நாணல்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


அலைக்கெல்லாம்
வளைந்து நெளிந்து வாழ்கிறதே

நாணலுக்கு
தலைக்கனமே இல்லை என
நாணலின்
உச்சியில் உட்கார நினைத்து
ஒரு குருவி கத்துகிறது.

நாணலுக்கு
தலையே இல்லை என்கிறது
குருவி.

குருவியை
தலையாய் தாங்காமல்
தள்ளிவிடுகிறது
வளைந்து வளைந்து நாணல்.

தலையே இல்லாவிட்டாலும்
இன்னொன்றின் தலையோடிருக்க
ஏற்காத நாணலுக்கு
இந்த
தன்மானம்தான் தலையோ!

குருவி
கோரை நாணலெல்லாம்
தன்
குடும்பமென கூறி சிரிக்கிறது.

சருகாகியும்
தன்கூடாகும் தாயின்மடி என்கிறது.

அலையின்
இழுப்புக்கு போகாமல்
நழுவுகிற நாணல்
நழுவியும் தழுவுகிறது.

நாணலுக்கு
நம்பிக்கை அதிகம்.

ஆழம் தெரிந்தே
காலை வைதிருக்கிறது.

இந்த
நம்பிக்கையின் உச்சியில்
அமர்ந்துப் பார்க்க குருவிக்கு
ஆசை விளையாட்டு.

ஓடும் அலையோடு
ஒத்துப்போகும் நாணலுக்கு
தன்மேல்
உட்கார நினைக்கும் குருவியோடு
உடன்பட முடியவில்லை.

இப்போது
நாணல் நிமிர்ந்து நின்றது
தலையோடு.

குருவியின் கால்விரல்கள்
நாணலை பிடித்து
அது
சிறகடித்தும் பறக்காத
சிறுபொழுதில்…

குருவி
அலையாய் சிறகடிக்க
நாணல் சிறகோடு சேர்ந்திருக்க…

நாணல்கூட
இயங்குகிற எதற்குந்தான்
ஒத்துப்போகுமோ ?
இயக்கம் இன்றேல்
தலையும் சுமையோ ?


பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி