கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 47 in the series 20060224_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நானறியாத புதிய தோழர்களைத்
தானாக அறிமுகம்
பண்ணி வைத்தாய் எனக்கு!
என்னை வரவேற்று உபசரிக்க
அன்னியர் இல்லத்தே
ஆசனங்கள் அளித்தாய் நீ!
தூரத்து மனிதரை அழைத்து எனது
ஓரத்தில் அமர வைத்தாய்!
தெரியாத வழிப்போக்கனை
உரிமையாய் எனக்குத்
தமையனாய் ஆக்கினாய்!
பிறந்தகம் விட்டுப்
பிரிய நேர்ந்திடும் போது,
கரிந்து போனதென் உள்ளம்!
புதிய தளத்தில் என் பூர்வத் தடம்
பதிந்திருந்தது,
மறந்து விட்ட தெனக்கு!
நிறைந் தங்கே நீ
இருப்பதுவும்,
தெரியாமல் போன தெனக்கு!

பிறப்பு, இறப்பு மூலமாகச்
மானிடர் தோன்றும் இவ்வுலகிலும்,
அடுத்துப் புகும் உலகிலும்,
முடிவில்லாமல் சுற்றி வரும்,
வாழ்க்கை நியதிக்கு
வழிக்காட்டித்
துணைவன் நீ ஒருவனே!
முன்பின் தெரியா தவரோடு
என்னைப் பந்த பாச மென்னும்
உன்னதப் பிணைப்பில்,
பின்னி யிருக்கிறாய் நீ!
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு
அன்னியர் ஆகார்!
என்னை அவர் அண்டி வந்தால்,
கதவுகள் சாத்தப் படா!
வாழ்க்கை மேடையில்
திருவிளை யாடுவோன்
உருவினைத் தொட்டு,
உவப்புடன் வணங்கி அவனை
ஒருபோதும்
மறவா திருக்கும் மனத்தை
அருள்வாய் எனக்கு!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 19, 2006)]

Series Navigation