இடம்பெயராப் பெயர்வு

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

சாமிசுரேஸ், சுவிஸ்



நெஞ்சுப் பற்றைக்குள் நெருப்பெரிகிறது

நிழலைத் தன் கிராமத்தில்
அறுதிமணலில் புதைத்துவிட்டு
பெருவிரல் போகும் திசையில் அசைகிறார்கள்
போகுமிடம் தெரியாது.

மயானத்தை தலையில் சுமந்தபடி
கைநிறைந்த வலிகளுடன்
கூன் விழுந்த கண்களில்
இரத்தப்பூக்கள் பூத்திருக்க
காற்றைத் ஊடுருவிய பெருமூச்சொடு
வழி மிதித்த கால் விழிகளின் நடப்பில்
நிலம் அதிர்கிறது.

புற்களின் சிலும்பலிலும்
மெய் குழைந்து நடுங்குகிறது
நெடுஞ்சாலை வழியே
நீறுபூத்துக் காத்திருக்கிறது விதி.
சுடுநீரைக் கக்கிக்கொண்டிருக்கின்றன
ஒற்றையடிப்பாதைகள்.
போகுமிடம் புரியாது.

நுண்ணியமான கணப்பொழுதொன்றின்;
சிதைவுச்சிதறல்கள்
ஏதோவொரு துடிதுடிப்பில் தெறித்தியங்க
பழுப்பேறி மரத்துப்போன அசைவுடன்
உடலின் இயக்கம்.

வழிக்கு வழி கொட்டிக்கிடக்கிறது உயிர்.

விடங்கொண்ட காலமுடச்சக்கரத்தின்
குறுகிய மேல்பரப்பில்
ஐம்பூதங்களின் அதிகார நர்த்தனம்.

நாம் வாழாவெட்டிகள் ஆகும்வரை
நீங்கள் வரலாற்றைச் சப்புங்கள்.

உணர்வுகளைத் துடைத்தெறிந்துவிட்டு
உருக்குலைந்த பிணங்களாய்
ஊரான ஊர் தேடி நடைப்பயணம்
திரும்பி வரும்போது தேசவெளி இருக்குமா.

தொடுவானம் நோக்கி
விடியலுக்கான நாக்குலர்ந்த நடை.
என் செய்குவோம் வான் தெரியாக்கருமை.
கண்ணருகில் தொடுபுள்ளி.

கிழக்குப்பக்கம் நிலவு எரிக்கிறது
வா குளிர்காயலாம்.


sasa59@bluewin.ch

18.03.2007

Series Navigation

சாமிசுரேஸ்,சுவிஸ்

சாமிசுரேஸ்,சுவிஸ்