விழிகளின் விண்ணப்பம்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி



சூரிய வெளிச்சம்
நட்சத்திரங்களாய் ஒழுகும் அந்த

ஓலைக் குடிசையிலிருந்து
ஓடி வந்தது
நிலவில்லை நீதான்

வந்து
ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும்
எந்தன் கிராமத்துப் பெண்ணே

உன் பார்வைகளால்
ஒரு
கிராமத்துக்கவிதையை
கிறுக்கிக் காண்பிக்கிறாய்.

விஞ்ஞானத்தின்
வினோதம் சொல்லிப்போகும்
அந்த விமானத்தின் வேகத்தில்
உன் விழிகளையும் பயணப்படுத்துகிறாய்.

மேகங்களுக்கு மேலே
மின்னலாய் உரசும்
அந்த
மெல்லிய பறவையை
உன் வீட்டுக்கூரையில் உட்கார கூப்பிடுகிறாய்.

சிறகசைக்காமல் பறக்கும்
இந்த
சின்னப்பறவையை சிந்திக்கிறாய்!
சிறகடிக்கச் சொல்கிறாய்!

பாட்டிக் கதைகளில் வரும்
சொர்க்கம் போல
விமானத்தைச் சிலர்
சொல்லக்கேட்டு
சுகப்பட்டுக் கொள்கிறாய்.

மண்ணைப்பிரிந்த ஏக்கத்தில்
இளைத்துப்போன இந்தப்பறவை
மண்ணில்
இறங்கிவிட்டதுமே
கொழுத்துப்போகிறதா என்று
குதூகலிக்கிறாய்

குழந்தைகளின் கண்கள்
உன்
விரலிலிருந்து
விண்ணைத் தொட்டன.
ஆகாயத்தில் நகரும்
அந்த
சத்தத்தின் முகவரியை
முதலில் நீதான் காட்டுகிறாய்

அப்போது நீ
“அதோ…அதோ… என்பது
காதுகளுக்குள் கானம்
கண்களுக்குள் வானம்.

உன் சந்தோசத்தில்
நானும் சலனப்பட்டுப் போகிறேன்!

என்
கிராமத்துப் பெண்ணே!
உன்னோடு நிற்கும் ஒருத்தியின்
கண்கள் மட்டும்
ஏன்
கலவரப்படுகின்றன?

ஆகாயத்தைப் பார்த்து
அச்சப்படும் பெண்
ஓ…
ஈழத்திலிருந்து
அகதியாய் வந்த
அவலைப்பெண்ணா அவள்?
(இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை)

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி