மிஸ் இந்தியா

This entry is part of 41 in the series 20060421_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பாதச் சிலம்புக்கு
பதியைப் பலி கொடுத்து
பாண்டிய னுக்கு நீதி சொன்ன
காண்டீபப் பெண் ணில்லை!
எமனிடம் வாதாடி
குமரன் உயிர் மீட்ட
உமையவ ளில்லை!
கண்கண்ட தெய்வத்தைக்
குன்றின் மேலிருந்து
குப்புறத் தள்ளிய
ஒப்பில்லா பெண்ணில்லை!
கொம்புத்தேன் நாடும் காலற்ற
ஆடவனைக்
கூடையில் சுமந்து
வாடகை மாதர் வாசலில் விட்டு,
உப்பிட்டு உவப்ப ளித்து
சிப்பிக்குள் காத்திருக்கும்
சிந்தாமணி யில்லை!
மேனி மினுக்கி
நாணும் நீச்சல் உடையில்
எழிற்பெண் போட்டியில்
தாரணி மேடையில்
ஆரணங்காய் ஊர்ந்து வரும்
ஊர்வசி யில்லை!
நள்ளிரவு வரை
தீப்பெட்டி ஒட்டிப் பகல் வேளை
பள்ளியில் படித்து,
முதலாகத் தேர்ச்சி பெற்று
வேலை தேடிப் போகையில்,
நாற்புறமும் விசிலடித்து
வாலிபக் கூட்டம்
வேங்கை போல் விரட்டக்
காயப் பட்டு
வேர்த்து விழப் போகும்,
நாரிமணி!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 17, 2006)]

Series Navigation