தொலைதூர மகளோடு தொலைபேசியில்

This entry is part of 25 in the series 20061130_Issue

ரஜித்தீபாவளிக்கு அனுப்பிய
ஆடைகளெல்லாம்
கிடைத்ததா மகளே?

கிடைத்ததப்பா
பிரித்தபோது
என் தொட்டிச் செடிகளின்
மொத்த மொட்டுக்களும்
முகம் மலர்ந்ததப்பா

நீ இல்லாமல்
ஓடிழந்த ஆமையென
ஆனோமம்மா
காகிதத்தில் உயிர் கசிய
கண்மணியில் உப்புக் கசிய
நாங்கள் எழுதிய
வாழ்த்துச் செய்தி
படித்தாயா மகளே

படித்தேனப்பா
உங்களிடம் மட்டும் தானப்பா
வானவில் வயலின் இசைக்கிறது
ம் ம்
ஒன்று கேட்கலாமா அப்பா

மண்ணின் அனுமதி
மழைக்குத் தேவையில்லை மகளே
கேள்

இந்தக் கலிபோர்னியாவில்
கதவுகளை மட்டுமல்ல
சாளரங்கள்கூட சாத்தியேதானப்பா
ஆறுமணிமுதல் ஆறுமணிவரை
அவருக்கு வேலை
தொலைக் காட்சியும்
தொலைபேசியும் இன்றேல்
தொலைந்திருப்பேனப்பா
எனக்காக அம்மாவை இங்கு
அனுப்பமுடியுமா அப்பா

மகளே
உயிரைப் பிழிந்து கேட்டால் தருவேன்
பிளந்து கேட்கிறாயே
சத்தியமாய்ச் சொல்கிறேன்
செத்துவிடுவேனம்மா

Series Navigation