பா.சத்தியமோகன்
“அம்பரான் சோமாசி மாறனுக்கு அடியேன்”
– திருத்தொண்டத்தொகை- 5
[சிவயாகங்கள் செய்பவர் “சோமாசி” எனும் பட்டப்பெயர் வழங்கப்பெறுவர்; மாறர் என்பது இயற்பெயர் ]
3628.
ஏராளமான மாமரச்சோலைகள் நிறைந்தது
திருவம்பர் நகரம்
அந்நகரில்
தூய்மை செய்யும் வாய்மையுடைய
வேதங்கள் பயிலும் குலத்தில்
மேம்பட்டு விளங்குபவர் சோமாசி மாற நாயனார்
உலகுக்குத் துன்பம் புரிந்த மூன்று மதில்களையும் எரித்த
இறைவரின் அன்பர்கள் வந்தால்
அவர்களின் திருவடிகள் வணங்கி
அமுதூட்டும் நற்பண்பு மிக்கவர்-
சோமாசி மாறநாயனார்.
3629.
“ஏழுலகங்களின் உயிர்களும் நல்வாழ்வு வாழ
வழியென்பது யாதெனில் –
யாழ் போன்ற
இனியசொல் உடைய உமையின்
ஒரு பாகத்தவரான சிவபெருமானைப் போற்றும்
சிவயாகத்தை
விதிமுறை தவறாமல் செய்வதும்
சிவபெருமானின் மலர்த்திருவடிகளை
வாழ்த்துவதும் ஆகும்”
என்ற கொள்கையுடையவர் சோமாசிமாறர்.
3630.
எத்தகைய தன்மையுடையவராக இருந்தாலும்
ஈசனாகிய சிவபெருமானுக்கு அன்பர் என்றால்
“அவரே நம்மை ஆள்பவர்” என நினைப்பார்
“சித்தம் தெளிவதற்காக
சிவனது ஐந்தெழுத்தையும் ஒதும் வாய்மையே
தினமும் தனது நியமம்” எனப்போற்றும் நெறியில் நின்றார்
3631.
சிறப்பும் ; சைவமெய்த்திருவும் தருகின்ற
திருவாரூர் அடைந்தார்;
ஆரங்கள் விளங்கும் மார்புடைய
அணுக்கத்தொண்டரான
வன்தொண்டரான சுந்தரரிடம் அன்பால் சேர்ந்தார்
பெரு நட்பு பெற்றார்
அங்கேயே தங்கி
மண்ணும் விண்ணும் பணிகிற சுந்தரரின்
திருவடிகளைப் பற்றினார்
3632.
குறும்புகள் செய்யும் ஐம்புலன்களுடன்
ஆறு குற்றங்களையும் வென்ற சோமாசிமாற நாயனார்
“ இப்பிறப்பில்
சைவ நெறி சேர்ந்து உய்யும் விளக்கம் இதுவே”
என முடிவு செய்து
வன்தொண்டர் சுந்தரரின் திருவடி துதித்தார்
நித்தியமான சிவலோகத்தில் வாழும் இன்பம் பெற்றார்
( சோமாசி மாற நாயனார் புராணம் முற்றிற்று )
3633. சுந்தர மூர்த்தி நாயனார் துதி
வயல்களும் நீர்நிலைகளும்
எப்பக்கமும் சூழ்ந்து காணப்படும் திருவொற்றியூரில்
உமை ஒரு பாகமாக
என்றும் பிரியாமல் வாழும் சிவபெருமான்
தன் தோழர் சுந்தரருக்கு
இணையான கொங்கைகள் உடைய சங்கிலியாரின்
அழகிய மென்மையான தோள்கள் கிடைப்பதற்காக
தூது சென்றார்
அத்தகைய ஒருவரான நம்பியின் திருவடிகளையே
நமக்கு காப்பு என்று கொண்டோம்
( வம்பறா வரிவண்டுச்சருக்கம் முற்றிற்று )
7. வார்கொண்ட வன முலையாள் சருக்கம்
40. சாக்கிய நாயனார் புராணம்
“வார் கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்”
( திருத்தொண்டத்தொகை – 6 )
3634.
ஆறுவகைப்பட்ட சமயங்களுக்குத் தலைவர்
அவர்தான் சிவபெருமான்
அத்தகைய சிவபெருமானுக்கு அன்பராகி
சாக்கியர்களின் வடிவிலிருக்கும் தொண்டராகி
சைவ சமயமே மெய் எனும் உறுதி உள்ளவர்
சிவலிங்கம் கண்டு மகிழ்ந்தவர்
உவந்தவர்
அதன்மீது கல் எறிந்தவர்
அதனால்
குற்றம் நீக்கும் இறைவரின் திருவடிபெற்றவர்
அப்படிப்பட்ட
சாக்கிய நாயனாரின் தன்மை போற்றுவோம்
3635.
திருச்சங்க மங்கை எனும் ஊர்
காஞ்சி அருகில் உள்ளது
அங்கு –
முயற்சியுடைய வேளாளர் குலத்தில் பிறந்தார் சாக்கியர்
உண்மைப் பொருள் தெரிந்தார்
உணர்ந்தார்
பல உயிர்களிடத்தும்
அருள் உடையவராக இருந்தார்
“ பிறந்தும் இறந்தும் தொடர்கின்ற
நிலையிலிருந்து நீங்குவேன்”
என சிறந்த ஒழுக்கத்தில் நின்றார்
3636.
அவ்விதமாக வாழ்ந்து வந்த நாட்களில்
மதில்கள் கொண்ட
அழகிய காஞ்சி நகரம் சென்று
உண்மை ஞானம் அடைய
பல வழிகளிலும் முயன்றார்
புத்தரின் பெளத்த சமயவழியில்சேர்ந்து
பிறப்பு அறுக்கும் தத்துவம் குறித்து ஆராய்ந்தார்
3637.
அப்படிப்பட்ட நிலைமையில்
திரிபிடகம் முதலிய பெளத்த நூல்களோ
மற்ற மற்ற சமயங்களின் சார்புகளோ
உண்மைப்பொருளல்ல என்பதை
ஈசர் அருளால் தெளிந்து உணர்ந்தார்
“அளவிலாத சிவநன்னெறியே உண்மை” என
உணர்வு கொண்டார்
3638.
“செய்யும்வினை என்பது வேறு
செய்பவன் என்பது வேறு
அதன் பயன் என்பது வேறு
அப்பயனை ஊட்டுபவன் வேறு
என நான்கு வகைப்படும்”
என்கிற தெளிவும் சிறப்பும்
சைவநெறி தவிர
பிறவற்றுக்கு இல்லை என உணர்ந்தார்
“சிவபெருமானின் துணையால் அடைவது சிவனே!”
என்பதையும் உணர்ந்து அறிந்தார்
3639.
“ எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும்
எந்தக்கோலத்தினை ஒருவர் கொண்டிருந்தாலும்
நிலைத்த சிறப்புடைய
சங்கரனாகிய சிவபெருமானின்திருவடிகளை
மறவாதிருப்பதே உறுதிப்பொருள்” என்று துணிந்து
தாம் மேற்கொண்டிருந்த
பெளத்த கோலத்துடனேயே இருந்துகொண்டு
தூய்மைசெய்யும் சிவலிங்கக்குறியை
மறவாமல்
அன்புடன் கருதி வந்தார் சாக்கியர்
3640.
“ உலகம் யாவும்
தம் வடிவாக உடைய ஈசன்” என்கிற
சொல்லின் பொருளாகி
“சிவபெருமானே முழுமுதல் தலைவன்” என்பதை
அறியாதவர்கள்தான்
தமது கோலத்தை
அவனிலிருந்து “வேறு” எனக்கொண்டு
பொல்லாங்கும் புன்மையும் மிக்க
சாக்கியர்களாக இருப்பார்கள்
“ கரிய நஞ்சுடைய கண்டம் உடைய சிவபெருமானுக்கு
இவ்வுலகம் யாவும் அடக்கம்”என்பதை
உணரும் வல்லமையுடன் சாக்கியநாயனார்
பெளத்த கோலத்துடனேயே
சிவன் மீது
மாறாத அன்பு வழியில் நின்றார்
3641.
கண்ணுக்குப் புலப்படாத அருவ மேனிக்கும்
கண்ணுக்குப் புலப்படும் உருவமேனிக்கும்
மூல காரணமானவர் சிவபெருமான்
நீண்ட நாகம் அணிந்த சிவபெருமானை வழிபட
சிறந்த குறியீடாவது சிவலிங்கம்.
“வெட்கமிலாது தேடிய
திருமாலும் நான்முகனும் காணும்படியாக அருள் செய்து
அவர்கள் நடுவே
விண்ணும் மண்ணும் தொடுமாறு
நெருப்புத் தூணாய் நின்ற வடிவமே சிவமாகும்”
என்பதைத் தெளிந்து அறிந்து கொண்டார்.
3642.
“நாள்தோறும்
சிவலிங்கத்தைக் கண்டபின்தான்
உணவு உண்ண வேண்டும்” என விரும்பினார்
அருகில்
ஒரு வெளியிடத்தில்
நிலைபெற்று நின்ற சிவலிங்கத்தைக் கண்டார்
மனம் மிகுந்த களிப்பு பெற்றது
களிப்பு நிலை அவரை ஆட்கொண்டது
இன்ன செயல் என அறியாதவராய்
பக்கத்திலிருந்த கல்லினை எடுத்தார்
பதைப்போடு
அதனையே மலராகக் கருதி
சிவலிங்கம் மீது எடுத்து எறிந்தார்.
3643.
அகம் நிறைந்த பெருமகிழ்ச்சியால்
அளவற்ற அன்புடன்
தம் குழந்தையைக் கொஞ்சுபவர்கள்
அக்குழந்தை
தனது வலிமையான செயல்களால்
இகழும் காரியத்தைச் செய்தாலும்
அதன் மூலம்
அக்குழந்தைக்கு இன்பமே தவிர துன்பம் இல்லையென
நீள் சடையாராகிய சிவபெருமான்
மகிழ்ந்தே இருந்தார்.
3644.
கல்லால் தொழுத அந்த நாள் போனது
பிறிதொருநாள் வந்தது
கொன்றை மாலை சூடிய சடையாராகிய இறைவன் முன்பு
இறைவர் மீது கல் எறிந்த குறிப்பை நினைத்தார்
உணர்வு ஒன்று வந்தது
“இது சிவபெருமானது அருளே” எனத் துணிந்து
அதையே தொண்டாக மேற்கொண்டுவிட்டார்
தினமும் அவ்வாறே செய்ய நினைத்தார்.
3645.
கல் எறியும் செயல் தொடங்கிய நாளிலிருந்து
இடைவிடாமல்
தொடர்ந்து செய்ய எண்ணினார்
பெளத்தர்களுக்கான
துவர் ஆடையையும் விட்டுவிடவில்லை தவிர்க்கவில்லை
“பசுபதியாகிய சிவபெருமான் செயலே இது” எனும்
உணர்வுடன் விளங்கினார் –
மாதவராகிய சாக்கி நாயனார்.
3646.
இந்த நியதியை
பரிவோடும் அன்போடும் தவறாமல் செய்து வந்தார்.
அச்செயல்
திருத்தொண்டாகக் கருதப்படும் தன்மையை
சொல்வோமெனில்
“உண்மையான அன்புடன் தொடங்கிய செயல்
தூயவரான சிவபெருமானுக்கு
சிறப்பான பூசையே ஆகும்”
3647.
“கல்லால் எறிந்த செயலும்
அன்புதான்” என்பதைஆராய்ந்தால்
வில்வேடரான கண்ணப்பரின் செருப்புப்பாதம்
இறைவரின் திருமுடியில் படிந்த தன்மையை ஆராய்ந்தால்
நல்லவரான
அவரது அன்பின் செய்கையை
மற்றவர்கள் கல் என்று கூறுவர்
அரனாகிய சிவபெருமானோ மலர் என்றே கருதுவார்.
3648.
ஒருநாள்
இறைவர் அருளால்
தமது வழக்கத்தை மறந்துவிட்டு
உணவு உண்ணத் தொடங்கிவிட்டார் சாக்கியர்.
“எம் பெருமானை
கல் எறிந்து வழிபடாமல் மறந்தேனே”
என எழுந்து
மேலும் மேலும் பொங்கிய காதலுடன்
பெரு விருப்பத்துடன்
மிகவும் விரைந்து புறப்பட்டு
கொடிய யானையினது தோலை உரித்த இறைவரின்
திரு உரு முன் சென்றார்
3649.
அங்கு கிடைத்த ஒரு கல் எடுத்து
வழிபாட்டின் நோக்கத்தை நிறைவேற்ற
அவர் வீசி எறிந்தார்
உணவு உண்ணும் செயலையும் விட்டுவிட்டு
அச்சத்துடன் ஓடி வரும் சாக்கியர் மீது
அருள் பொழிவதற்காக
அத்தொண்டரின் எதிரே
பெரிய வானில்
துணைவியான உமையுடன் தோன்றினார் சிவபெருமான்
3650.
இளமையுடைய காளைமீது எழுந்தருளி வந்த
ஒப்பிலாத செய்கையால்
இறைவரின் திருவடியைக் கண்டு தொழுதார் –
திருத்தொண்டர் சாக்கிய நாயனார்
நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்தார்
அவரை
சிறப்பு மிகு சிவலோகத்தில்
பழைய அடிமைத் திறத்தை
பரமராகிய சிவபெருமான் அளித்தார்
அருளினார் மறைந்தார்.
3651.
நாள்தோறும் கல்வீசி எறிந்து
ஆதியாகிய சிவபெருமானை அடைந்த
குற்றமிலாத திருத்தொண்டர் சாக்கிய நாயனார்
எண்ணி வழிபட்ட குறிப்பை
குறிப்பை அணிந்து
அவருக்கு அருளினார் சோதியாகிய சிவபெருமான்
இதனைச் –
சோதியராகிய சிவபெருமானே
நமக்கு உணர்த்தியுள்ளார்
அவர் தம் திருவடிகளைத் தலைமீது சூடி –
சிறப்புலி நாயனாரின் வரலாறு கூறத்தொடங்கி
தீமை நீக்கப் பெற்றேன்
( சாக்கிய நாயனார் புராணம் முற்றிற்று )
41. சிறப்புலி நாயனார் புராணம்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
– (திருத்தொண்டத் தொகை – 6 ) .
3652.
திருவாக்கூர் என்பது பழமை மிகு ஊர்
பொன்னி எனும் காவிரி பாயும் சோழநாட்டின் ஊர்
“இல்லை என வறுமையால் இரந்து செல்பவர்க்கு
“இல்லை எனச் சொல்லாமல்
அளிக்கும் தன்மை கொண்ட வேதியர்கள் வாழும் ஊர்” என
சண்பை நகரான சீகாழியின் தலைவர் ஞானசம்பந்தர்
அருளிய பெருமை உள்ளது திருவாக்கூர்.
3653.
அந்த ஊரில்
தூய்மையான மலர்ச்சோலைகள் எங்கிலும்
சுடர்விடும் மாளிகைகள் எங்கிலும்
மாமழையின் முழக்கம் தோற்கும்படி
வேத ஒலிகள் முழங்கும்;
அழகிய வீதிகளில்
அகில் புகை தூபத்தின் மணம் குறையும்படி
ஓமங்கள் செய்யும் வேள்விச்சாலையின்
ஆகுதிப்புகை மேலோங்கும்.
3654.
திருவாக்கூர் எனும் அத்தலத்தில்
கமுகுமரங்களே வேலிபோல
கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும்;
அந்த ஊரில்
உலகம் தழுவிய புகழ் மிக்கவர் –
நான்கு வேதங்கள் ஓதும் குலத்தில் தோன்றியவர்-
சிறப்புலிநாயனார்;
நஞ்சுண்ட கண்டத்தையும்
எட்டுத் தோள்களையும் உடைய கூத்தப்பெருமானின்
திருத்தொண்டினைச் செய்கின்ற
சிறப்புத்தன்மை உடையவர்- சிறப்புலி நாயனார்.
3655.
உலகங்கள் அனைத்தும் ஆள்கின்ற சிவபெருமானின்
அன்பர்கள் வந்தால்
அவர்களது காலடியில் தாழ்ந்து வணங்குவார்;
அன்பு பொங்கும் இனிய சொற்கள் கூறுவார்
நாள்தோறும் நல்லமுதம் அளிப்பார்
அதனால்
மேலும் மேலும் நீள்கின்ற இன்பத்தில் வாழ்ந்தார்
செல்வத்தை மழைமேகமெனப்
அன்பர்களுக்குப்பொழிந்தார்.
3656.
பஞ்சாட்சரமான ஐந்தெழுத்து ஓதினார்
மூன்று விதமான தீ வளர்த்தார்
நல் வேள்விகள் யாவும் செய்தார்
நஞ்சு அணிந்த கண்டரான சிவபெருமான் பாதத்தை
சேரும் வண்ணமாகவே செய்தார்
என்றும் குறைவுபடாத
சிவபெருமானின் அடியார்களுக்கு
இடைவெளியே இல்லாத அன்புடன்
வள்ளல்தன்மையுடன் செயல்புரிந்தார்
இறைவனின் திருவடி நிழலில் தங்கிடப் பெற்றார்.
3657.
சிவ அறங்கள் மிகுந்த –
மேன்மையான அந்தணர்கள் வாழும் ஆக்கூரில்
தோன்றிய வேதத்திலும்
வள்ளல் தன்மையிலும் சிறப்பு மிகுந்த
சிறப்புலியார் திருவடி வணங்கி
திருசெங்காட்டங்குடியில் சிறப்புடைய
“சிறுதொண்டர் நாயனார்” செய்த
திருச்செயல்களைக் கூறத் துவங்குகிறேன்.
(சிறப்புலி நாயனார் புராணம் முற்றிற்று)
–இறையருளால் தொடரும்
- பெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்
- காதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக !
- தன்னை விலக்கி அறியும் கலை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12
- இலை போட்டாச்சு! – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி
- லைஃப் ஸ்டைல்
- நாணயத்தின் மறுபக்கம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)
- சதாரா மாலதி மறைவு
- இந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)
- கரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்
- நற்குணக் கடல்: ராம தரிசனம்
- எழுத்தறிவு அற்றவர்களின் எண்ணறிவு
- பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி
- அன்புடன் கவிதைப் போட்டி
- அலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- கலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்
- குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….
- அம்பையின் எழுத்து
- மாத்தா-ஹரி அத்தியாயம் -3
- திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்
- கனவுக் கொட்டகை
- தைத்திருநாள் விழா கவியரங்கம் – 5
- புல்லாங்குழல்களின் கதை
- பூப்பறிக்கும் கோடரிகள்
- நீர்த்திரை
- குடும்பம்
- கவிதைகள்
- சிண்டா
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்
- சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்
- கிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!
- புரு
- நீர்வலை (17)
- மடியில் நெருப்பு – 31