பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

பா.சத்தியமோகன்



2796.

நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை இறைஞ்சினார்

ஒப்பிலாத தொண்டர்களுடன் நெருங்கிச் சென்றார்

ஒளியுடைய கோயிலினை வலம்வந்தார்

மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று

“தாங்குபவரே!

ஆற்றிடையே ஓடம் செலுத்தித்தந்த தன்மையால்

அருள் தந்த தலைவா

நாகங்கள் அணிந்தவரே

யானையின் தோலை போர்த்திக் கொண்ட

முக்கண்கொண்ட புனிதரே

எனப்

பலப்பல விதமாகப் பணிந்தார்

போற்றித் துதித்தார்.

2797.

இவ்விதமாக இறைவரைப் போற்றி இசைத்து

வெளியில் வந்து

அந்தப்பதியில் தங்கியிருந்த நாளில்

பாண்டியன் முன்னிலையில்

புன்மையான சமயத்து சமணர்களுடன்

மேற்கொண்ட பெரிய வாதத்தில்

தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான

இறைவரை இறைஞ்சுவதற்காக

அருள் பெற்றுப் புறப்பட்டு

முன்னம் சென்று வணங்கிய பதிகளையும் திரும்ப வணங்கி

அன்பர் கூட்டம் சூழ

நான்கு திசையும் போற்றும் திருநள்ளாறு சேர்ந்தார்

நாடுடைய நாயகரின் திருக்கோயில் அடைந்தார்.

2798.

நீடுதிருத்தொண்டர்கள் புடை சூழ

அங்கு முத்துப்பல்லக்கிலிருந்து எழுந்தருளிப்போய்

பெருமையுடைய திருவாசல் வணங்கிப் பணிந்தார்

பிறையணிந்த சென்னியர் நிலைபெற்று வீற்றிருக்கும்

கோவில் புகுந்தார்

உள்பக்கங்களில் வலமாகச் சுற்றி

மகிழ்வுடன் உள்ளே புகுந்து

வள்ளலாரான இறைவரைப் பாடுகின்ற

“மெல்லடி” எனும்பதிகம் பாடித் துதித்தார்

கண்களிலிருந்து அருவி பரந்து பாய்ந்தது.

[ சென்னி – தலை ]

2799.

தென்னவனாகிய பாண்டியன்

முன்பு

சமணர் செய்த வாதத்தில்

தீயில் இட்ட ஏடு பச்சையாக இருக்கச் செய்தீர்

என் உள்ளத் துணையாகி –

ஆலவாயில் அமர்ந்திருந்த தன்மைதான் என்னே !

என் தந்தையே என்ன அதிசயம் ! என்று நயம் போற்றினார்

பலமுறையும் எடுத்துக்கூறும்

தமிழ்த்தொடையான திருப்பதிகத்தைப் பாடினார்

துதித்தார்

நிலையான புகழை உடைய

பிற தலங்களையும் வணங்குவதற்காக

திருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றார் ஞானசம்பந்தர்.

2800.

சிறப்புகள் நிலவுகின்ற திருச்தெளிச்சேரியினைச் சேர்ந்தார்

சிவபெருமானை தரிசித்துவிட்டு

மேற்கொண்டு செல்லும்போது

நற்சார்பு இல்லாத சாக்கியர்கள் தங்குகின்ற

போதி மங்கை என்ற ஊரின் அருகே வந்ததும்

அச்செய்தி கேட்ட சைவர்கள் எல்லோரும்

கடல் போல கிளர்ந்து எழுந்துபோய்

தாரை சங்கு முதலான

அளவற்ற பல இயங்களையும் முழக்கினர் ஒலித்தனர்

உலகம் விளங்கும்படி

எக்காளம், திருச்சின்னம் ஆகியவற்றையும்

“பரசமயக் கோளரி வந்தார்” எனச்சொல்லி ஊதிட-

2801.

கீழான அறிவுடைய சாக்கியர்களுள்

அறிந்தவர் ஒன்று கூடி

சீகாழியினரின் புரவலரான ஞானசம்பந்தர்

ஊரின் எல்லையுள் புகுந்தபோது

திருத்தொண்டர்கள் எடுத்த சிவஒலிகளின் முழக்கம் கேட்டு

அவர்களின் எதிரே முன் சென்றனர்

திரண்டு எழுந்து ஒலிக்கின்ற

திருச்சின்னம், எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும்

தமது மனம் கொண்ட பொறாமையாலும் சினம் அடைந்து

தம்மைவிட கல்வியினில் மேம்பட்ட

புத்தநந்தி முதலானவர்களுக்குச் சொன்னதாவது:

2802.

சாக்கியர்களின் கொடிய சொல்லும்

ஞானசம்பந்தப் பிள்ளையார் முன்பாகப் பெருகிய

திருச்சின்னங்களின் ஒலியும்

நிலைபெற்ற திருத்தொண்டர்களின் ஆரவார ஒலியும் ஒன்றுகூடி

காய்ச்சி அடித்த இரும்பு சலாகை போல் புகுந்ததால்

புத்தநந்தி மேலும் சினந்துகொண்டு

தம் கூட்டத்திடையே போய் —

“வெற்றிக்கு அறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள்

எம்மை வாதத்தில் வென்ற பிறகல்லவோ பிடித்தல் வேண்டும்”

என்றான் வெகுண்டான்!

2803.

புத்தநந்தியை புத்தர் கூட்டம் சூழ்ந்து வர

ஒப்பற்ற ஞானப் புனிதர் சம்பந்தர் திருமுன்பு ஊதப்பட்ட

உண்மைத்திறம் வாய்ந்த திருச்சின்னங்கள் விலக்கப்பட்டன

வெகுண்டு எழுந்த சம்பந்தரின் திருத்தொண்டர்கள் வெறுத்து நோக்கி

“இத்தகைய கொடும் செயலுக்கு இவர்களைத் தண்டிக்காமல்

பொறுத்துக் கொண்டு போவோமானால்

அவர்கள் தங்கள் நிலையையே தொடர்ந்து செய்வர்”என்று

முத்துக்கள் வரிசைப்பட அமைந்த சிவிகையில் அமர்ந்துள்ள

பிள்ளையாரிடம் வந்து

அவரை முறையாய்ப் பணிந்து

நேர்ந்தவிதத்தைக் கூறி நின்றனர்.

2804.

“வரும் இடத்தில் இவ்விதமாக நோதல் அழகியதே!

மாறுபாடு கொண்ட அவர்களது பொருள்

நிச்சயம் மறுக்க இயலாதபடி

வாதிடப்படும் இடத்தில்

புத்தநந்தியின் பொய்க் கொள்கையினை

உள்ளபடி காட்டுவோம்” எனப் புகலிவேந்தர் கூறினார்

அரிய திருமுறைகளாகிய திருப்பதிகங்களை

எழுதும் வழக்கமுடைய சம்பந்த சரணாலயரென்பவர்

ஆளுடைய பிள்ளையாரின்

திருவாக்கின் ஆணையால்

“புத்தநந்தியின் தலை

இடிவீழ்வதால் உருண்டு வீழ்வது போல வீழ்க” என —

பொறுக்க முடியாமல்

சொல்லை முன் செல்லவிட்டார்.

(சம்பந்த சரணாலயர் என்பவர் ஞானசம்பந்தர் பதிகங்களை

எழுதும் பணி மேற்கொண்டவர். அவருடன் எப்போதும் வருபவர்)

2805.

காளைக்கொடி உயர்த்திய

சிவபெருமானின் சைவநெறி ஆணை

உலகெங்கும் உய்க்க

எதிரே வந்து அடைகின்ற இடையூறுகளைக்

களைந்து எறிந்து நீக்குகின்ற

ஒப்பில்லாத

மாறுபாடில்லாத மந்திரமான

இடிபோன்ற

உண்மைத் திருவாக்கான

தேவாரத்துடன் கூடிய

சம்பந்தரின் தொண்டரான சம்பந்த சரணாலயரின் வாக்கு

புத்தநந்தியின் உடம்பையும் தலையையும்

வெவ்வேறாகக் கூறு போட்டது சிதைவு படுத்தியது

அப்போதே

புத்தர்களின் கூட்டம்

உலைந்து ஓடியது

விரைந்து அஞ்சி ஓடித் திடுக்கிட்டது

நடுங்கியது.

2806.

அந்த புத்தர்களின் நிலைமையையும்

வாக்கினால் போர் செய்ய வந்த

புத்தநந்தியின் தலையும் உடலும்

வெவ்வேறாகக் செய்துவிட்ட தொண்டர் செயலும் கண்ட

சிவனடியார் கூட்டமெல்லாம்

அவ்வெற்றி அளிக்கும் பிள்ளையாரிடம் சென்று கூறினர்

“எதிர்பட்ட இடையூறு நீங்கும்படி செய்த இறைவரின்

அருள் விதி அதுவே ஆகும்

ஆதலால் சிவபெருமானை வணங்கி

அரகர என்று எல்லோரும்

சிவன்நாமத்தை ஓதி முழக்கம் செய்க!” என்று

பிள்ளையார் உரைத்தார்

அந்த ஒலி அப்போதே வான்வரை சென்று எட்டியது

பொருந்தியது.

2807.

அச்சம் கொண்டனர்

அகன்று ஓடிய புத்தரெல்லாம் அதிசயித்தனர்

மீண்டும் தமக்குள் ஒன்று கூடினர்

“அந்நிகழ்ச்சி வஞ்சனையால் உண்டானதோ?

அல்லது

அவர்களின் சைவ வாய்மை காரணமோ” என

மருண்டனர்

அதை மனதில் எண்ணி

குறைவில்லாத மந்திர வாதம் தவிர்த்து

எம்மோடு எதிர்த்துப்பேச

உண்மைப் பொருள் இது என்று பொருள் பேச

வாதம் செய்ய இசைவீராக” என்று

தம் சமய நிலையில்

மிக்க வன்மையுடைய

சாரிபுத்தன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு

வந்து சேர்ந்தனர்.

2808.

அவர்கள் கூறுவதன் தன்மையைக் கேட்டார்

சீகாழிப்பதியில் தோன்றிய அடலேறு தம் திருவுள்ளத்தில்

“இது அழகிது” என்று தோன்றியது

மிக்க மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று

வெண்மையான முத்துச்சிவிகையிலிருந்து இறங்கினார்

வேறு ஒரு சந்திரமண்டபத்தில் சென்ற

தன் திரு முன்பு நின்ற தொண்டர்களை அழைத்து

புத்தர்களை அழையுங்கள் என்றார்

அந்த ஏவலைப் போற்றிச் சென்றனர் தொண்டர்கள்.

2809.

சென்றவர்கள் பெளத்தர் குழாம் அடைந்தனர்

“நீங்கள் கூறிவரும் பொருளின் நிலைமை தெரிவிக்க

எங்களின்

வெற்றியுடைய இளங்களிறு-

சண்பையாளி-

வேதத் தலைவர் -முத்தமிழ்மன்னர்- ஞானசம்பந்தர்

மகிழ்ந்து அழைக்கின்றார்

நீங்கள் பொருந்தும்படி வாருங்கள்” என்று கூறியதும்

நன்மை சாராத தன்மையுடைய புத்தர்களுடனே கூடி

சந்திர மண்டபத்தின் முன்னே வந்தான் சாரிபுத்தன்.

(தேரர்- பெளத்தர்)

2810.

சாரிபுத்தன் அங்கு சென்று

மண்டபத்தில் பெளத்தர்களுடன் கூடி

பிள்ளையார் அருகில் நெருங்கி நின்றார்

அப்போது

எங்கும் ஆணை செலுத்தும் திருச்சின்னத்தைத் தடுத்த

புத்தநந்தியின் பெரிய தலையைப் பொடிசெய்த

அன்பரான சம்பந்த சரணாலயர்

பொங்கும் புகழுடைய புகலி காவலரின் பாதம் போற்றினார்

அவரின் அருள் பெற்றார்

சாரிபுத்தனைப் பார்த்து

“உங்கள் தலைவனான கடவுள் பற்றியும்

பொருள் பற்றியும்

பேசுவாயாக” என உரைக்க

அதற்கேற்ற சமய வாதத்தை சொல்லத் தொடங்கினான் சாரிபுத்தன்.

2811.

அளவற்ற எல்லா கற்பங்களிலிருந்தும்

அளவற்ற யோனிகளில் பிறந்ததும் இறந்ததும் ஆகிய

அக்கதியிலிருந்து மாறவேண்டும்

மாற்றாக —

வீடுபேறு பெறுகின்ற கணபங்கத்தின் இயல்பு குறித்து

புத்த சமயத்தில்

அழகுடைய தானம், தவம், பண்பு ,மிகு யோகம் எனும் இவற்றைப்

பொருந்தச் செய்ய வேண்டும்

அதனால் நீக்கமற்ற நிலை உண்டாகும்

அவ்விதம் –

உரைத்த ஞானத்தால்

அழியாத பேரின்பமுத்தி பெற்று –

பலப்பல பிறவித் துன்பம் நீங்கி உய்ய

அறம் சொன்ன அருள் உடையவனே

யாம் தொழும் கடவுள்” என்றான்.

2812.

சாரிபுத்தனின் வாதம் ஏற்று

பெரிய தவமும் பெருந்தன்மையும் உடைய அன்பரும்

“நன்று! உமது தலைவன் தான் அடைந்தான் என்று

நிச்சயித்துக் கூறும் முத்தியில் இயல்புதான் யாது?”

என வினவியதும் பதில் இப்படி வந்தது :-

நின்ற உருவேதனை- குறிப்பு – செய்கை -நேரே நின்ற ஞானம் என

ஐந்தும் கூடிய பஞ்சகந்தத்தின் அழிவே முத்தி!

என்றான்

திரிபிடகம் என்ற பெளத்தநூலில் அறிவு மிக்க சாரிபுத்தன்

(கந்தம்- கூட்டம் )

( கந்தவீடு-கந்தத்திலிருந்து விடுதலை)

2813.

சாரிபுத்தன் உரைத்த மொழியினைக் கேட்டுக்கொண்டார்

ஞான சம்பந்தரின் அன்பர் சம்பந்த சரணாலயர்

அவன் கூறிய செய்தியுடன் உடன் வாதிக்க

அவனை நோக்கி

“முன் தங்கியிருந்த ஞானத்துடன்

ஐந்து கந்தங்களும்

ஒருங்கே அழிந்து கெட்டவன் என்றால்

தலைவர்தானே இங்கு வீற்றிருக்கிறார்?” எனக்கேட்டதோடு –

எல்லாம் செய்வதற்காக விகாரம் எனும் கோயில் எடுப்பித்து

அதனுள் அவனது பெரிய வடிவத்தையும் வைத்து

விழா செய்யும் பூசையை ஏற்பது யார் ?” என்றும் கேட்டார்

பதில் சொல்லத் தொடங்கினான் சாரிபுத்தன்.

2814

“இருவினை காரணமாக

பஞ்சகந்த உடம்பு நீங்கிய அந்நிலையில்

என் தலைவன் முத்தியில் கலந்துள்ளான் அதனால்

கோவிலும் விழாவும் எடுப்பது பொருந்தும்” என்றான் சாரிபுத்தன்

“முத்தியில் சேர்ந்துவிட்ட உன் தலைவனுக்கு

பொருட்களை உணரும் கருவிகளான

கண் முதலான கரணங்கள் இல்லாமையால்

உணர்ச்சியும் இல்லை” என்றார் சம்பந்தர் சரணாலயர்.

அதனை மறுத்த சாரிபுத்தன் –

முற்பட்ட உணர்வு கெட்டு உறங்குகிறவனை

நிந்தனை செய்து பேசி

அவன் உடல் மீது மிதித்து ஆடிய ஒருவனுக்கு

தீவினைப் பயன் வருவது எப்படியோ அது போல

எமது தலைவனை

வழிபட்டார்க்கும் அந்த நல்வினைப் பயன் வரும் அன்றோ”

என்றான் .

2815.

“நீ தொடர்ந்த வழிபாட்டை ஏற்கும் உன் தலைவனுக்கு

உணர்ந்து ஏற்கும் கருவிகள் ஏதுமில்லாமையால்

அவற்றில் உடன்பாடும் இல்லை எதிர்ப்பும் இல்லை

அப்படியாயின் அவ்வழிபாட்டை ஏற்பதுமில்லை”

என்று சொன்னார் சம்பந்த சரணாலயர்

உடனே –

அதற்கு பதில் கூறும்விதமாக —

“தன் முன்புள்ள விஷயங்களில் விருப்பும் வெறுப்புமின்றி

நல்ல உறக்கம் உடைய ஒருவனைச் சினந்து

ஒருவன் கொன்றால்

இன்னுயிர் போய்விடும் அத்துடன்

கொலைப்பழியும் சேரும் அன்றோ ?

இவ்வாறே எம் இறைவனுக்கு எம் வழிபாடு சென்று பொருந்தும்”

என்றான் சாரிபுத்தன்.

2816.

”இவ்விதமாக வழிபாட்டில் பயன்தருதல் எனும் தன்மை,

எம் தலைவனுக்குப் பொருந்தும்” என நீ

மேற்கோளாக எடுத்துக்காட்டிய

உடன்பாடும் மறுப்பும் இல்லாது உறங்குபவன் போல எனும் உதாரணத்திலிருந்து

உடம்பில் உள்ள கரணங்களும், உயிரும் இங்கு இச்செயலுக்கு

வழிபாடு ஏற்றுக்கொள்ளும் நிலை

உம் தலைவனுக்கு இருப்பதாக ஆகிறது

அதனால்

முன் நீ செப்பிய ஐந்து கந்தத்தின் விளைவு இல்லாது போகிறது

எனவே கந்தத்தின் விளைவற்றவன் ஆகிறான் உம் தலைவன்

கந்தத்தின் அறிவு கெடுகிறது

ஆதலால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது ” என

சம்பந்த சரணாலயர் மொழிந்தார்.

2817.

சம்பந்த சரணாலயர் உரை கேட்டு

அதற்கு எதிராகச் சொல்ல ஒன்றுமின்றி நின்றான்

முத்தியில் தலைவன் சேர்ந்துள்ளான் என்ற வாதமும்

பாழாக முடிந்த சிறுமையோடு நின்றான் சாரிபுத்தன்

ஞானமெனும் கடலில் அமுதம் போன்ற ஆளுடைய பிள்ளையாரின்

அன்பரான சம்பந்த சரணாலயர் மேலும் கூறினார்:

கந்தங்கள் அவிந்து பொய்யாய் முடிந்த பின்

முத்தியில் சேரக்கூடிய உன் தலைவன்

அதற்கு முன்பே எல்லாப் பொருள்களும் உணர்ந்து

அறம் உரைத்துச் சென்றான் என்றாயே அது எப்படி?

எவ்வகையால் முழுதும் உணர்ந்தான் ?

எனவே

உணர்ந்தான் என்பதும் இல்லை ஆகிறது

இதற்கு மறுமொழி கூறுவாயின் ஏற்போம்” என்றார்.

2818.

சாரிபுத்தன் பதில் சொன்னதாவது:-

“உணர்வு என்பது பொது மற்றும் சிறப்பு என இருவகையாகும்

அவற்றுள் முதலில் உள்ள பொது உணர்வு என்பது

ஒரு காட்டில் உள்ளது மரம் எனப் பொதுவாய் உணர்வது

சிறப்பு உணர்வு என்பது

அக்காட்டில் உள்ள மரங்கள் இன்னவை எனப்பிரித்து உணர்வது

இப்படியாக

வரம்பில்லாத பொருள்கள் எல்லாமும் கூட்டி

தீயில் மொத்தமாக இட்டாலும்

வெப்பமான தீயின் கொழுந்து அதைச் சுட்டு நாசமாக்க வல்லது போல்

தொகையாய் கூட்டியும் , விரித்தும் எம் இறைவன் தெரிவிப்பான்.”

2819.

இவ்விதம் எடுத்துரைத்த சாரிபுத்தனுக்கு

ஞானசம்பந்தரின் அன்பரான சம்பந்தசரணாலயர்

கூறியதாவது:-

“நீதியின் செயலுக்கு உவமையாக

உணர்வின் செயலைக் கூறினாய்

ஆனால்

பொருள்களை அடுத்து நின்ற உணர்வுக்கு வடிவமில்லை

நீ கூறிய அனல் என்பது வடிவுடையது

அதையும் நீ அறிக

உம் இறைவன் தொடுக்கப்பட்ட நிகழ்காலம் தவிர

இறந்தகாலமோ எதிர்காலமோ தொடுத்து அறியக்கூடியவன் எனில்

நீ எடுத்துக்காட்டிய பொருளான

தீ என்பது

நிகழ்காலத்தின்போது மட்டுமே சுடும்

பிற இரண்டு காலத்தில் சுடாது ஆகும்”

2820.

“நீ உதாரணமாகக் காட்டிய பொருள்கள் எல்லாம்

பொருத்தமாக இல்லாததால்

உன் இறைவன்

எல்லாப்பொருள்களையும் முழுதும் ஒருங்கே உணர்ந்ததும்

முத்தி இலக்கணம் பாழானது போல பாழே !

நிரம்பாத அறிவால் உரைத்த

உமது பிடகநூலும் குற்றமே ! ”

என்று அந்த சாரிபுத்தனுக்கு

அவன் ஏற்குமாறு அருளிச் செய்ததும் —

மேற்கொண்டு வாதம் செய்ய இயலாமல் தோற்றான்

சாரிபுத்தனை வென்ற சரணலயர்

புகலி மன்னரின் சம்பந்தரின் பாதத்தாமரை பணிந்தார்

தங்கள் சமயத்தன்மை இழந்த புத்தர்களும் பணிந்தனர்.

2821.

அறிவையே பற்றுக்கோடாகக் கொண்டு

அந்த பெளத்தர்கள் கூறிய பொருளின் தன்மைகள் பொருளற்றன என்பதை

அன்பர் சம்பந்த சரணாலயர் பொருதமாகக் கூறியதும்

மந்த உணர்வுடையோரை நோக்கி

சைவம் தவிர வேறொன்றும் இல்லை என்றே

அழிவற்ற சிறப்புடைய வேதங்களும் ஆகமங்களும்

அவற்றின் வழியே வரும் மற்ற கலைப்பொருட்களும் உணர்ந்த

சண்பை நாயகர் ஞானசம்பந்தர் அவர்களுக்கு அருளினார்

அவரது

செம்மையான திருவடிகளை பெளத்தர்கள் தாழ்ந்து வணங்கினர்.

2822.

அன்று

அந்த பெளத்தர்க்கும்

சீகாழித் தலைவரான பரமாச்சாரியாரின் கருணை நோக்கம் கிட்டியதால்

அறிவின்மை அவர்களை விட்டு அகன்றது நீங்கியது

ஆதலால்

அவரை முன் தொழுதனர்

விழுந்து வணங்கினர்

எழுந்தனர் திருநீறு தரப்பெற்று சைவராயினர்

தேவமலர் மழை எங்கும் பொழிந்தது

நிற்பனவும் உலவுவனவும் சைவமே ஆகும் என்ற நிலைமையை

அவர்களுக்கு அருளினார் சண்பை வேந்தர்

சிவபெருமான் எழுந்தருளிய மற்ற பதிகளும் சென்று பணிவதற்காக

திருக்கடவூரின் பக்கத்தில் சேருமாறு வந்தார்.

2823.

திருக்கடவூர் நகரில் அடியார்கள் எதிர்கொண்டனர்

வரவேற்கப்பட்ட ஞானசம்பந்தர் உள்ளே எழுந்தருளினார்

உயிரைப் பிரிக்க வரும் இயமனை உதைத்த இறைவரின்

ஒலிக்கும் கழல்கள் வணங்கிப் போற்றியபடி

விரும்பி அங்கு தங்கியிருந்த நாளில்

“வாகீச மாமுனிவர் ( அப்பர் ) எந்நகரில் எழுந்தருளியுள்ளார்?”

என்று அடியார்களை வினவினார்.

2824.

அப்போதுஅங்கு அந்த அடியார்கள்

ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கித் துதித்தனர்

பொங்குகின்ற நீர்வளம் உடைய திருப்பூந்துருத்தி நகரில் தங்கி

அங்கு திருத்தொண்டு செய்யும் மகிழ்ச்சியால் சார்ந்திருந்தார்

எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி இருக்கும் இறைவரின்

கருணையை எடுத்து இயம்பினார்.

2825.

திருநாவுக்கரசரின் இயல்பை அந்த அடியார்கள் கூற

ஒப்பில்லாத அரிய பெரிய விருப்பம் மிகுந்து ஓங்கியது

ஒளிபெருகும் கருமை பொருந்திய கண்டத்தை உடைய

சிவபெருமானின் கழல் வணங்கி

அருள் விடைபெற்று

செப்ப இயலாத புகழையுடைய சீகாழியில் அவதரித்த

பிள்ளையார் செல்லத் துவங்கினார்.

2826.

மலர்கள் விரியும் பெரிய சோலைகள்

பக்கமெங்கும் பரவியிருக்க

நீர்பரந்து ஓடுகின்ற காவிரியின் தென்கரை வழியே போய்

நெற்றிக்கண்ணுடைய சிவனார் மகிழ்ந்து வீற்றிருக்கும் தலம் மேவி

இனிதாய் விரும்பி வணங்கிச் சென்றார்

விருப்பம் பொருந்திய உண்மை அடியார்களுடன்

நாவுக்கரசரிடம் ஞானசம்பந்தர் சென்றார்.

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்