நன்றிக் கடன்

This entry is part of 33 in the series 20061228_Issue

ரஜித்கொடையாளியாம் எம் முதலாளியால்
குடிநுழைவு கடந்து குடிமகனானேன்
நன்றிக் கடனாக நானென்ன செய்தேன்

பாத்திரம் கழுவும்போதே
பனிக்குடம் உடைந்தது
கர்ப்பினி மனைவிக்கு
தாதியாய் மாறி பாதி வலி சுமந்தாள்
பக்கத்து வீட்டு சீனத்தாய்
நன்றிக் கடனாக நானென்ன செய்தேன்

வீடொன்று வாங்க
உத்திரவாதமாய் ஓரிரு பேர்
வங்கிகள் கேட்டபோது
வலையில் சிக்கிய கொக்கானேன்
நண்டென நண்பர்கள் துண்டித்தனர் வலையை
விடுதலையானேன் வீடு வாங்கினேன்
நன்றிக் கடனாக நானென்ன செய்தேன்

பிள்ளைகளின் கல்வி கல்யாணம்
வங்கிகள் தந்த டிங்கிகள்
என்றெல்லாம்
முதுகு தாங்காச் சுமைகளுக்கு
முட்டுக் கொடுத்த நட்புக் கெல்லாம்
நன்றிக் கடனாக நானென்ன செய்தேன்

அங்கத் தந்த அன்னை
சாயல் தந்த தந்தை
அ ஆ தந்த ஆசான்
உதிரங்களென உடன்பிறந்தோர்
மண்ணுடலின் பாதி மனைவி
வாழ்க்கைத் தடம் தந்த வாரிசுகள்
நன்றிக் கடனாக நானென்ன செய்தேன்

கேள்வியாய் பதிலாய்
வாதியாய் எதிரியாய் நீதிபதியாய்
மனசாட்சி மட்டுமே பேசும்
வழக்கொன்று நடக்கிறது எனக்குள்ளே


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation