சுடரின் மௌனம்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

யாழினி அத்தன்


இறைவன் என்றொரு தச்சன்
இரவெல்லாம் கண்விழித்து
இழைத்து இழைத்து
செதுக்கிய வீணையொன்று
செவிடன் கையிலே சிறைப்பட,
மௌனமாய் அழுது நிற்கும்
கம்பியிழையின் விசும்பல்கள்
எவர் காதினிலும் விழுவதில்லை!

காதலிக்கும் போது
காமதேனுவாய் ஜொலிப்பதும்
கல்யாணத்துக்குப் பின்
அடிமாடாய் போவதும்
மூன்று முடிச்சு கயிற்றுக்கும்
மூக்கணாங்கயிறுக்கும்
வித்தியாசம் அறியாதவன்
வண்டியை ஓட்டும்போது!

யாக சோதியை முன்வைத்து
ஓதிய வேத மந்திரங்கள்
காயப்பட்ட போது
தூர நின்று வேடிக்கை பார்க்க,
கல்யாணத்திற்கு சாட்சியாக
நின்ற கடவுள்கூட
பதிலேதும் சொல்லாமல்
ஊமையாகிப் போனான்!

முன்னொரு பொழுதில்
உன்னை இசை பாடிய
அதே உதடுகள் இன்று
ஓயாமல் வசை பாடினாலும்
மெழுகுவர்த்தியாய்
நீ எரிந்து கொண்டிருப்பது
விசிறிக்கடியில் வீடே
சுகமாக உறங்கத்தானென்று
யாருக்கும் புரியவில்லை!

படிப்பு, வேலை,
நண்பர்கள், உறவுகள்
பெற்றோர், எண்ணங்கள்
என வரம்பில்லாமல்
தியாகம் செய்துவிட்டு
கனவுகளோடு நுழைந்தாய்
புகுந்த வீட்டின் தீபம் எரிய…
இலவம் பஞ்சான
உன் நெஞ்சினிலே
பற்றிய நெருப்பை
அணைக்க யாருமில்லை!

பெண்ணே…

உன் விழியோரம்
திரண்டோடக் காத்திருக்கும்
உருண்டைத் துளியில்
உப்பாகக் கரைந்திருக்கும்
சோகங்கள்
நிலவின் வழி
கைநீட்டும்
கருமேகங்களாக…

ஏங்கிக் தவிக்கும்
இருட்டுக்கள்
உன் ஒளிக்காக…
கரம் பட்டு
துவண்டு எழுவோம்
என்ற நம்பிக்கையோடு!


(செய்தி: பெண்களை அடிப்பதில் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.)
p.d.ramesh@gmail.com

Series Navigation

யாழினி அத்தன்

யாழினி அத்தன்