பெரியபுராணம்- 111 – 35. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

பா.சத்தியமோகன்


3153.

மிக்க வளமும் புகழும் உடைய

சோழமன்னர்க்குரிய நாட்டிலே

நிலவும் பக்கங்களில்

பொன் கொழிக்கும் காவிரியின் வடகரையில்

கிழக்குத் திசையிலே

ஆடும் பூங்கொடிகளும்

மாளிகைகளும் நிறைந்து

பெருமையும் அழகும் மிகுந்து

காணப்படும்நகரம் –

திருப்பெருமங்கலம்

3154.

அங்கு

மதில்கள் சூழ்ந்தகோட்டைகளில் உள்ள

ஏவும் அறைகள்

எந்திரவரிசைகளால் சூழப்பட்டிருக்கும்

மலைபோல் உயர்ந்த அழகிய மாடங்கள்

மேகங்களால் சூழப்பட்டிருக்கும்

நஞ்சின் தன்மை சூழ்ந்த கண்களையுடைய மங்கையரின்

நளின மெல்லடிகளில் உள்ள செம்பஞ்சுக்குழம்பு

இளம் காளையரின்

முடி மயிர்களின் பரப்பில் சூழ்ந்திருக்கும்.

3155.

ஒளி விளங்கும் அழகிய வீதிகள்-

விழாக்களையுடன் உள்ளன

அடர் கூந்தல் மங்கையரின் நடன அரங்கங்கள் –

முழவின் ஒலியுடன் உள்ளன

மங்கலம் விளங்கும் அழகிய முற்றங்கள்-

சிறுவர்களுடன் உள்ளன

செழுமையான பெருங்குடிகள் –

உழவுத் தொழிலின் வளமையுடன் உள்ளனர்

3156.

பெருமங்கலம் எனும் அவ்வூரில்

கங்கை நீரால் விளங்கும் சடைமுடியும்

நெற்றிக்கண்ணும்

மேகம் போன்ற கரிய கழுத்தும் கொண்ட சிவபெருமானின்

அடியவர்கள் ஒன்று கூடுவர்

பாரில்

ஒப்பிலாத பெருமையால்

பரமரின் திருவடிகளை வணங்கும் சிறப்பு பெற்றது

அச்சிறப்பால் அவ்வூர் –

சிவபுரி என அழைக்கத் தக்கது.

3157.

இத்தகு தன்மையுடன் கூடிய அந்தப்பதியில்

ஏயர்கோக்குடியானது

நிலைபெற்று

வழி வழியாக வளர்ந்து வரும்

சோழர்களின்

படைத்தலைவர் குடியாகிய தொடர்ச்சி அது.

தொன்று தொட்டு வரும் தொடர்ச்சியால் விளங்குவது அது

தூய்மையுடைய காவிரி நாட்டில்

வேளாண்மையில் உயர்ந்த

அணிநலம் வாய்ந்தது.

(ஏயர்- குடிப்பெயர்; கோ- தலைமை குறித்தது)

3158.

பெருமை மிக்க

அந்தக்குடியில் அவதரித்த

கங்கை வாழும் சடைமுடி உடைய

சிவபெருமானின் தொண்டர்

கலிக்காமர் எனப்பட்டார்.

நாயகரான இறைவரின் அடி பணிந்து சார்ந்து

பொங்கும் காதலினால்

அடியவர்களாக வாழ்பவரின் பணியைக்

போற்றி வணங்கிச் செய்து வந்தார் கலிக்காமர்.

3159.

புதிதாய்த் தோன்றிய பிறைமதிச்சந்திரனை

இறைவர் சூடிய திருப்புன்கூருக்கு

அதிகமான திருப்பணி பலவும் செய்து வருபவர் கலிக்காமர்

“திருநீற்றை விரும்பும்

சிவபெருமானின் திருவடியே நமக்குச் செல்வமாகும்” என்று

துதிகளால் பரவிப்போற்றி

இன்பம் அடைந்து வருபவர் கலிக்காமர்.

3160.

திருநாவலூர் மன்னரான நம்பி ஆரூரர்

சிவபெருமானைப் பரவையாரிடம் தூது விட்டதற்கு

“இவ்விதம் இச்செயல் புரிந்தது எவர்!” என்று குறை கூறினார்.

தேவதேவரான தம்பிரான்

அவர் கருத்தைத் திருத்துவதற்காக

அதற்குப் பொருந்துமாறு செய்த

அந்த அருட்செயலை விளம்புகிறவன் ஆகிறேன்.

(தம்பிரான் – சிவபெருமான்)

3161.

திருநாவலூரில் தோன்றியவரான சுந்தரர்

திருத்தொண்டத் தொகையான திருப்பதிகத்தைப் பாடிய பின்பு

மனம் ஒன்றுபட்ட விருப்பத்தினால்

காதலினால்

பொன் மதில் உடைய திருவாரூரில் எழுந்தருளிய

தியகராசப்பெருமானின் திருவடிகளை

நாள்தோறும்

உருகிய உள் அன்போடு பணிந்து வணங்கி

மென்மேலும் எழுகின்ற உண்மை அன்பினால்

நீங்காமல்

அங்கு(உறைந்து)

தங்கியிருந்த நாளில் –

3162.

தமது தாளாண்மையால்

உழவுத்தொழிலில் வரும் வளங்களால் தலை சிறந்த

குண்டையூர் கிழார் எனும் மேன்மையுடைய ஒருவர் –

ஒளிமிக்க வெண்மதி அணிந்த சிவபெருமான்

அந்தணராக வந்து

வழக்கினில் ஆட்கொள்ளப்பட்ட

நம்பி ஆரூரரின் திருவடிகளைச் சார்ந்து

அன்பு பூண்டு ஒழுகினார்

3163.

செந்நெல்லும்

பொன் போன்ற செழும் பருப்பும்

இனிய கரும்பான நல்ல அமுதும்

இன்னும் பல உள்ளிட்ட

எண்ணிலாத பெரும் வளங்களையும்

நிலை பெற்ற சிறப்பு கொண்ட

வன்தொண்டரான சுந்தரருக்குத்

திரு அமுதாக உதவும் பொருட்டு

தவறாமல்

பல நாட்கள்

பரவையாரின் திருமாளிகைக்கு

படி தந்து அமைத்தார் குண்டையூர் கிழார்.

3164.

அத்தகைய செயலை

அன்பினால் வரும் ஆர்வத்தால்

மகிழ்ந்து செய்வதற்கு

மழை

முறைப்படி பெய்யவில்லை

மாநிலத்தின் உணவான நெல்லும் மற்றவையும்

கொண்டு செல்வதற்குப் போதாத நிலை ஏற்பட்டது

மானம் அழிந்கிறதே என

மனம் மயங்கி வருந்தினார் குண்டையூர் கிழார்.

3165.

“வன்தொண்டரின் திருவாரூர் மாளிகைக்கு

நெல் எடுத்துச் செல்ல முடியாமல்

குறைபாடு ஆகிவிட்டதே

என் செய்வேன்” என நினைத்தார்

மிக்க கவலையினால் துயர் எய்தினார்

உணவு உண்ணாமல் அன்றைய இரவு உறங்கினார்

அங்கணரான சிவபெருமான்

அவர்பால் வந்து அருள் செய்தார்

3166.

“ஆரூரர்க்கு படி அமைக்க உன்னிடம் நெல் தந்தோம்”

எனச்சொல்லி அருளி

கங்கை நீர் ஊரும் சடைமுடியுடைய இறைவர்

நிதிக் கோமானாகிய குபேரனை ஏவினார்

பெரிய

அந்த ஊரின் எல்லை முழுதும்

நெல் மலையான பெருக்கங்கள்!

பெரிய வானமும் மறையும்படி நிறைந்தது

ஓங்கியது!

3167.

அன்றை இரவு புலர்ந்தது

புலர்காலையில் விழித்த

குண்டையூர் கிழார் அதைப் பார்த்து

“இது எந்த உலகின் நெல்மலை !” என்று அதிசயித்தார்

செம்மையான மேருமலையை

வில்லாக வளைத்த இறைவரின் திருவருளைப் போற்றித் துதித்து

கொவ்வைக்கனி போன்ற வாயினை உடைய பரவையாரின்

கணவராகிய ஆரூரைத்

தொழுதெழுவார் ஆயினார்

3168.

திருநாவலூரில் தோன்றிய தலைவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு

அளிக்கப்பட்ட நெல்

இங்கு எவரால் எடுக்க இயலும்

இச்செயலை அவருக்குச் சொல்ல

யான் போவேன் எனச்சென்றார்

தேவதேவரான சிவபெருமான் ஏவியபடி

நம்பி ஆரூரரும் எதிரே சென்றார்.

3169.

குண்டையூர் கிழாரும் எதிர் கொண்டு சென்று

குற்றமில்லாத

வாய்மைத் தொண்டரான நம்பி ஆரூரரின் திருவடிதன்னில்

தொழுது வீழ்ந்தார்

எழுந்து நின்று –

“முன் காலம் தொடங்கி செய்து வந்த பணி

இன்று எனக்கு முட்டுப்பட்டபோது

அண்டர்பிரான் ஆன சிவபெருமான்

தாமே நெல்மலை அளித்தார்!” என்று கூறினார்.

3170.

இந்நெல்

மனிதரால் சுமந்து எடுக்க எல்லை உடையதன்று !

இது என்னால் செய்யக் கூடிய பணியன்று!!

எனச்சொல்லியதும்

நம்பி ஆரூரர் அதனைக் கேட்டு

“பனிமதி சூடிய சிவபெருமான் அல்லவோ இந்நெல்லை

பரிந்து நமக்களித்தார்!” என்று இனிய சொல்லை மொழிந்து

தாமும் குண்டையூரை அடைந்தார்.

3171.

விண்ணை அளக்கும் அளவு உயர்ந்துள்ள

நெல்மலையை நோக்கிய நம்பி ஆரூரர்

அண்ணலாகிய சிவபெருமானைத் தொழுதார்

அதிசயம் மிகவும் எய்தி

அளவிலாத சிறப்புடைய பரவையாரின் மாளிகைக்கு

இந்நெல்லை கொண்டு சேர்க்க ஆட்களையும்

குளிர்சந்திரனை சூடிய சிவபெருமான் தந்தால் அன்றி

யாராலும் எடுக்க இயலாது என முடிவுசெய்து –

3172.

நெல் எடுக்க ஆள் தருமாறு சிவபெருமானிடம் வேண்டினார்

பக்கமுள்ள திருப்பதியான

“கோளிலி” எனும் ஊரில்

தம் பெருமானான சிவனாரின் கோயிலை வந்து எய்தி

“வாளென கண்மடவாள் வருந்தாமே” எனும் தொடரையும்

குறிப்பினையும் உடைய திருப்பதிகத்தை

மேலும் மேலும் மூளும் காதலுடன்

முன் நின்று தொழுது பாடியதும் —

(கோளிலி தற்போது திருக்குவளை என அழைக்கப்படுகிறது )

3173.

பகல் பொழுது கழிந்தது

அப்போது –

“பரவையாரின் மனையளவினைத்தாண்டிவிட்ட

பேரளவில் உள்ள இந்நெல்லை

உலகில் விளங்கும்

திருவாரூர் நிறைந்திடுமாறு

நமது பூதகணங்கள் கொண்டு சேர்த்துவிடும்” என

நின்மலனாகிய சிவபெருமான் அருளால்

விசும்பில் கேட்டது ஒரு வாக்கு

(விசும்பு- வானம்)

3174.

திருநாவலூர் நாவலனாராகிய சுந்தரர்

தம்பிரான் அருள் போற்றினார்

போற்றியபடியே

நிலத்தின் மீது விழுந்து எழுந்து

செவ்விய பொன்மலை போல் விளங்கும் சடையுடைய சிவபெருமானின்

பிறபதிகளும் வணங்கித் தொழுது

சிவபெருமானின் திருவாரூர் அணைந்தார்

(அணைந்தார்- வந்து அடைதல்)

3175.

நம்பி ஆரூரர்

திருவாரூரில் உள்ள பூங்கோயிலில்

மகிழ்வுடன் அருளும்

புற்றிடம் கொண்ட புராதனராகிய சிவபெருமானை

உள்ளே புகுந்து வணங்கினார்

நீங்காத பெருமகிழ்ச்சியுடன்

துதித்து வெளியே வந்தார்

பரிவாரங்கள் பக்கத்தில் சூழ்ந்து துதிக்குமாறு நடந்தார்

பரவையாரின் உயர்ந்த திருமாளிகைக்கு.

3176.

கோவைவாய் கொண்ட பரவையார் மகிழும்படி

நிகழ்ந்த செயல்களைக் கூறினார்

அவரோடு மிக இன்புற்றிருந்தார்

பிறகு

காளையூர்த்தி மேல்

உமையோடு வரும் இறைவரின்

திருவருள் ஏவலினால்

அந்த இரவிலே

பூதங்கள் மிகுந்து எழுந்து —

3177.

அந்த குறட்பூதப்படைகள்

குண்டையூரிலிருந்த நெல்மலையை எடுத்துச் சென்று

வண்டுகள் உலவும் கூந்தலை உடைய

பரவையாரின் திருமாளிகை நிறைவித்தன

பிறகு

அண்டர்பிரானின் திருவாரூர் முழுதும் அடங்கும்படி

நெல்மலையாக்கின

கண்டவர்க:ள் யாவரும்

அற்புதம்! என வியப்பு கொள்ளும்படி செய்தன.

3178.

சிவபூதங்கள்

திருவாரூர் முழுதும் நெல்மலையாக்கிய

அந்த இரவு விடிந்துகொண்டிருக்கும் காலைப்பொழுதில்

திருவாரூரில் வாழ்பவர்கள்

அதனைக்கண்டு

“எவ்வுலகில் விளைந்தவையோ இந்த நெல்மலைகள்!”

என அதிசயித்து

மானின் கண் போன்ற

மதர்த்த திருநோக்கு உடைய மங்கையான

புகழ் மிக்க பரவையாருக்கு

இவ்வுலகம் வாழ வந்தருளிய நம்பிகள் அளித்தவை இவை!” எனக்கூறினர்.

3179.

விலக்குவதற்கு அரிதான நெல்குன்று நோக்கி

வழிகள் பல போவதற்கும் சிரமமானதால்

மீண்டும்

தம் வீடுகளில் புகுந்து கொண்டவராகினர்

பாக்கியத்தின் திரு உருவமான பரவையார் கூட

“இந்த நெல்லை கொண்டு சேர்க்கும் இடம் சிரமம்தான் ! “என்பதுபோல

பலவும் சொல்லினர்.

3180.

மிகுந்த புகழுடைய பரவையார்

வன்தொண்டரான நம்பி ஆரூரர்

தமக்கு அளித்த

நெல்லினைக்கண்டு

மிக்க மகிழ்ந்தார் பின்பு –

“இன்று

உங்கள் இல்லங்களின் எல்லைக்கு உட்பட்ட நெல் குன்று எல்லாம்

அவரவர் தத்தம் செல்வமிக்க மனைகளில் சேர்த்துக் கொள்க”

என்று வெற்றி முரசு அறையுமாறு செய்தார்.

3181.

அழகிய திருவாரூரின் தெருக்களில்

ஆட்கள் இயங்குவதற்காக

பறை அறைவிக்கப் பணித்த உடன்

மனைகளை நிறைவித்து –

பக்கமுள்ள இடங்களிலெல்லாம் நெற்கூடுகள்

அளவில்லாமல் கண்டு வியந்துபோன பரவையார்

மணியாரம் புனைந்த மார்பை உடைய

வன்தொண்டரை வந்து பணிந்தார்.

3182.

நம்பி ஆரூரர்

திருவாரூரில் விருப்பத்தோடு தங்கியிருந்தார்

அந்நாட்களில்

செம்பொன் புற்றை

இடமாகக் கொண்டு எழுந்தருளிய

செழும் தேனான இறைவரை

தமது

மிக்க விருப்பத்தினால் வணங்கி

உணர்ச்சியினால் உள்ளூரப்பருகி

மண்ணுலகத்தினரும்

விண்ணுலகத்தினரும் அதிசயிக்குமாறு துதித்தார்.

3183.

இவ்விதமான நாட்களில்

விளங்கும் புகழுடைய கோட்புகலியார் எனும் நாயனார்

“தனது தலத்தில்

அளவற்ற புகழுடைய நம்பி ஆரூரர் எழுந்தருள வேண்டுமென’

அடி வணங்கி

தம் விருப்பம் கூறி வேண்டிக் கொள்ள

நிலை பெற்ற வன்தொண்டர்

அதற்கு இசைந்தார்

பின்

அவர் திருமுன்பு இறைஞ்சினார்

பலர் புகழும் பண்புள்ள கோட்புலியார்

மீண்டும் தமது தலத்திற்கு சென்று சேர்ந்தார்.

— இறையருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்