கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

சி. ஜெயபாரதன், கனடா


இம்மைப் பிறப்பின் தலை வாசலை
எப்போது தாண்டினேன்
என்பதை அறிய வில்லை
நான் முதலில்!
நடுக் காட்டினில்,
நள்ளிரவு வேளையில்
மொட்டு விரிந்தாற் போல,
மாய வாழ்வில் என்னை,
மலர வைத்த மகாசக்தி எது?
பொழுது விடிந்ததும்,
ஒளிமயம் கண்களில் பட்ட போது,
ஒருகணம் உணர்ந்தேன்,
இந்த உலகுக்கு,
நானோர் அன்னியன் அல்லன்
என்பதை!
பெயரும் வடிவமு மில்லாத
மாயச் சிற்பி, என்
தாயுருவின் அன்புக் கரங்களில்
தாலாட்டப் படும்
சேயாக உண்டாக்கி
ஆட்கொண்டான் என்னை!
அது போலவே
மரணத்திலும் புலனுக்குத்
தெரியாத ஒன்று
நிகழப் போவதை நானறிவேன்!
வாழப் பிறந்ததை நேசிக்கும் நான்
வாழ்க்கை முடிவில் வரப்போகும்
மரணத்தையும்
வரவேற்பேன் வாஞ்சை யாக!
வலது முலையி லிருந்து தாய்
விலக்கும் போது,
வீறிட்டழும் குழந்தை!
அடுத்த கணத்தில் இடது முலைக்கு
அன்னை மாற்றும் போது,
அமைதியுறும் சேய்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 15, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா