பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

பா.சத்தியமோகன்


2300.

அரிசில்கரைப்புத்தூரில் இனிதே தங்கியிருந்த நாளில்

வெண்பன்றி உருவாய்

சிவந்தகண் உடைய திருமால் வணங்கும் சிவபுரம் சென்றடைந்து

கங்கையைச் சடையில் மறைத்த சிவனாரின் கழல் வணங்கி

காதலினால் இசைபெருகும் திருப்பதிகங்களை

திருமுன்பு போற்றி இசைத்தார்.

2301.

எவ்வுயிரையும் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும்

திருத்தோணிப்புரத்தில் தோன்றிய புனிதர் அருள் பெற்ற பிள்ளையார்

காளை மீது வருதலை விரும்பிய இறைவரைத் துதிக்க

நான்கு திசையில் உள்ளவரும் வணங்கும்

திருக்குடமூக்கு எனும் தலம் அடைந்தார்.

2302.

தேன் மருவும் மலர்ச்சோலைகள் நிறைந்த

திருக்குடமூக்கினில் வாழ்கின்ற

செல்வப் பெரு மறையோர் வேத ஒலி செய்தனர்

மங்கல வாத்தியங்கள் ஒலித்தன

மன்னரை எதிர் கொள்வதுபோன்ற பெருமையுடன் எதிர்கொண்டு

தமது பதிக்கு அழைத்துச் சென்றனர்.

2303.

திருகுடமூக்கினைச் சேர்வதற்காக திருஞானசம்பந்தர்

தம் இறைவனான சிவபெருமானை

வண்மையுடைய தமிழ்ப்பதிகத்தால்

உள்ளம் உருகி மகிழ

“குடமூக்கை உவந்திருந்த பெருமான எம் இறை” எனப்

பெருகிய இசையால் பாடினார்.

(“அரவிரி” எனத் தொடங்கும் பதிகம் இங்கு அருளினார்)

2304.

பிறகு

திருக்கீழ்க்கோட்டத்திலிருந்த வான்பெருமானை

சிந்தை மகிழ்வுற வணங்கினார் பிறகு

திருத்தொண்டர்களுடன் அந்தணர்கள் புடை சூழ

மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த

திருக்காரோணம் சென்றடைந்தார்.

2305.

மலர்கள் பொருந்திய கங்கை முதலான பெரும் தீர்த்தங்கள்

மாமகத்தில் ஆடும் பொருட்டாக

வந்து வழிபடும் அக்கோயிலை

தூய்மையான மலர்போன்ற கைகளால் தொழுது

வலம் வந்து

மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த இறைவரின்

கழல் பணிந்தார் கண்களித்தார்.

2306.

கண்ணில் பொருந்திய அரிய மணிபோன்றவரை

திருக்குடந்தை காரோணத்தில் எழுந்த அமுது போன்றவரை

பகைவரின் முப்புரம் எரித்த நான்மறையின் பொருளாக உள்ளவரை

பண்ணினால் பொருந்திய திருப்பதிகத்தால்

ஞானசம்பந்தர் பணிந்தேத்தினார்

பிறதலங்களையும் சென்று வணங்க எண்ணி

பெருமையுடைய அடியார்களுடன் புறப்பட்டார்.

2307.

திருநாகேச்சரத்தில் அமர்ந்த செம்பொன் தனிக்குன்று போன்ற

கருயானைத் தோல் உரித்துப் போர்த்துக் கொண்ட

கண்நுதல் இறைவரைச் சென்று இறைஞ்சி

அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்தார்

ஞானம் பெருகும் சம்பந்தர்–

பெருகிய ஆர்வமும் அன்பும் கொண்டு இன்புற்றார்.

(“பொன்னேர் தருமே” எனத்தொடங்கும் பதிகம் இங்கு அருளினார்)

2308.

ஆதிசேடன் எனும் மாநாகம் அருச்சித்த

இறைவரின் தாமரை போன்ற தாள் வணங்கி

நாள்தோறும் வணங்குபவரின் பிணி தீர்க்கும் நன்மையினை போற்றி

ஞானப்பால் மணம் கமழும் திருவாயினை உடைய பிள்ளையார்

பூக்கள் மலர்ந்து மணம் வீசும்

காவிரியின் வடகரை வழியே சென்று

திருவிடை மருதூர் சென்று புகுகின்றார்.

2309.

“ஓடேகலன்” எனத் தொடங்கும் ஓங்கு புகழ் திருப்பதிகத்தால்

தாங்கவியலா பெருமகிழ்ச்சி மென்மேலும் சிறந்தது

சிறந்த பெருமகிழ்ச்சியின் தன்மையினால்

“ஈங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும்

திருவிடைமருது இதுதானோ” என்று கருத்துடன்

நல்லியல்புடைய இன்னிசையால் பாடி

அப்பதியினுள் எழுந்தருளினார்.

2310.

அடியவர்கள் எதிர்கொள்ளுமாறு

அங்கு எழுந்தருளினார் பிள்ளையார்

முடிவிலாத பரம்பொருளான

இறைவரின் பெருங்கோயில் முன் இறைஞ்சினார்

நிலத்தின் மீது வலம் வந்து திருமுன்பு எய்தினார்

பூமி மீது நெடிது பணிந்து எழுந்து

அன்பு நிறைவதால் கண்ணீர் இடையறாது வழிய-

2311.

இறைவரைப் பரவி வாழ்த்தும் தமிழ்ப் பதிகம் பாடி

அந்தப் பதியில் தங்கியிருக்கும் சம்பந்தர்

மேலும் பல திருப்பதிகங்கள் பாடினார்

வெண்மதியோடு பாம்பினைச் சடையில் அணிந்த பெருமானின்

திருவடி போற்றினார்

ஆர்வத்தால் அங்கு தங்கியிருந்த காலத்தில் —

[ “தோடொர்”; “மருந்தவன்” ; “நடைமரு”; “விரிதரு”;

“பொங்கு நூல்”; எனத் தொடங்கும் பிற பதிகங்கள் பாடி அருளினார்]

2312.

பக்கத்தில் உள்ள பதிகள் பல பணிந்தார்

காவிரி மாநதிக்கரை போய் திருக்குரங்காடுதுறை சேர்ந்தார்

இறைவரின் ஒலிக்கும் கழல் பூண்ட திருவடிகளை

பெரும் காதலால் பணிந்து

பேணிய இன்னிசை பெருக

அரிய கலை நூல்களின் பொருள் விரிக்கும்

திருப்பதிகம் பாடி வணங்கினார்.

(“பரவக்கெடும்” எனும் பதிகம் குரங்காடுதுறையில் அருளினார்)

2313.

தாமரை மலர்கள் நிறைந்த தடங்கள் கொண்ட

அந்தத் தலத்தை வணங்கிய பின்

அருகிலுள்ள

திருநீலகண்டமுடைய இறைவரின் கோவில்களை வணங்கி

நம் பாசத்துன்பங்கள் நீக்க அவதரித்த ஞானச்செம்மல் சம்பந்தர்

திருவாடுதுறை சேர்ந்தார்.

2314.

அயன் முதலான மூவருக்கும்

அறிவதற்கு அரிய மூலத் தேவரான சிவபெருமானின் திருவாடுதுறையில்

வாழ்கின்ற திருத்தொண்டர்கள் —

மலர்கள் வாரி வரும் குளிர் நீர்பொய்கைகளும்,

வயல்களும் உடைய புகலி (சீகாழி)க்காவலரை எதிர்கொண்டு

பெருகும் ஆதரவுடன் கலந்தார்.

2315.

வந்தணைந்த தொண்டர்கள் தொழுவதற்கு முன்பே

விரியும் புகழுடைய

சண்பை (சீகாழி) அந்தணர்களுக்கெல்லாம்

அரிய மறையின் பொருள் இவர் எனும்படி தோன்றிய பிள்ளையார்

அழகிய நித்தில (முத்துச்) சிவிகை விட்டிறங்கி

அவர்கள் எதிரில் வணங்கி

சிந்தை இன்புற

இறைவரின் திருக்கோயில் முன் சென்றார்.

2316.

நீண்ட கோபுரம் இறைஞ்சி உள்புகுந்தார்

நிலையானவர் வாழும் —

செல்வத் திருமாளிகையை வலம் வந்து வணங்கினார்

அருட்பெரும் கூத்தாடுகின்ற ஆதிப்பொருளை

திருவாடுதுறையின் அமுதத்தை

நாடிய காதலுடன் பணிந்தெழுந்து

அரிய தமிழால் திருப்பதிகம் நவின்றார்.

2317.

அன்பால் பெருகிய கண்ணீர்

அருவிபோல் பொழியும் ஆர்வமுடன்

திருமுன்பு போற்றினார்

வெளியே வந்த பிள்ளையார்

துன்பமிலா மனம் கொண்ட திருத்தொண்டர்களுடன் தொழுதார்

இன்பம் மேவி அப்பதியில் இனிதாய் விரும்பி வீற்றிருந்தார்.

2318.

விரும்பி அத்தலத்தில் தங்கியிருக்கும் நாளினில்

வேள்வி செய்வதற்குரிய காலம் வந்து சேர

வேள்விக்குரிய பொருள் பெற வேண்டும் எனக் கூறினார்–

சண்பையர் தலைவர்க்கு தந்தையான சிவபாத இருதயர்.

2319.

தந்தையார் மொழி கேட்டதும்

புகலியின் தலைவரான சம்பந்தருக்கு

“இருமைக்கும் இன்பம் அளிக்கும் வேள்வியை

நான் செய்ய வேண்டும்” என

முந்தைய நாளில் தந்தையார் மொழிந்த சொல் நினைவு கூர்ந்து

“அந்தமிலாப் பொருளாய் உள்ளவை

எமது ஆவடுதுறை இறைவரின்

திருவடித் தலங்கள் அல்லவோ ?” என எண்ணி எழுந்தார்.

2320

தேவரின் தேவரான இறைவர் மகிழும் கோவில் முன் சென்று

திருமுன்பு நின்று வணங்கி

பெரும் செல்வம் வேண்டிய தந்தைக்கு

“ஈவதற்கு ஒரு பொருளும் இல்லையே

உன் திருவடி தவிர வேறொன்றும் அறியேனே” என

இறைவரின் பேரரருளை வினவும் கருத்துடன்

செந்தமிழ்பதிகம் பாடத் தொடங்கினார்.

2321.

தொடங்கிய வண்டமிழ்ப் பதிகத்தில்

நாலடியின் மேல் இரண்டு சீர்கள் தொடுத்தார்

மேல் வைப்பாய்

தொடர்பு பெற வைத்த இனிய இசையால் துதிப்பார் ஆனார்.

நிறைந்த காதலால்

வள்ளலார் ஆன இறைவரின் திருவடி இணை வாழ்த்தி

பொருந்திய சிந்தையால்

அன்பு மிகுந்து அஞ்சலி அளித்தார்.

(“ இடரினும் தளரினும்” எனும் பதிகம் இவ்வகையில் அருளினார்)

2322.

விரும்பி இன்தமிழ் பாடிய ஞானசம்பந்தரின் விருப்பம் புரிந்து

அருளிய இறைவர் இன்னருளால்

அந்தச் சிறப்பை அருளும் சிவபூதம் விரைந்து வந்து

அகன்ற கல் பீடத்தின் உச்சியில் வைத்தது —

ஆயிரம் பசும்பொன் கொண்ட முடிப்பு (கிழி) ஒன்றை.

2323.

அவ்வாறு வைத்தபூதம்

அங்கு பிள்ளையார் முன் நின்று

நல் வாக்கினால் —

“வைத்த இம்முடிப்பு பொன் கொண்டதாகும்

இது நித்தனார் அருள் செய்தது

எடுக்க எடுக்கக் குறையாத செல்வம்” என உரைத்தது

அத்தனார் திருவருள் நினைந்து

நிலத்தில் வீழ்ந்து வணங்கினார் சம்பந்தர்.

2324.

வணங்கி எழுந்து கைதொழுதார்

முன்னால் –

பனிமலர் பீடத்தில் வைக்கப்பட்ட ஆடகக் கிழிதலை

தலை மீது எடுத்து வைத்துக் கொண்டு

மறைகளின் முடிவாய் நின்ற

வான்பொருளான இறைவர் அளித்த அந்தப் பொருளை

தூய வாய்மையால் தணிந்த மனமுடைய தந்தைக்குத் தந்து

களிப்புற்றுச் சொல்லத் துவங்கினார்;-

( ஆடகக்கிழிதல் –
பொன்முடிப்பு )

2325.

“ஆதியில் உருவான மகாவேதங்களின் விதி முறைப்படி

முழுமுதற் பொருளான சிவனாரை

கங்கை முடித்த சடையனாரை நினைந்து

புரிகின்ற நல்வேள்வி

தீமை நீங்கி இன்பம் செய்ய நீவீர் துவங்க –

திருக்கழுமலத்து வேதவேதியர் யாவரும் செய்வர்

குறைவிலாது மிகும்” என

(திருக்கழுமலம்- சீகாழி)

2326.

என்று கூறி அங்கு தம் தந்தையை அனுப்பி வைத்தபின்

பெரிதும் இன்புற்ற மனதோடு புகலி சென்றார் சிவபாத இருதயர்

வெற்றியுடைய ஞானசம்பந்தரும் விருப்போடு வணங்கினார்

மணம் மிகுந்த திருவாடுதுறையில் மகிழ்வுடன்

இனிதாய் அமைந்திருந்தார்.

2327.

திருவாடுதுறையில் வீற்றிருந்த இறைவரை

உள் நினைந்து நிறைந்த காதலினால் பணிந்தார்

அங்கு உறைந்திருந்தார்

மண் (உலகு) உய்யும் பொருட்டுத் தோன்றிய பிள்ளையார்

சடையில் தெளிந்த பிறைச்சந்திரனைச் சூடுகின்ற சிவனாரின்

திருக்கோழம்பம் சேர்ந்தார்.

2328.

கொன்றைவார் சடைமுடியாரை

திருக்கோழம்பலத்தில் இறைஞ்சி

என்றும் நிலைத்த இன்னிசைப் பதிகத்தைத்

திருமுன்பாக இயம்பினார்

பிறகு

நிலைத்த மகிழ்வோடு இறைவர் வீற்றிருக்கும்

திருவைகல் மாடக்கோயில் சார்ந்தார்

முத்திச் செல்வம் வளரும் இடமான சீகாழிச் செல்வர்.

(“நீற்றாணை” எனும் பதிகம் இங்கு அருளினார்)

2329.

வைகலில் நீண்ட மாடக்கோயிலில்

பொருந்திய பெரு மருந்தான இறைவரைக்

கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்தன

கண்கள் அருவி செய்தன

இன்னிசைச் செந்தமிழ்ப் பதிகமாலைகள் மொழிந்தார்

துதித்து நையும் உள்ளத்தவரானார்

பின்

திருநல்லம் எனும் தலம் அடைந்தார்.

2330.

நிலைத்த மாளிகைகள் கொண்ட திருநல்லம் உறைந்த

நீடு மாமணியாகிய இறைவரின் சேவடி இறைஞ்சினார்

இனிய தமிழ்ப் பதிகத்தால் துதித்து

இறைவர் உறையும் பலவும் பணிந்து சென்றார்

பிறகு

அலைகள் உடைய நீர் சூழ்ந்த

திருஅழுந்தூர் எனும் கோயில் அடைந்தார்.

(“ துளமதியுடைய மதி” எனும் பதிகம் திருவைகலிலும்,

“கல்லாநிழல்” எனும் பதிகம் திருநல்லத்திலும் அருளினார்)
— இறையருளால் தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்