உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

டீன்கபூர்


உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு

உடலுக்குள்ளே முகில் கூட்டம்.
மழைக்கால ஆகாயம் போல
தினம், தினம் என …
எந்தக் குளத்து சுருப்புக்குள்
சூரியன் விரல்விட்டு
குடைந்ததோ தெரியா.
என்று வைத்தியர் முழிசினார்.
உடலுக்குள்ளே முகில் கூட்டம்.
கடலும்
காடும்…

மூட்டும் கொள்ளியடுப்பு அடுத்த வீட்டவனுக்கும்
எரிந்து சாம்பலாகியது
சுவாசப் பைக்குள்.

பக்கத்தவனின் புரையேறல்
மயக்கம் தெளியும் வரையும்
யாருக்குத் தெரியும்.?
தலையைச் சுற்றுவது முகில் என்று.

இழுப்பது, மூக்கு வழி கக்குவது
சுதியேறிக் கழிவது போதுமானது.
போதைக்குள்
ஆயிரம் குடில்கள் எரிவது
ஆயிரம் நலவுகள் சாவது
மூட்டும் அடுப்போடு முடியும்.

பூனை சுருளும் போது
மிச்சமாய் இல்லை என்று இவன்
காசுப் பை அழுதே கேட்டது.

உயிரோடு போராடி
கூட்டமாய்ச் சுற்றிய முகில்
இவனுக்குள் பெய்த மழையோடு
சங்கமமாகினான்.
பக்கத்து வீட்டவனும் சுவாசிக்க
இருமத் தொடங்கியுள்ளான்.

பஸ் ஏற ….
இரயில் ஏற எல்லாம்
இப்போது
மனிதனைச் சுற்றிய
எரிந்த கொள்ளிகள் புகைகின்றன.

நிலப் பந்துக்குள்.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை.

ஒரு நிலப் பந்துக்குள்
பூனைகள் சீறுவது
பாம்புகள் விஷம் ஏற்றுவது
எருமை முக்காரமிடுவது
யானை பிளிருவது …

நிலவு புண்படுவது ….

சகஜம்
சகஜம் தான்.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை.

சவர்க்கார நுரையினுள்
மனத்தைத் தொலைத்துத் தேடிய
வறுமை
இன்னும் கசக்குவது,

பின்னால் உறுமும்
வாகன நெரிசலில்
தவிக்கின்ற உயிர்களை
மெல்ல காற்றுக்கு அனுமதிகோரி,

புழுத்துப்போன ஆக்ரோசம்
மீண்டும் ஒரு உண்மைக்கு
எவ்வாறு அடித்தளமிடும்.

ஆலாதியான இயைபுடனே
என்தொட்டில் பாடுகிறது.
என் வண்டில் ஓடுகிறது.
என் வானம் வெளிக்கிறது.

இருள் விலகி …
எரிகின்ற காடு அணைந்து …
பசுமை வயல் வெளியில்
என் குருவிகள் கீச்சிட்டுப் பறக்க
பிரார்த்தனை புரிவதே தேவை..

அறியாமை வீதியில்
இன்னும்
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம்
யாரும் அடையாள அட்டை கேட்பதற்கில்லை.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை.

ஒரு நிலப் பந்துக்குள்
பூனைகள் சீறுவது
பாம்புகள் விஷம் ஏற்றுவது
எருமை முக்காரமிடுவது
யானை பிளிருவது

நிலவு புண்படுவது ….

சகஜம்
சகஜம் தான்.


ஒரு பிடி உயிர்

பொது விளக்கை கற்களால்
அணைக்க முயல்பவர்களே!

பாறைகளாய்ப் போன கட்டிட இடிபாடுகளுக்குள்
ஒரு பிடி உயிருடன் வாழ்கிறேன்.
ஒரு சிட்டுக் குருவியாய் என்னைவிட்டும்
உயரப் பறந்திட இந்த மூச்சு காத்துக்கிடக்கிறது.

தாமரையாய் என்னிதயக் குளம்.
கடல் நீரால் கருகி ….
தெளிந்து சிறு அலை
என்னுள் எழுந்து மடிகின்றன.
நிகழ் வாழ்வும்,
சக வாழ்வும்,

முகத்தில் சிரிப்பு இத்துப்போய்
காரிருள் படர்ந்த வெளியாக ….
முடிந்து போன உலகத்தை
போர்த்திச் சென்ற கடலால்
என்னூர்
ஆண்மையை இழக்கவில்லை.
கடல் வளர்த்த பூமியைத்தான்
ஆக்கிரமித்தது.

புத்தியாய் ஊருக்குள் படையணி திரட்டி
ஒரு மேடைக்கு அழுகின்ற வாய்பைப் பூட்டி
மக்கள் பெற்ற குழந்தைகள் விம்முவார்கள்.

N.பு.ழு க்கள் விதைத்த
கூடாரங்களின் முதுகில் குத்தி…. குத்தி ….

மக்களின் வெறுமை
கடலோரமும்
குளத்தோரமும் முளைக்கின்றன.
பிசாசுகளின் கரங்களில் இருந்து விடுபட்டு
ஒரு பிடி உயிருக்காக
பொய்மையிலிருந்து விடுபட முயற்சிக்க.

மக்களே!
பொது விளக்கை கற்கலால்
அணைக்க முயல்பவர்கள் …..
நாளை ஒருவன்
யானையில் வருவான்.
பூனையில் ஏறுவான்.


வெங்காய மூட்டையில் கிளறிய மூளை

அழுகிய கொச்சிக்காய்
அடித்தது வாடை
மூக்கைத் துளைத்து குத்தியது முதுகில்
சொல்லிக் கத்தினான் விற்றவன்.
தோலை உரித்து உரித்து
வெங்காய மூளை என்றும் சொன்னான்.
விட்டிலின் தலைக்குள்.

வருந்தி அழுதேன்.
ஓரு குடம் தண்ணீரை
கண்களால் கெளித்தேன்.
எழுந்த வியர்வை வடிந்து
கால் வழி வந்து
துளை ஒன்றில் புகுந்து கொண்டது.
பட்டுத் தொங்கியது
அவன் அறிவுப் பழுத்தோலை.

எறும்பையும் ஏசினான்.
பூவையும் வதைத்தான்.
மீண்டும் உரைத்தான்.
என்
உரலினுள் போட்டு இடித்தான்.

பேனாவைக் குத்தினேன்.
குரல்வளை சென்றது.
திரும்பிக் கத்தியது.
குடல் உருவி வாசித்தேன்.
மணத்தது என்றேன்.

தராசியைத் தட்டி
தூசியாய்ப் பறந்தது
மக்களின் வாக்குகள் என்றான்.
மீண்டும் அடித்தது வாடை ..
அந்த சந்தை புழுத்தது.

நாளை ஒரு மேடை
வர்ணமாய் ஜொலிக்க
பதில் சொல்லும் என்று.
வெங்காய மூட்டையை கிளறினான் வியாபாரி.
அதிரும் ஒரு தும்மலுடனும்;
ஒரு சீறலுடனும்.

டீன்கபூர் – இலங்கை

deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை