யாரைத்தான் நம்புவதோ தோழா !

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

புதுவை ஞானம்



செத்த மாட்டிலிருந்து
சென்னா குன்னிவரை
கழித்துக் கட்டியதையே
சீவனமாய் உண்டு

செருப்புத் தைப்பது முதல்
செத்த பிணத்தை எரிப்பது வரை
அத்தியாவசியமான அனைத்தையும் செய்து
தீண்டத் தகாதவனாய்
நீண்ட காலம் வாழ்ந்து வந்து ……..

திருட்டுத் தடியர்கட்கு
இருப்பிலே சொர்க்கம் வைத்து
இகலோகம் வெறுத்து
பரலோகம் போக எண்ணி

சுடலை மாடனையும்
பாவாடை ராயனையும்
முனியனையும் இருளனையும்
இளப்பமாய் ஒதுக்கி
மேல் சாதிச் சாமியாம்
சிதம்பர நடராசனைத் தேடி
தீப்பட்டுக் கருகிய நந்தன் முதல்
திசை மாறிப் போனாய் நீ !

திசை மாறிப்போன நந்தன் தான்
தீவிர வாதியென்று
ஆலயப்பிரவேச நாடகம் நடித்த
மேல் ஜாதிப் பக்கிரி காந்தியை நம்பி
‘ ராம்-ரஹீம்’ பாடியும்
ராப்பட்டினி பகல் பட்டினி.

காங்கிரஸ் குலாக்குகள் முன்
கைகட்டி நின்றதனால்
கொடி கட்டிப் பறந்ததுண்டு
உன்னில் சில பேர்கள்.

குலாக்குகளின் எச்சில் இலைகளுக்கோ
கூச்சல் குழப்பம் இழுபறி !
இலை கிடைக்காதோர் இணைந்ததே
‘ ஹரிஜன் லீக் ‘.

ஏ….. பாவிகளே ! இளைப்பாற வாரீர் ! -என்ற
சீமை நாய்களின் ஏமாற்று வித்தையில்
‘சுவிஷேஷம் ‘ தேடிப் பெற்ற பெயரோ
வேதப் பறையன் !
அல்லுலேயா…… ஆமாஞ்சாமியோவ் !
ஆரிய மாயையை எதிர்த்த வீரிய இயக்கமாம்
ஈரோட்டுப் பாதையும் தனித்தனியே
உம்…… சுடுகாட்டுப் பாதை போலே மற்றும்
உம்…….டீக்கடைச் சிரட்டை போலே !

காஞ்சி தந்த கரிபால்டி தென்னாட்டு பெர்னாட்ஷா
இந்நாட்டு ரூசோவின் கருணை மிகு
ஆட்சியில் தான் கருக்கப் பட்டது நாற்பத்து நான்கு
வெண்மணி வித்துக்கள் … குடிசையுடன் !
இரத்தம் செத்து குருடாகிப் போனேன் ஆயினும்
மறக்க முடியுமா அந்த மாபாதக அரக்கு மாளிகையை !

ஓடினேன்…. ஓடினேன் ! வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன்
ஓக்காளம் நிற்கவில்லை ! இன்று நினைத்தாலும்
புரட்டுகிறது வாயும் வயிறும் !

செங்கொடி விற்று சோறு தின்னும் மானம் கெட்ட வலதும் இடதும்
சாதித்ததெல்லாம் சாதிக் கொடுமைக்கோர் நினைவுச் சின்னம்
அதன் பேரால் வசூல் நிறையவே !

ஆக………..
சிதம்பரம் – வெண்மணி இன்னும் யான் அறியா
எத்தனையோ அக்கினிக் குண்டம் தாண்டி
விழுப்புரம் மார்க்கம் வந்தவரை நீ நம்பியது
பழி வாங்கும் பூசாரிகளையே ……….
பூனூலுடனும் _ அது இல்லாமலும்.

உன்னில் படித்தவர்கள் உன்மத்தம் பிடித்தவர்கள்
கோட்டா சுகத்தினிலே கொட்டாவி விடுபவர்கள்
நீலக்கொடி காட்டி நீட்டி முழக்குபவர்
வெள்ளைக் கொடி காட்டுகிறார்
உம்மைக் கொள்ளை அடிப்பவர்க்கே .

யாரைத்தான் நம்புவது தோழா என்கிறாயா ?
உன்னைத்தான் உன்னைத்தான் உன்னைத்தான் !
தன்னை நம்பு தலை விதி மாறும் !

————————————————————————–
30 August 2006

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்