காலை புதிது ….. விழிக்கும் மனிதன் ? ….

This entry is part of 27 in the series 20070628_Issue

சக்தி சக்திதாசன்


செங்கதிரோன் தன் கரங்களை விரித்து
செழிப்பொடு விழித்திடும் பூமியைத் தழுவ
பச்சிளைகளின் நுனியில் முத்தாய் மிளிரும்
பனித்துளிகளின் வண்ணம் மிளிர்ந்தே ஜொலிக்க

புதிதாய் பிறக்குது காலையொன்று புவிதனிலே
புதிதாம் இங்கே மலரும் மலர்களும்
பூசிடும் குளிர்மை தென்றலெம் உடலில்
புறப்பட்டது அதுவும் புதிதாய்த் தானே

மரத்தின் கிளையில் மெதுவாய் அமர்ந்து
மனதினில் காலையை ரசித்திடும் குருவி
மாலையின் குளிர்மை இரவினில் வாட்டிட
மேகங்கள் நாடுது பகலவனைத் தேடி

முற்றத்து மண்ணில் முழுதாய்த் தாவி
முனைப்பாய் பாயும் அழகு அணிலும்
முந்திய பொழுதில் புதைத்த விதையை
முழுதாய் சுவைக்கும் அழகிய காட்சி

வசந்தகால இனிமையில் மயங்கி பறக்கும்
வண்ணச்சிறகுடை வண்ணத்திப்பூச்சி
வீசிடும் தென்றலைத் தனக்கெனப் பிடிக்க
விரைந்து பாயும் மரத்தின் கிளைகள்

இயற்கையின் மடியில் தவழும் காலையில்
இவைகள் அனைத்தும் மகிழ்ந்திடும் வேளை
இதயம் முழுவதும் அழுக்குகளைச் சுமந்தே
இன்னும் மனிதன் ஏனோ ஏங்குகின்றான் ? …


sathnel.sakthithasan@bt.com

Series Navigation