்சியுள வேகம்
கீழ்த்திசையும் மேற்றிசையும் காட்டிவிடும் மின்னல்.

நீரோடு நீர் மோதிக் குளமெல்லாம் வழியும்
நெடுந்தூர வாய்க்காலில் பெருகிவரும் வெள்ளம்
வேரோடு செடிகொடிகள் அள்ளிவந்து சேர்க்கும்
‘விதி’ நம்பிக் கத்துகிற வெறுங்கூச்சல் காரர்
ஊரோடு சேர்ந்தூளை யிடுவதனைப் போலே
ஒருபெரிய ஒலிக்கோவௌயிடுந்தவளைக் கூட்டம் !
போரோடும் எரிகின்ற வைக்கோலின் புகைபோல்
புதுமுகில்கள் கூடாரம் அடித்துவிடும் வானில்.

தரையெல்லாம் புரையோடிச் சில்லிட்டுப் போகும்
தாழ்வார மூலையிலே ஆடுடனே மாடும்
ஒருசாணின் அளவினிலே உடல் ஒடுக்கி நிற்கும் !
ஒண்டஇடம் இல்லாமல் ஊரெங்கும் சுற்றித்
தெருவினிலே கையேந்திச் சிறுபிச்சை வாங்கித்
திரிவோர்கள் குறட்டோரம் போய் நின்று மெய்யை
இருகையின் ஆதரவால் காப்பாற்ற முயல்வார் !
எதிர்த்தடிக்கும் சாரலிலே என் செய்வார் பாவம் ?

நொடிக்கு நொடி மழை நூறுநூறு மடங்காக
நொள்ளைவிழி உள்ளும் போய்ப் பாய்கின்ற மின்னல்
இடியுடனே மிக அதிக வேகத்தைக் கொள்ள
இருட்டியது குகைபோலும் எங்கெங்கும் அந்தோ !
நடிப்பன்றி மெய்யறியா உலகிற்கே இன்று
நாசந்தான் கிட்டியதோ! என்னென்று சொல்வேன் ?
அடியெடுத்து வெளியினிலே வைப்பார்கள் இல்லை !
அணைந்ததுவாம் ஊர்முற்றும் அகல் விளக்கு கூட.

காடுவெட்டிக் கழனியெலாம் உழுதுழுது வையக்
காவல் செயும் உழவர்களும் மக்கள் நலம் பேணி
வீடுகட்டி வைத்தவரும், ஆடையெலாம் நெய்து
வீட்டாரின் நாட்டாரின் மானத்தைக் காக்கப்
பாடுபடுந் தோழர்களும், பனிவெயில் யாவும்
படுவதனைத் தடைசெய்யக் குடை செய்து, செக்கு
மாடுகளாய் உழைத்தவரும், வெள்ளத்தில் வீழ்ந்து
மரணத்தின் பின்னோடும் எறும்பாகித் தவித்தார்.

மஞ்சத்தில், பஞ்சணையில் நெஞ்சுவக்கக் குந்தி
மகிழ்பவர்கள் அடைமழையைப் பொருட்படுத்த வில்லை
வெஞ்சுரத்தில் வெள்ளத்தை உண்டாக்குகின்ற
வி9இறுடைய தொழிலாளர் ரத்தத்தின் மேலே
கொஞ்சமுமே கூசாமல் உட்கார்ந்து கொண்டு
கும்மாளம் அடிப்பவர்கள் மழைக்கஞ்சு வாரோ ?
கஞ்சிக்கும் வழியின்றிக் கண்ணீரைச் சிந்தும்
கதியற்ற கூட்டம் கலங்குவதார் கண்டார் ?

சொத்தெல்லாம் விளைத்தவனைச் சுரண்டுதடா வையம் !
சுடர்மாடம் கட்டியவன் வெயிலிடைப் புழுவாய்க்
கொத்தடிமை ஆகின்றான்; ஈதென்ன துன்பம் ?
கோடுயரும் மாடங்கள் மதிற்சுவர்கள் சூழ
செத்தையினை அசைக்காதார் சுகந்துய்த்தல் காணீர் !
சேரியிலே அடடா . . .ஓ ! உழைக்கின்ற கூட்டம்
பொத்தல் மிகும் குடிசையிலே வாழ்கின்றார் ஐயா !
புயல் கிளப்பும் மழையினிலே அவர் என்ன செய்வார் ?

விண்மீன்கள் மொய்த்ததுபோ பொத்தலடா பொத்தல்
வெற்றுடலில் சுற்றுகின்ற கந்தலெனக் கீற்றுக்
கண்களிலே மழையோட்டம் அருவியெனப் பாயும்
கதறியழுகின்றார்கள் ஏழையெலாம் அங்கே !
உண்டுற்ங்கும் மகராசர் காதினிலே இந்த
ஓலந்தான் கேட்டிடுமோ ? இல்லையடா இல்லை !
கண்டிரங்கா நெஞ்சத்தைக் கல்லென்று சொல்வேன்
காட்டுவிஷப் பாம்பென்று நீங்களெலாம் சொல்வீர் !

சுவரெல்லாம் ஓதமடா ; சுற்றிலுமே ஈரம்
‘சோ’ என்று பெய்கின்ற மழையெல்லம் தலையில்
தவிக்கின்றார் பறவையிளம் குஞ்சுகளைப்போலே !
தணல்காணா துறங்குகின்ற அடுப்போரம் ஓடி
சவம்போன்று சில்லிட்ட உடல் சுமந்து நிற்பார் !
‘தட்டடா ; வெட்டடா’ என்னும் இடியோசை !
எவன் நம்மைச் சுரண்டுகின்றான் ? அவனிந்த இன்னல்
இழைத்திட்டான் : ‘விதி’ யென்றே ஏடெழுதி வைத்தான்.

ஏழகளே, பசிப்பிணியில் வறுமையிலே சிக்கி
ஈடில்லாக் கோடையிலும் மழையிலுமே பட்டு
வாழையெனப் பிறருக்குப் பலன் ஈந்து நீங்கள்
வாழாமல் சாகாதீர் ! சத்தியமாய்ச் சொல்வேன் !
‘ கோழை நிலை வெட்டிடடா ; பணக்காரர் ஆட்சி
குப்புறவே கவிழ்த்திடடா’ என்னும் இடியோசை !
தாழையிலே வாழுகின்ற பாம்பு பணக்காரர்
தரித்திரத்தை உண்டாக்கும் கொள்ளை அவர் கொள்ளை !

பஞ்சத்தை முதலாளி கொடுக்கின்ற கூலிப்
பைசாவைத் தலையெழுத்தின் பலன் என்று சொல்லும்
பஞ்சையடா பஞ்சையவர் நெஞ்செல்லாம் நொந்தார்
பச்சையிளம் குழந்தைக்குப் பாலில்லை அண்ணே !
வஞ்சனையே அறியாதார் வாடுகிறார் என்னே ?
வலுவிழந்த குடிசைகளே அரண் செய்யும் சேரி
மிஞ்சிடுமோ அம்மக்கள் பிழைப்பாரோ அய்யா ?
மேற்கினிலே பேரிரைச்சல் தோன்றுவதைக் கேளீர் !

கரைபெயர்ந்து விட்டதுவாம் அவ்வூரின் ஏரி
கடலலை போல் படையெடுத்து வருகிறது வெள்ளம் !
இருட்டினிலே சாக்காட்டை எதிர்நோக்கி விட்டார்
இடுப்பொடிய உழைத்த பலன் இன்றைக்குக் காண்பார் !
குருட்டுலகம் செவிட்டுலகம் கொலைகார உலகம்
கொஞ்சமுமே ஏழகளின் நிலைகருதல் உண்டோ ?
உருண்டதடா குடிசையெல்லாம் வெள்ளத்தின் மேலே
‘ஓ’ என்ற குரலெழுப்பி அழுகின்றார் மக்கள்.

‘கோ’வென்று கதறுகின்ற குழந்தைகளின் ஓலம்
குழந்தைகளை மார்பணைத்த பெண்களலங் கோலம் !
தழுவியுமே அன்பாலே வெள்ளத்துத் தாயைச்
சரண் புகுந்து வையத்துக் கொடுமையினை நீத்தார் !
அழவில்லை பணக்காரர் ஆறறிவு பெற்றார்
அழ்தனவே அந்நேரம் தவளையுடன் பாம்பும் !
அழவில்லை சேரிதனை ஒதுக்கியுமே வைத்த
அன்பரெல்லாம் ; அந்நேரம் அழுததுவே வானம் !

சேரியினைச் சூரையிடும் வெள்லத்தின் மேலே
சிறைப்பட்ட வைக்கொலின் போரொன்று கானீர் !

காரிருளைக் கிழித்ததொரு மின்னல்! அட அந்தக்
கனமிகுத்தப் போர் மேலே இருமனித உருவம்
கூரம்பின் குறிதப்பிப் பிழைத்திட்ட பறவைக்
குஞ்சுகள்போல் நெஞ்சனைத்து வைக்கோலின் போர்மேல்
ஆரவுடல் தழுவியுமே கிடக்கின்றார்; வெள்ளம்
அடித்துக் கொண்டோடுதந்த வைக்கோலின் சுமையை.

இரவெல்லாம் புரண்டோடி ஓய்ந்திட்ட வெள்ளம்
இருங்கடலில் போய் வீழ்ந்து களைப்பாறும் நேரம்
கரம் விரித்துக் கடலலை மேல் ஒளிசிந்திக் கோலக்
காட்சியிலே கண்விழித்துக் கதிரவனும் எழுந்தான்
மருதூரின் சிறு சேரி இருந்த இடம் எங்கே ?
மண்மூடிப்போய்ப் போய்விட்ட கொடுங்கோரக் காட்சி !
குருதியினை வியர்வையெனக் கொட்டியுழைத்தோரின்
குடும்பங்கள் அழிந்தனவாம் கொடுமைக்குத் தப்பி !

வாழ்விதுதான் பொய்யென்றான் காவியுடைக்காரன்
வாழ்விதுவும் போய்யென்று மகராசன் சொன்னான்
தாழ்வதுவும் உயர்வதுவும் தலைவிதியால் என்னுந்
தத்துவத்தைப் பண்டிதனும் சொல்லிவிட்டுப் போனான்
பாழடைந்த சேரிக்குப் பலகதைகள் சொன்னார்
பரிதாபக் காட்சியினை மேற்பூச்சுப் பூசி
சீழொழுகும் கட்டியினைச் சீலையினால் மூடுஞ்
செயல் போன்று நியாயங்கள் ஏதேதோ சொன்னார்.

ஒன்றுமட்டும் உண்மையிதில்; சொல்லுகின்றேன் கேளீர் :
உயிர்வாழ, ஊர்வாழ ஒருபெரிய தேசம்
இன்றுமட்டும் வாழ்வதற்குப் பகலிரவாய் உழைத்த
ஏழல்களை நிர்க்கதியாய் விலங்கினுமே கேடாய்
நன்றியின்றி ஊர்க்கப்பால் நடமாட்டம் அற்ற
நஞ்சொத்த இடத்தினிலே ஒதுக்கியுமே வைத்துக்
கொன்றுவிட்ட இந்நாட்டார் வாழ்வு நிலையில்லை
கொடும்பிரிவு தீரும்வரை நேர்ந்திடு மித்தொல்லை!

பெருந்தொந்திக் காரர்களும் சரிகை தலைப்பாகைப்
பேர்பெற்ற பெரியதனக்காரர்களும் இங்கு
விருந்தருந்தி வாழ்வதற்கு விலாவெலும்பு நோக
விதி நம்பி உழைத்தவர்கள் கதியிதுதான் கண்டீர் !
மருதூரின் சேரியினர் மண்ணோடு மண்ணாய்
மறைந்தனராம் தமிழரசு மறைந்ததனைப் போன்று !
பெரு நாடே நீ அவர்க்குத் தந்த பரிசிதுவோ ?
பிறர்வாழ உயிருதவுந் தமிழ் நாடு நீயோ ?

புல்பூண்டும் மண்ணுள்ளே போய்மறைந்து கொண்டு
பொங்கிவருந் துக்கத்தை அடக்குவன போலும் !
நல்லவரின் மரணம் போல் வருத்தமிகுந் தோற்றம் !
நலமிக்கப் பெருநாடு பேரடிமையுற்றுச்
செல்வத்தை இழந்ததுபோல் நெஞ்சுருகுந் தோற்றம் !
செத்தவர்கள் தமக்கிங்கே ஒரு சொத்துமில்லை !
எல்லாமும் எசமானர் பெட்டியிலே பொன்னாய்
இருப்பதனை இவ்வுலகம் எவ்வாறு நம்பும் ?

வீராயி தப்பினாள்

சேரியிலே எல்லோரும் மறைந்தார்கள் என்ற
சேதியது பரவுகையில் மருதூரின் மேற்கே
தேரினிலே உச்சியினிற் பொம்மையைப் போன்று
சீற்றமது தணிந்திட்ட வெள்ளத்தில் வைக்கோல்
போரிடையே இரு ஜீவன் ! உணர்வேதும் இன்றிப்
பொழிபனிய்ல் நனைந்திட்ட மரம்போன்று கிடந்தார் !
ஊரிடையே செல்லுமொரு வாய்க்காலைத்தொட்டே
ஓடுகின்ற வெள்ளத்தில் மிதந்ததுவாம் வைக்கோல் !

புதுப்பட்டி என்கின்ற பெயருடைய தவ்வூர்
போய்மறிக்கும் பாலத்தின் கீழாக வெள்ளம்
முதுகுதனை நெளித்துக்கொண் டோடிற்று சீராய் !
மொய்வைக்கோல் போரந்தப் பாலத்தில் மோதி
மெதுவாக நகர்ந்தேபின் அசைவேதும் இன்றி
மிகவுயர்ந்து பாலத்தின் மேலுயர்ந்து நிற்கும் !
இது கண்டார் புதுப்பட்டி தன்னிலிருப்போர்கள்
‘என்ன விந்தை’ யென்றோடி வந்தங்கே பார்த்தார் !

இளமங்கை ஒருத்தி, ஒரு கிழவன், இரு ஜீவன்
இலையுதிர்ந்து கிடப்பதுபோல் கிடப்பதனைக் கண்டார்
உளமிரங்கிப் புதுப்பட்டிக்காரர் சிலர் அங்கே
உறுவைக்கோல் போர் மீது முயன்றேறி அந்த
எளியவரைத் தூக்கியுமே வந்தார் ; என்ன
பரிதாபமடா கிழவனுயிர் இல்லை இல்லை !
வெளுத்தமுகம் வெற்றுடலாய்க் கிடந்திட்டான் கிழவன்
மெல்லிழைபோல் மங்கைக்கோ மூச்சு வரும் போகும் !

வேடிக்கை பார்கின்ற கும்பலிலே ஒருவன்
வீரண்ணன் என்கின்ற பறைச்சிறுவன்
கூடிநின்ற மனிதரிடம், ‘ மருதூரின் சேரி ’
குடிமுழுகிப் போனதெனச் சொன்னதெலாம் உண்மை !
ஓடியுமே வந்த வெள்ளத்தில் சிக்கி
உயிர் துறந்த இக்கிழவன் தனை நானும் அறிவேன் !
‘வேடப்பன்’ இவன் பெயராம்; இப்பெண்ணின் தந்தை !
‘வீராயி’ எனும் பெயர்தான் இவள் பெயராம் என்றான் !

வியப்புற்றார் அங்கிருந்தோர்; அடுத்த கனம் அன்னோர்
மெதுவாக நழுவியுமே நடந்திட்டார் என்னே !
பயப்பட்டார், பறையர்களைத் தொட்டெடுத்து விட்டால்
பார்ப்பவர்கள் என்சொல்வார் என்றொதுங்கிப் போனார்
தயைமிக்க இந்து மதம் வளர்த்துவிட்ட எண்ணம் !
தமிழரிடை இத்தீமை விளைத்தவரைக் காணின்
கையிரண்டும் காலிரண்டும் வெட்டி அவர் கண்ணைக்
கழுக்குப் பலியிடுவேன்; என்ன இது நீதி ?

வீரண்ணன் பார்த்திட்டான்; இரக்கமொரு பக்கம்
மேல் சாதிக்காரர்களின் விந்தையொரு பக்கம்
ஈரமிகு நெஞ்சத்தைச் சுமந்தோடலானான்
இரண்டெட்டில் சேரியினைச் சென்றடைந்து கூவி
‘வாரீரோ’ மருதூரின் வேடப்பன் மாண்டு மடிந்திட்டான்;
அவன் மகளோ குற்றுயிராய்ப் போனாள் !
போரான வைக்கோலில் தொத்தியுமே வந்தார்
‘ புறப்படுக!’ எனச்சொல்லி உறவினரை அழைத்தான்.

தாழ்த்தலின்றி வீரண்ணன் தந்தையுமே வந்தான்
‘தம்பி, அவன் நம் குடிக்கே ஒன்றுவிட்ட சொந்தம்
ஊழ்வினையால் நாம் வேறு அவன் வேறு ஆனோம்
ஒருமகளைத் தவிக்கவிட்டு இறந்தானா பாவம் !
மூழ்கியதும் மருதூரின் சிறுசேரி அந்தோ
முதலில் நாம் அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் ;
ஏழ்பிறப்பும் புண்ணியத்தைச் செய்தோர்கள் ஆவோம்;
இப்போதே வா!’ என்றான் விரைந்தார்கள் அங்கே !

அவர்பின்னே இன்னும் சிலர் ஓடிவரலானார்
அடைந்தார்கள் பாலத்தை; வீரண்ணன் தந்தை
கவலையுடன் சென்றதக் காரிகையைத் தூக்கிக்
கடிதினிலே நடந்திட்டான் வீட்டுக்குக் கிழவன்
சவந்தன்னைச் சூழ்ந்தார்கள் சேரிமக்கள்_ பையன்
வெளிப்படுத்திக்கொண்டான் தனதுறவை அவர்களோடு
சுவையில்லா வாழ்க்கையினைத் தொலைத்திட்ட வேடன்
சுடுகாட்டுக்கேகிவிட்டான் சேரியினர் துணையால் !

சாதியிலே தாழ்ந்தவராய் ஏழையரா யிங்குத்
தலைமுறைகள் பலகழித்தும் அடிமைகளா யிந்தத்
தேதிவரை வாழ்கின்ற எளியோர்க்கு வசதி
தேவை; அவர் வாழ்க்கைக்கு காப்பளிக்க வேண்டும் !
நீதிசெய முன்வருவாய்,தமிழ்நாடே நீதான் ;
நிலமுழுது நெல்விதைத்துக் காவலெலாங் காத்து
தீதின்றி நாம் வாழச் செய்கின்ற மக்கள்
திக்கற்றுச் சாவதெனில் மாக்கொடுமை யன்றோ ?

அவர்தானே நம்ஆடு மாடுகளைக் காத்தார் ?
அவர்தானே தானியங்கள் அத்தனையும் சேர்த்தார்?
எவர் மறுப்பார் ? உழைப்பெல்லாம் நாமுறிஞ்சி விட்டோம்
‘எக்கேடும் அவர் கெட்டால் நமக்கென்ன?’ என்று
சுவர்போலும் மரம்போலும் இருக்கின்றோம் நாமே !
தொல்லையெலாம் அவருக்கு; சுகமெல்லாம் நமக்கோ ?
தவருதலே நம் வாழ்க்கைத் தத்துவமாய்க் கொண்டோம்
தக்கதொரு நியாயத்தைச் செய்துவிட வேண்டும் !

பின்னுரை

படிக்காத பாட்டாளிக்கும் படித்துணர்ந்த பெருமக்களுக்கும் பெரும் பள்ளமும் தொலைவும் இருந்து வருகிறது. ஒருவரோடு ஒருவர் நெருங்காமையே _ நெருங்க மனமில்லாமையே _இதற்குக் காரணம்.

மன்பதை உய்ய வேண்டுமானால் இப்பிளவு குறைந்து, மேற்கண்ட இருவருக்கும் இடையில் உறவு _ பாலம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் கலைப்பெருக்கமும் சமுதாய வாழ்வில் உயர்வும் உண்டாகும்.“மக்களின் சந்தையில் இலக்கியம் நடமாட வேண்டுமானால் இலக்கியம் கோபுர உச்சியில் இருந்து குப்பை மேட்டிற்கு இறங்கி வர வேண்டும்” எனும் எண்ணம் உடையவர் கவிஞர் தமிழ் ஒளி .
எனவேதான் அவரது உள்ளம், பெரும்பான்மை மக்கள் அல்லற்படுவதைக் கண்டு வாளாவிருக்க முடியாது, வீராயி என்னும் இக்காவியத்தை எளிய நடையில் உணர்ச்சியோடு இயற்றச் செய்துள்ளது.
வீராயி தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெறும் என்பது எங்கள் துணிபு.

எங்கள் புதுப்போக்கிற்கு நாடு இதுவரை வரவேற்பு அளித்ததைப் போல் இனியும் வரவேற்பு அளிக்கும் என நம்புகிறோம். ( பதிப்பகத்தார்.)

கவிஞர் கூறுவது !.

தமிழ் நாடு இன்றைக்கு எதிர் பார்ப்பது வாழ்க்கையை வளப்படுத்தும் கலையைத்தான்;
கலை கலைக்காகவே என்று சொல்லும் கற்பனைச் சித்தாந்தத்தை அல்ல. சிறு பிள்ளைகளிடம், பலூன்களை ஊதவிட்டு வேடிக்கை காட்டுவது போல் வெறும் உவமைப் பிதற்றலும் கனவுலக மாயா வாதக்கலைகளும் தமிழ் நாட்டை சாவுப்படுக்கையில் வீழ்த்தும் கொடிய தொற்று நோய்களைப் போன்றவை.

நம் கண்ணெதிரே, நம் உடன் பிறந்தான் மாடாக உழைத்துத் தேய்ந்து போகிறான்; அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக் கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப்பிண்டங்களின் உடலில் ‘சுரீர் சுரீர்’ ந்ன்று தைக்கும்படியாக எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.

ஜமீன்களும் இனாம்களும் எண்ணற்ற மக்களை சொந்த நாட்டை விட்டுத் துரத்தியிருக்கின்றன. பணக்கார வகுப்பினர் நடத்தும் கொடிய அடக்குமுறை தாளாமல் பிறந்த நாட்டை ‘கூற்று’ என்று கருதித் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடிவிட்ட ஏழைக்குடும்பங்கள் கணக்கற்றவை.

அதோ செவி மடுத்துக் கேளுங்கள் : கடல் கடந்து சென்ற அந்தக் குடும்பங்களின் கதறல் தேயிலைத் தோட்டங்களிலும் , மலைக்காடுகளிலும், ரப்பர்த் தோட்டங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற தலை முறையில் வாழ்ந்த பாரதி குருதிக்கண்ணீர் வடித்து இதனைப் பாடியிருக்கிறான். உலகின் எந்தப் பகுதியிலும் முதலாளி வர்க்கம் ஏழைகளைக் கொடுமைப் படுத்திக்கொண்டுதான் வருகிறது. ‘பிஜித்தீவை’ எடுத்துக்காட்டாக பாரதி நமக்குக் காட்டினான். அவன் பாதை நமக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது.

எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! உங்களுக்கு ‘வீராயி’ மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். மக்களுக்காக, மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலக முழுவதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும். முடிந்தவரையில் ‘வீராயி’யை ‘ஏழையப்பரின் இதய எதிரொலியாகச் செய்ய முயன்றிருக்கிறேன். முழுதும் வெற்றியடைந்தேனா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

இந்தக் காவியத்தை அழகான முறையில் வெளியிட்டு என் ஆர்வத்தை ஒன்றுக்கு நூறாக உயர்த்தி மேலும் மேலும் வாழ்க்கைக் கலையைப் படைக்க எனக்கு ஊக்கமூட்டிய
தீவிரமிக்க தோழர். மா.சு. சம்பந்தன் அவர்களுக்கு என் உளங்கணிந்த நன்றியும் வணக்கமும் உரியன.

சென்னை,
[குறிப்பு : தமிழ் ஒளி அவர்கள் பிறந்தது “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” “பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும் !” என்று வலியுருத்திய வடலூர் வள்ளல் இராமலிங்க சாமிகள் பிறந்த மருதூர் அருகிலுள்ள ஆடுர் என்ற கிராமம். வளர்ந்தது ,புரட்சியாளர்களுக்கு ரெளத்திரம் பழக்கிய புதுச்சேரி.]

தகவல் தொகுத்தது : புதுவை ஞானம்
j.p.pandit@gmail.com

Series Navigation

தமிழ் ஒளி

தமிழ் ஒளி