படு-களம்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

சிவகாசி திலகபாமா


எழுத்தின் சுதந்திரம் சொல்லி
நண்பனானாய்

பெண்ணில்லையடி நீ ஆணென்று
தோளில் கை போட்டாய்

பாலியல் சனநாயகம் பேசி
நிகழக் கூடாதெனும் தருணத்தில்
நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய்

மடியில் கட்டியிருந்த
உண்மைப் பூனையை
இனியும் மூட முடியாது
வளைய வர விட்டாய்

கட்டிலின் கால்களுக்கு பின்
விலங்கு போட்டு
எனக்குத் திரையும் இட்டாய்

அந்யோன்யங்களுக்கிடையே
எல்லாம் தந்தும் பெற்ற பின்
அழகை தின்று அறிவை மறைத்து
நீ ஆணாகிப் போன தருணத்தில்
என் சமதளங்களை உடைத்து
பள்ளத்துள் உனைத் தள்ளி
சிலுவைகள் நடுகின்றேன்

உச்சி மலையில்
தென்றல் மட்டுமே
எனைத் தழுவ அனுமதித்து

குருத் தோலை திருநாளெல்லாம்
புதிய சிலுவைகள் நடப் பட்டு
ஆண்கள் அறையப் பட்டு
காதலோடு வழி மீள

படுக்கையறை எல்லாம் நிராகரித்து
போர்பயிற்சிக் களம் ஆக்கி
கட்டிலின் கால்களில் கத்தி செய்கிறேன்

பெண்கள் காதலில் எப்பவும்
காதலர்களாக “ஆண்கள்”
இல்லாது போக


mathibama@yahoo.com

Series Navigation

சிவகாசி திலகபாமா

சிவகாசி திலகபாமா