இயற்கையின் மர்ம முடிச்சு

This entry is part of 42 in the series 20060505_Issue

தேவமைந்தன்


நீலப்பச்சை மின்நிறம் கொண்டு
உருண்டு திரண்ட சிறுவண்டு,
சிவ்வென உயரவும் தாழவும் பறந்து
சரக்கறை மேற்சுவர் தொங்கிய விளக்குக்
குமிழைச் சுற்றிப் படர்ந்து பின்னிய
சிலந்தியின் வலையில் மாட்டிக் கொண்டது.
மாட்டிக் கொண்டோம் என்பதனாலே
மனம்தளராதஅவ் அழகிய வண்டு
தலைகீழாகத் தொங்கியபடியே – ஓயாது
முறுகிய கம்பிக் கால்களை உதைத்தும்
சின்னஞ் சிறிய சிறகுகள் விசைத்தும்
சுழன்றபடியே ஆடிஆடியும்,
மேலும்மேலும் இறுக்கும்
எச்சில் வலையை மதியாது
விடுதலை முயன்றது – நான்
வெளியே சென்று திரும்பி
வந்து பார்த்தால் சிலந்தி வலையின்
தொங்கிய கோணத்து
இழைகளும் காணோம். அந்தச் சிறிய
அழகிய வண்டும் காணோம்.
அதுசரி. அருகில் எந்தச்
சிலந்தியும் காணோம்..
எதனாலே?

****
karuppannan.pasupathy@ gmail.com

Series Navigation