கீதாஞ்சலி (101) பாடம் புகட்டும் கீதங்கள்!

This entry is part of 25 in the series 20061130_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன்னிசைக் கீதங்கள் மூலமாகவே
நின்னைத் தேடி வருகிறேன்,
என் வாழ்க்கையில்
எப்போதும்!
வீடு வீடாய்ச் சென்று வினாவித்
தேட வைத்தவை எனது
பாடல்கள் தான்!
என்னை நானே உணர்ந்து கொள்ளவும்,
என்னுலகின் மீது நடமாடித்
தேடி அறியவும்,
நானிசைத்த கீதங்கள் தான்
நடத்திச் சென்றன!
எப்போதும் நான்,
கற்றுக் கொண்ட பாடங்கள் எனது
கானத்தின் மூல மாகவே!
அந்தரங்க வழிகளைக் காட்டின,
எந்தன் கீதங்கள்!
என்னிதய அடிவானில்
எண்ணற்ற விண்மீன் காட்சியைக்
கண்முன் நிறுத்தின!
இன்ப துன்பங்களின்
அன்றாட உலக மர்மங்களை
ஒன்றாகப் புரிந்து கொள்ள,
என்றும் வழி காட்டின!
இறுதியாக
அந்திப் பொழுதிலே
எந்தன் பயணத்தின் முடிவிலே
என் கீதாஞ்சலி,
என்னைத் தூக்கிக் கொண்டு
வந்திருப்பது
எந்த அரண்மனையின்
வாயிலுக்கோ?

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 27, 2006)]

Series Navigation