நேற்று ! இன்று ! நாளை !

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

சி. ஜெயபாரதன், கனடா



சமாதிக்குள் புதைபட்ட சடலமாய்,
கரையானுக்கு இரையாய்,
மூச்சு நின்று போனது நேற்று !
சரித்திரம் மீண்டாலும்,
திரும்பி வராது நேற்று !
நம்மிடம் பிரியா விடை பெற்று
நழுவிப் போனது நேற்று !
நேற்று நமக்கில்லை !
இன்று நமக்குண்டு !
நாளை நமக்கில்லை !

விடிந்து வேர்வையில் நீந்தும் இன்று!
நிகழ் கால உயிரினத்தின்
மூச்சை நிறுத்த
மூர்க்கரின் மேனிக் குள்ளே
இடுப்பு வெடியின்
கடிகார முட்கள் நகரும் இன்று !
கணப் பொழுதில்
வெடித்துச் சிதறின தேங்காய்ச்
சிறட்டைகள் !
விண்டும் அறுந்திடாமல்,
நொண்டிக் கொண்டுள்ளது இன்று!

நாளைப் பொழுது அடிவானில்
தொடுவானைப் போல !
சடுகுடுப் போட்டியில்,
பிடிபடாமல்
பின்னோக்கிச் செல்லும் ஆட்டக்காரன் !
இன்றைய சடலங்களை
எண்ணி முடிப்ப தற்குள்,
வெடிக்கும் பின்னுமோர் அதிர்வெடி !
தலை முடிகளை எண்ணி விடலாம் !
வெடித்த தலைகளை எண்ண முடியுமா ?
தொடரும் கணக்கெடுப்பு நாளை !

படைமேல் படை அனுப்பி,
பல்லாயிரம் ஆண்டு,
மடிமேல் வெடிகட்டி
அடிமேல் அடிவைத்து
வெடிமேல் வெடி வெடித்தாலும்,
வெடிப்பில்
தலைமேல் தலை உருண்டாலும்,
விடுதலை என்பது தொடுவானம் !
விடுதலைக்குப் பதில்
வெறுந் தலைதான் கிடைக்கும் !

நேற்று வேலை நிறுத்தம் !
இன்று கதவு அடைப்பு !
நாளை கதவு உடைப்பு !
நாளை ஒரு நகராத நத்தை !
கூட்டுக் குள்ளே முடங்கிக் கிடப்பது !
கையிழந்த படகோட்டியின்
கட்டுமரப் படகு !
மோட்டார் படகை உந்தினாலும்
தொடுவானைத் தொடுமா ?
நேற்று எவன் கையில் ?
இன்று உன் கையில் !
நாளை யார் கையில் ?

நேற்று திரும்பிப் பாராது !
இன்று நழுவிச் செல்லாது !
நாளை உயிர்த்து வாராது !
நேற்று ஒத்த ரூபாய் பெரிசு !
இன்று பத்து ரூபாய் பெரிசு !
நாளை நூறு ரூபாய் பெரிசு !
நேற்று சரித்திரம் !
இன்று விசித்திரம் !
நாளை தரித்திரம் !
நேற்றின் நறுமணம் பறிபோனது!
இன்றின் திருமணம் நிறம்மாறுது!
நாளையின் மறுமணம் கனவானது!

கண் மூடிய நேற்றும்,
கண் திறந்த இன்றும்,
கண் விழிக்கும் நாளைக்
கனவுத் திரையில் காணும் !
நேற்று அழிந்து போனது !
இன்று அழியப் போவது !
நாளை அழியா திருப்பது !
நேற்று சரித்திரம் பதித்திடும் !
இன்று வரலாறு உதித்திடும் !
நாளை சரித்திரம் திருப்பிடும் !

நேற்று விடுதலைத் தியாகிகள் !
இன்று மதாதிபதிகள் !
நாளை எதேச்சை வாதிகள் !
நேற்று குடியரசு அத்தமனம் !
இன்று இனஅரசு அரங்கேற்றம் !
நாளை தனியரசு கொடியேற்றம் !
பலருக்குக் குடியாட்சி !
சிலருக்கு முடியாட்சி !
பலருக்குப் படையாட்சி !
சிலருக்கு மதக்குரு ஆட்சி !
சிலருக்குத் தடியாட்சி !
உலக வல்லரசுகள்
தடியால் அடித்துப் பூமியைத்
தட்டையாய்
மட்டப் படுத்தும் !
உலகக் குடியரசு
ஒரு பெரும் கனவு !

நேற்றின் பெருமை எத்தனை பிறப்புகள் !
இன்றின் பெருமை எத்தனை சவங்கள் !
நாளையின் பெருமை
ஆராய்ச்சிக்கு ஆயிரம், ஆயிரம்
எலும்புக் கூடுகளின்
எண்ணிலாப் புதையல்கள் !
நேற்றை தினத்தின் மூச்சு
நின்று போனது!
இன்றைய தினத்தின் மூச்சு
இழுத்துக் கொடுள்ளது!
நாளைய தினம் மூச்சுவிடத்
தொப்புள் கொடி
இன்னும்
துண்டிக்கப் படவில்லை !

****************************
jayabarat@tnt21.com [Oct 26, 2006] (R-3)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா