பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

பா.சத்தியமோகன்


2486.

அரிய வேதங்களும்

அவற்றின் வழிவந்தவைகளும்

அகன்ற பெரிய வானில் ஆரவாரித்து பெருமையுடன் முழங்க

ஐந்து துந்துபிகள் எனும்தேவ வாத்தியங்கள் முழங்க

செழுமையான அந்நகரம் விழா எடுக்க

பெருந்தகையினரான அவ்விரு பெரியோர்களும்

எதிர் எதிர் வணங்கிச் சென்று

தத்தமக்கு அமைந்த மடங்களிலே புகுந்தனர்.

2487.

எண்ணிலாத வேதங்கள் ஒன்று கூடி நெருங்கிச் செய்த

திறக்கவும் மூடவுமான பணியை

உயிர்களான நம்மிடம் வரும் குறைபாடுகளையெல்லாம்

நீக்குபவர்களாகி

திருநாவுக்கரசரும் பிள்ளையாரும் செய்து வைத்தனர்

நாதமே வடிவாகிய திருமேனி கொண்ட

கங்கை தாங்கிய சடையுடைய

இறைவரின் திருவடிகளைப் போற்றும்

இப்பெரியவர்களின் பெருமையை

யார்தான் அளவிட்டுக் கூற இயலும்!

2488.

வேதங்களில் இறைவர் முன்பு அருளிய

அந்த வேதத் தொகுதியையே சொல்கின்ற அளவு

ஒருமை உணர்வு உடைய இந்த இரு திருத்தொண்டர்கள்

தம் பெருமானிடம் உள்ள அருட்செய்கை போல

தானே செய்யும் அளவு வல்லவர்கள் எனில்

பெரிய வேந்தர்களுடன் மெய்த் தொண்டர்களுக்கு உள்ள ஒற்றுமை

மிகவும் பெரிது அல்லவா?

2489.

இவ்வாறு நினைத்து

திருமறைக்காட்டு இறைவரின் அருளை நினைத்து

மெய்மைத் திறம் தெரிந்து ஒழுகுகின்ற

வாக்கின் வேந்தராகிய திருநாவுக்கரசர் துயிலும்போது

திருநீலகண்டரான சிவபெருமான் சைவக்கோலத்தில் தோன்றி

காளையிலிருந்த வண்ணம்

“திருவாய்மூரில் நாமிருப்போம் அங்கே வா”

என்றருளி மறைந்தார்.

2490.

கண்ட அக்கணமே கைகள் குவித்து

உடனே விரைந்து செல்பவராகினார் நாவுக்கரசர்

மண்டிய காதலோடு பொருந்துவார் போன்றிருந்தும் காணாமல்

எட்டுத் திசையிலும் தேடியவர்க்கு

கிட்டுவது போலிருந்து கிட்டாமல் நின்ற –

தேவதேவரான சிவபெருமானின் பின்பு

மிகுந்து எழும் அன்புடன் சென்றார்.

2491.

திருநாவுக்கரசர் அந்த இடத்திற்குச் செல்ல

சண்பை தலைவரான சம்பந்தரும்

“அப்பர் எங்கு சென்றார்” என்று வினவினார்

“பொங்கிய காதலால் திருவாய்மூர் சென்றார்” என அறிந்து

அவ்விதம் செல்லக் காரணம் என்னவோ என ஐயம் கொண்டு

தாமும் அங்கு சேரச் சென்றார்.

2492.

அவ்வாறு சென்று

நாவுக்கரசர் இருந்த இடம் அடைந்த போது

அம்பிகையுடன் கூடிய திருகூத்து காட்டி அருள

“தளர் இளவளர்” எனும் பதிகம் தொடங்கிப் பாடி

தலை சாய்த்து வணங்கி

திருவாய்மூர் புகுந்து

திருநாவுக்கரசரோடு

திருத்தொண்டின் இனிய இயல்பு பொருந்த

இருவரும் இறைவரைத் துதித்தனர்

2493.

மிக்க இயல்புடைய திருவாய்மூரில் நிலவிய சிவனார் தம்மை

பாடும் சொல் பதிகத்தால் துதித்து

அந்தப் பதியில்தங்கி

பொருந்திய மெய்யான அன்பு மேலும் பொங்க

இருவரும் தங்கியிருந்து மீண்டும்

வேதங்கள் தேடும் இறைவரின் பாதம் காணப்பெற்ற

இறைவரின் திருமறைக்காடு வந்தனர்.

2494.

சண்பை நாடுடைய திருஞானசம்பந்தர்

தமிழ்மொழியின் தலைவரான திருநாவுக்கரசரோடு

பெரும் சிறப்புடைய செல்வம் நிறைந்த

திருமறைக்காட்டில் தங்கியிருந்து

நெற்றிக்கண் உடைய இறைவரின் திருவடி வணங்கிப் போற்றி

பண் பொருந்திய திருப்பதிகங்களைப் பாடித் துதித்தபடி

அங்கு எழுந்தருளியிருந்தனர்.

(“சிலைதலை” “பொங்கு” “கற்பொலி” எனத் தொடங்கும்

பதிகங்கள் திருமறைக்காட்டில் பாடப்பட்டன)

2495.

இவ்விதமாக இந்த இரு பெருமக்களும்

அந்தப் பகுதியில் தங்கியிருந்தனர்

இந்நாளில்

நல் ஒழுக்க நெறியிலிருந்து

இடைக்காலத்தில் தவறினான் தென்னவன் ! பாண்டிய நாட்டு மன்னன்!

உண்மை நெறியில் நில்லாத தீவினைப் பகுதியான

சமணசமயம் மிகுந்தது

நல் ஒழுக்க முறைமை சிதறிக் கலங்கும் காலத்தில்-

2496.

தென்னவனாகிய பாண்டிய மன்னனும்

முன் செய்த தீவினைப் பயனால்

அந்த சமண நெறியினையே அறமென நினைத்தான்

நிலை பெற்ற வாய்மை மிகுந்த

சைவ வைதீகம் வழக்கில் இல்லாது மாறி

நன்னெறி திரிந்து குற்ற நெறி நிகழ்ந்தது.

2497.

தமிழ்நாடான பாண்டியநாட்டின்

ஒப்பில்லாத சிறப்புடைய எல்லாத்தலங்களிலும்

பாழிகள் பள்ளிகள் எழும்பின

இருள் குழுக்கள்போல

மயில் பீலியுடன் நீர் கமண்டலங்களுடன்

சமணர்களே எங்கும் மொய்க்க-

2498.

மயிர்பறித்த தலையும்

பாயும் தடுக்கும் தாங்கி

உடல்மேல் செறிந்த முக்குடையும் கொண்டு

திரிகின்றவர் எங்கும் நிறைந்தனர்

தத்தம் அறிவில் அறிந்தபடி

அச்சமயத்தின் நூல் அளவில் அடங்கி

சைவநெறியில் சித்தம் செல்லாத அளவில்

அந்நாட்டில் உள்ளவர் வாழ்கின்ற காலத்திலே-

2499.

கட்டப்பட்டுள்ள வில்லினை உடைய பாண்டிய மன்னன் உய்யும் பொருட்டு

சோழன் பெற்ற செல்வம் பொருந்திய பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியும்

ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த அமைச்சரான குலச்சிறையாரும்

எனும் இருவரும்

பக்கத்தில் இல்லாததால் சைவநெறி அங்கு இல்லை.

2500.

அந்த நிலையில்

அந்த இருவரும்

பெறுவதற்கு அரிய தமிழ்நாடு அடைந்த தீமையின் பொருட்டு

தங்கள் உள்ளத்தில் அளவற்ற பரிவு கொண்டே

தாங்கள் ஓங்கிய சைவநெறியில் நின்று வாழ்ந்த தன்மை

கழல் அணிந்த பாண்டியன் முன்பு

வெளிப்படா வகையில் கொண்டு செலுத்தினர்.

2501.

இவ்வாறு

நெறியில் ஒழுகி வந்த

மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும்

ஏழுலகம் உய்யுமாறு தோன்றிய

வேத உள்ளுறை கொண்ட சைவசெந்நெறி

உலகில் பரவச் செய்பவராக விளங்கிய

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர்

திருமறைக்காட்டில்

அப்போது தங்கியிருக்கும் நிலையை

பாண்டிநாட்டின் நல்வினைப்பயனால் கேட்டு அறிந்தனர்.

2502.

அவ்விதம் கேட்டபோதே

சிந்தை கிளர்ந்து எழுந்து மகிழ்ச்சி பொங்க

காலை மலர்ந்த செந்தாமரை முகத்தராகி

வாட்படை கொண்ட குலச்சிறையார் என்ற அமைச்சரும்

அரசமாதேவியான மங்கையர்க்கரசியாரும்

தொலைவில் உள்ளவராயினும்

அவர்கள்

திருவடிகளை வணங்கியவரைப் போலாயினர்.

2503.

மிக்க பக்தி கொண்ட இருவரும்

நேரே கண்டு தொழ வேண்டும் என்ற கருத்தால்

“மலர்கள் மலரும் இடமான சோலைகள் சூழ்ந்த

சீகாழித் தலைவரான சம்பந்தரின் பாதங்கள் பணிவீராக”

என்று பரிவாரங்களுக்கு ஆணையிட்டு

வேதங்கள் மாதவம் செய்து வழிபட்ட

திருமறைக்காட்டிற்குச் செல்லுமாறு அனுப்பினர்.

2504.

அவ்விதம்

அவர்கள் இருவரும் அனுப்ப

முன்சென்ற

அந்த அறிவுடை மக்கள்

அந்த இடத்திலிருந்து நீங்கி

வளமையுடைய தமிழ்நாட்டின் எல்லை பின் நிற்குமாறு சென்றனர்

காடுகளும் ஆறுகளும் கடந்து வந்து

தேன் பொருந்திய தாழைகள் பூக்கும் நெய்தல் நிலமான

திருமறைக்காட்டின் வெளிப்பகுதி அடைந்தனர்.

2505.

திருமறைக்காட்டில்சேர்ந்து சீகாழிப் பதியில் தோன்றிய

அரிய மறையவரன பிள்ளையார் விரும்பி

இனிதாக அமர்ந்திருக்கும் செல்வப் பெருமடம் அடைந்தனர்

மேலும் மேலும் பெருகிய விருப்பத்தினால்

தாங்கள் வரும் முறைமையுடைய

தன்மைகளை எல்லாம் அறியும்படி

வாயில் காவலர்க்கு எடுத்துச் சொன்னார்.

2506.

அந்த வாயிற்காவலர்கள் மடத்துள் சென்று புகுந்து

“சோழன் மகளும், பாண்டிய மன்னன் தேவியுமாகிய

மங்கையர்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பியதால்

தங்களின் பொற்கழல் பணிவதற்கு வந்திருக்கிறோம்

என்று சிலர் வெளியே வந்து சொல்லினர்”

என்று வணங்கி

விண்ணப்பம் செய்து கொண்டனர்.

2507.

புகலி காவலரான சம்பந்தர் கேட்டார்

ஒப்பிலா அருள் மிகுந்தார் அகம் மலர்ந்தார்

“அவர்களை இங்கு அழையுங்கள்” என அருளினார்

ஞானசம்பந்தரின்

நகைமுகத்தின் செம்மையான இயல்பு நோக்கி

நல் தவமாந்தர்களான தொண்டர்கள்

தலையினால் வணங்கி நின்றனர்.

2508.

எழுந்து நின்றவர்களை நோக்கி

நிகரில்லா சண்பை மன்னரான சம்பந்தர் —

மங்கையர்கரசியாருக்கும்,

பெருமையுடைய மலை போன்ற மெய்யடிமைத்

திறம் கொண்ட குலச்சிறையாருக்கும் —

நன்மை நிலை விளக்கினார்

பிறகு

ஞானசம்பந்த பிள்ளையாரின் நற்பதம் போற்றியதும்-

2509.

“சமணர்களால் பாண்டியநாடு இழிநிலை அடைந்து

தங்கள் மன்னனும்

அவர்களின் மாயத்துக்கு உட்பட்டு அழுந்திவிட்டான்

அதைக் கண்டு-

மாதேவியாரும்

வேலேந்திய வெற்றியுடைய குலச்சிறையாரும் கூடி

இந்நிலைமையை

சீகாழிவேந்தருக்கு சென்று இயம்புக என்று கூறி

வணங்கி எங்களை அனுப்பினர்”

2510.

என அவர்கள் விண்ணப்பித்த பிறகு —

“காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானின் தொண்டர்கள் எல்லாம்

நன்றாக நம்மை ஆளுடைய இறைவரின் திருவடியைச் சாராத

அளவற்ற சமணர்களாகிய குண்டர்களை

வெற்றிக் கொள்ள வேண்டும்

வேத நெறியே எங்கும் விளங்கச் செய்து

அங்கு நிகழும் ஒழுக்கங்கள் யாவும்

சிவனடியார் செயல்களாக ஆகும்படி

தங்கள் திருவுள்ளத்தில் நினைந்தருள வேண்டும்”

என்று நின்று துதித்தனர்.

2511

இவ்வாறு

வேண்டியவர்களுக்கு அருள்புரிந்து சம்பந்தரும் வாகீச முனிவரும்

காளைக்கொடி உடைய இறைவரின் பாதம் பணிந்து

வெளியே வந்து

பெரிய திருகோபுரத்திற்குள் இருவரும் எழுந்தருளினர்

பாண்டியநாடு அடைந்த நிலைபற்றி

பாண்டிமாதேவியரும் குலச்சிறையாரும்

தமக்கு உரைத்த வார்த்தையை சம்பந்தர்

நாவுக்கரசருக்குக் கூறி

அதன் காரணமாக

பாண்டி நாட்டுக்குச் செல்வதற்குத் துணிந்தபோது-

2512.

திருநாவுக்கரசர் கூறினர்:

“பிள்ளாய்

அந்த சமண வஞ்சகரின் செய்கைக்கோர் அளவு இல்லை

மேலும் யாம் சொல்வது ஒன்று உண்டு

கோள் நிலைகளும் தீயனவாய் உள்ளன

அங்கே செல்ல உடன்படுவது தகாது” என்றார்

இறைவனைத் துதித்தார்

சீகாழித் தலைவரான சம்பந்தர்(புகலி வேந்தர்)

“வேயுறு தோளி பங்கன்” எனத் தொடங்கும் பதிகம் அருளினர்.

2513.

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த அந்தத் திருப்பதிகம் கேட்டபின்

திருந்திய திருவுள்ளம் கொண்டார் திருநாவுக்கரசர்

சம்பந்தப் பெருமான் பாண்டிநாடு செல்ல உடன்பட்டார்

எப்போதும் போலவே

நாவுக்கரசர் அவர் முன்பாகச் செல்லமுயன்ற போது

திரிபுரம் எரித்த இறைவரின் மகனாரான பிள்ளையார்

“அப்பரே! இந்தப் புனல் நாட்டில்(சோழ நாட்டில்)

எழுந்தருளி இருப்பீராக” என்று

கைம்மலர்கள் கூப்பி வணங்கி

அவரது வணங்கும் செயல் தவிர்த்தார்

வாக்கின் காவலரும் (நாவுக்கரசர்)

அரிய உள்ளத்துடன் இசைந்தார்.

2514.

வேதநெறி வளர்ப்பதற்கும் சைவத்தை விளக்குவதற்கும்

திருமறைக்காட்டின் இறைவரை மீண்டும் புகுந்து

நிலத்தில் விழுந்து

வணங்கி எழுந்து

பாடியும் போற்றியும்

அருள் விடை பெற்று வெளியே வந்தார்

மாதவமுடைய வாகீசர்

மறுக்க முடியாதபடி அவரை வணங்கி

அருள் செய்து விடை தந்து

நிலை பெற்ற விருப்பத்துடன்

காதலுடன்

அருமை பொருத்து அளவளாவி

நீங்கிச் சென்றார் சீகாழித் தலைவர்

ஒளியுடைய முத்துச் சிவிகையின் பக்கத்தில்.

2515.

திருநாவுக்கரசரும் அங்கேயே தங்கினார்

இங்கு ஞானசம்பந்த பெருமான்

செழுமையான தன்மையுடைய முத்துக்கள் நிறைந்த

பெரும் புகழ் மிக்க சிவிகை மீது ஏறி

காளைக்கொடி உயர்த்திய இறைவரின் திருவடிகளை

தலை மீது பேணும் உள்ளத்துடன்

இறைவரின் ஒப்பில்லாத திருஐந்தெழுத்து ஓதி

இறைவரின் திருநீற்றோடு விளங்கும்

திருமேனி எண்ணினார் கைதொழுதார்

நெஞ்சில் வருகின்ற இறைவரின் நாமத்தால்

அன்பு உருகிப் பெருகியது

கடலோசைபோல அடியார்களின் அரகர அரகர ஒலி

அப்போதே உலகம் எங்கும் நிறைந்தது.

2516.

பெருகி எழுந்தனர்

திருத்தொண்டர்கள் துதிகளால் போற்றினர்

எங்கும் மங்கல வாத்தியங்கள் மழையென முழங்கியது

சங்குகளும் படகங்களும் மேகம் போல ஒலித்தன.

எங்கும் எழுந்து பறக்கும் கொடிகள் வான்வெளியை மறைத்தன.

–இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்