ஒற்றித் தேய்ந்த விரல்

This entry is part of 34 in the series 20051209_Issue

மு.பழனியப்பன்


கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன
சுடுமணலில் அரிச்சுவடி வரைந்து
ஆங்கில எழுத்து
புளியங்கொட்டையில் நிறுத்தி
பால்கணக்கு எழுதி
விரல் விட்டு கணக்கு அறிந்து
எழுதி அழித்து எழுதி
கை நாட்டு பத்திரத்தில் வைத்து

நாதொட்டு பணம் எண்ணி
காசு அடுக்கி
சமையல் பாத்திரம் கழுவி
சமைத்த உணவு சுவை தேர்ந்து
கதவு தட்டி
பேருந்து கம்பி பிடித்து
அவசரத்தில் மிதிவண்டி பிடித்து
ஆயாசமாய் வண்டி ஓட்டி
மின்சாரப் பொறி இயக்கி
தொலைபேசி எண்கள் சுழற்றி
தட்டச்சுப் பொறி தட்டி
கணினி கைப்பிள்ளையைத் தொட்டு

கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன
மூளையின் வேகம் மெல்ல
விரல்களில் இறங்கிட
கைகளின் விரல்கள் தேய்ந்துவிட்டன

இன்னும் உள்ளன
கால்களில் விரல்கள்

muppalam2003@yahoo.co.in

Series Navigation