அப்பாவின் அறுவடை

This entry is part of 42 in the series 20060505_Issue

றகுமான் ஏ. ஜெமில்


சடை துயரினது சலிப்பின் பின்னான
பனிதூரும் இவ்விரவில்
அதிகாலை குமியும் அறுவடைபற்றி
அலாதியாக கதைகளாடினார் அப்பா
நடுவுற்ற சாமம் வரையிலுமாக

அக்காவின் திருமணம் நிகழ்த்துவதுபற்றியும்
அடகிலிருக்கும் அம்மாவினது
ஆபரணங்கள் மீட்பதுபற்றியும்
எனக்கும் சைக்கில் வாங்கித் தருவதாயும்
கதையாய் சொன்னார் அப்பா.

எங்கோ சற்றுத் தொலைவினில்
துப்பாக்கி இரைச்சலில் அடங்கும்
காட்டுப் பூச்சிகள் முதற்கொண்டு
குஞ்சு குரால்கள் வரைக்குமாக
மிகவும் பரிதவித்தும்போனார் அப்பா

இன்னும் வானம் இருள்மண்டிப் போனதுபற்றியும்
அடைமழை பெய்யுமாயின்
தனதின் எல்லாவிதமுமான தூபங்களும்
கனவுக் கத்தைகளும் மூழ்கிவிடலாமென்றும்
அதிகம் சங்கடமும் கொண்டார்

அதிகாலை வெருட்டியை கொத்தியபடியாக
காக்கையும் கழுகும் வட்டமிட்டது
குருவி விரசும் சிறுவன் சொன்னான்
என் அப்பாவை யாரோ அறுவடைசெய்து
வயற்காட்டில் போட்டதாக.

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

Series Navigation