மறு நடவு

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

அகரம் அமுதா


அப்பன் குறும்பாலே
அன்னையினுள் முதல் நடவு
தொப்பூழ் கொடியவிழத்
தொட்டிலிலே மறு நடவு

தாய்மொழியக் கற்கின்ற
வாய்மொழி முதல் நடவு
தாய்மொழியாய் பின்னாளில்
வாய்த்தமொழி மறு நடவு

பிள்ளையினுள் வெள்ளை மனம்
பேரிறைவன் முதல் நடவு
கள்ள குணம் ஆசை மனம்
காலத்தின் மறு நடவு

பள்ளியிலே பாடங்கள்
பாலகனில் முதல் நடவு
பள்ளியறைப் பாடங்கள்
பருவத்தின் மறு நடவு

எண்ணத்தை நெஞ்சுள்ளே
எழுதுதல் முதல் நடவு
கண்துஞ்சும் வேளைவரும்
கனவுகள் மறு நடவு

உற்றுணர்ந்த யாவையுமே
உள்ளத்தில் முதல் நடவு
கற்பனையில் கண்டெடுக்க
காகிதத்தில் மறு நடவு

எமுத்துக் கல்வியினால்
இமை திறத்தல் முதல் நடவு
பழுத்த அனுபவத்தால்
பார்வைபெறல் மறு நடவு

வயதில் செய்கின்ற
வன்முறைகள் முதல் நடவு
வயதானப் பின்னாலே
வளைந்து கொடல் மறு நடவு

பிள்ளையில் தாய்கரத்தைப்
பிடித்துலவல் முதல் நடவு
தள்ளாடும் முதுமையிலே
தடியூணல் மறு நடவு

கருவறையில் முதல் நடவு
கண்ணறையில் கையணைப்பில்
இருப்பதெல்லாம் மறு நடவு
இறப்(பு)அது அறுநடவு!


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா