கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 45 in the series 20060120_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எங்கே நிற்கிறாய்,
எல்லோருக்கும் பின்னே ?
நிழலில்
ஒளிந்திருக்கும் காதலனே!
உன்னைத் தள்ளிக் கொண்டு
துச்சமாய் எண்ணி,
தூசி நிரம்பிய வீதியில்
காணாது போகிறார்,
அநேகர்!
ஆராதனைப் படையல் சமர்ப்பித்து,
நேரமாய்க்
காத்திருக்கிறேன்
களைத்துப் போயிங்கு!
பூக்கூடையும் காலியாய்ப் போனது,
போவோர், வருவோர்
பூக்களைத்
தூக்கிச் செல்வதால்!
காலைப் பொழுதும் விடை பெற்றது,
பகலிடம் விட்டு!
மாலை வேளையின் மந்தார
மயக்கத்தில்
தூங்கி விழும் எனது
விழி இமைகள்!
வழியில் போவோர்
என் வெட்க நிலை நோக்கி,
சிரித்துச் செல்கிறார்
ஏளனமாய்!

பிச்சை எடுக்கும் பேதைபோல் குந்தி
முந்தானையில்
மூடி உள்ளேன் முகத்தை!
என்ன வேண்டுமென
கேட்போர்க்கு
எதுவும் கூறாது கிடக்கிறேன்,
தலை சாய்ந்து!
வருவதாய் நீயோ
வாக்களித்தாய் எனினும்,
உனக்கு நான் காத்துக் கிடப்பதை
உறுதியாய் எப்படி
உரைப்பேன் அவரிடம் ?
வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
வறுமையை வைத்துளேன்,
உனக்கு
வரதட்சணை வழங்க!
இரகசியமா யிருக்கும் இந்த அவமதிப்பு,
இதயத்தில்!
தங்க ஒளி தகதகவென மின்னி
பொற்கொடி பறக்கும் உன்
வாகனத்தில் கண்முன்னே நீ
வருகின்ற
கனவுக் காட்சியைக் காண
மண்வெளிப் புல்லில் அமர்ந்து
நோக்கு கின்றேன்,
விண்வெளியை!

கந்தைத் துணி உடுத்தி,
அகந்தை யுடன்
பந்தல் கொடிபோல் தென்றலில்
நடுங்கு மிந்த
பிச்சைப் பெண்மணியை,
ஆசனத்தை விட்டுக் கீழிறங்கி
தூசி மண்ணி லிருந்து
தூக்கி,
பக்கத்தில் வைத்துக் கொள்வாய்!
நேரம் போகிறது!
ஆயுனும் உன்
தேரோடும் சக்கரங்களின்
ஆரவாரம் கேட்டிலேன்!
கும்மாளம் போடும் கூட்டமும்
கோலாகல மோடு
சும்மா போகிறது!
நிழலில் மெளனியாய்
எல்லாருக்கும் பின்னிற்பவன்
நீதானா ?
காத்துக் கிடந்து களைத்துப் போய்,
இதயம் துண்டாகி
வீணாக
வேதனையில் அழுதிடும்
பேதை
நான்தானா ?

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 15, 2006)]

Series Navigation