கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அகிலவெளித் தோற்றம்
புதிதாக
உதித்த போது, முதலில்
மகத்துவப் பேரொளியுடன் மின்னின
அனைத்து விண்மீன்களும்!
தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக
நெய்து கானம் பாடின:
“பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்
பூரிப்பில் ஏது கலப்பாட்சி?”
அப்போது
திடீரென எழுந்தது ஒரு குரல்:
“ஒளித்தொடரில் எங்கோ ஓரிடத்தில்
பிளவு தெரிகிறது!
வானில் இடைவெளி தோன்றும்,
விண்மீன் ஒன்று
காணாமல்!”
விண்மீன்கள் பதித்த பொன்வளையம்
முறிந்து போய்
அறுந்தது வீணையின் நாதம்!
நம்பிக்கை யிழந்து
வீரிட்டு
விம்மின மற்ற விண்மீன்கள்:
“அனைத்திலும் உயர்ந்தது
இழந்த விண்மீன்!
சொர்க்க உலகுக்கோர்
அற்புதம் அது.”
விண்மீனைத் தேடும்
முற்பாடு ஓயாமல் தொடர்ந்தது
அன்றைய நாள் முதல்!
ஒன்றிழந்ததால் சோக
விண்மீன் கூட்டம் குறையெனக்
கூக்குர லிட்டுப்
புண்பட்டன களிப்பிழந்து!
காரிருள் சூழ்ந்த வானில்
புன்னகை பூண்ட விண்மீன்கள்
தமக்குள்ளே
மென்மையாய்ப் பேசிக் கொண்டன:
“வீணான தேடலிது,
காணாமல் போன வான்மீனைக்
கண்டு பிடிப்பது!
முற்றுப் பெறட்டும்,
அற்றுவிடா முழுத் தோற்றம்
தேடும் படலம்!”

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 18, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா