இமைகள் உரியும் வரை….

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

ருத்ரா


====

முகவரி இல்லாத
கவிஞன் நான்.
பரிவட்டங்கள் சூடப்படும்
சூட்சுமங்கள்
தெரிந்து கொள்ளும்
தெம்பற்று
முதுகெலும்பு இல்லாதவனாய்
எங்கோ நான் இருந்தபோதும்
என் முதுகெலும்பே
இந்த பேனா தான்.
நூலேணி இதில் கட்டி
வானத்தின் முதுகு சொறிய
கிளம்பி விட்டேன்.
வைரமுத்துக்கள்
உமிழ்ந்து முடித்த
நுரைமணல் கரையோரம்
கிளிஞ்சல்கள்
உழுதுசெல்லும் வரிகளே
நான் வார்ப்பது.
தினம் தினம்
அவன் கசக்கிப்போடும்
வானத்தை நீவி விட்டு
நானும் கொஞ்சம்
வானவில்லின் ஏழுவர்ண
ரத்தம் பாய்ச்சி
இந்த ‘திண்ணை ‘யில்
கவிப்பாசனம் செய்து வருகின்றேன்.
கண்டு நீங்கள்
களிப்படைந்தால்
அது போதும் நண்பர்களே!

பா.வி களும்
பழனிபாரதிகளும்
தபூசங்கர்களும்
முத்துக்குமார்களும்
இன்னும்
இத்யாதி இத்யாதி
காதல் வியாதியின்
சொரியாசிஸ் பிடித்த
ஜிகினாக்கவிஞர்களும்
அந்த வைரமுத்து எனும்
கவிதைக்கடலோரம்
ஓடித்திரிந்து
அவன் துப்பியெறிந்த
கடற்பாசிகளை
கைநிறைய எழுதி
காசுபார்க்கும்
கூட்டத்தோடு கலக்க முடியாத
இந்த
நத்தைக்கூட்டைப் பற்றி
நீங்கள் கவலைப்படத்
தேவையில்லை.
ஒரு நாள்
இந்த சூரியப்பிழம்பைப்
பிய்த்துக்கொண்டு
வரும் சிறகுகளுக்காக
காத்திருங்கள்.
அப்போது புரிந்து கொள்வீர்கள்
இது வரை
வர்ண வர்ணமாய்
நீங்கள்
கும்பாபிஷேகம்
கொண்டாடிக்கொண்டிருப்பது
ஒரு இருட்டுக் கடவுளுக்கு என்று.

டி.எஸ் எலியட்
எழுதினான்.
‘இந்த சப்பாத்திக்கள்ளிகளைத்
தொடர்ந்து
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அதி காலை ஐந்து மணியிலிருந்து… ‘
ஆம் இன்னும்
நாம் அந்த முட்காடுகளில்
ரோஜாப்பூவை
தின்று தீர்க்க
ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த கவிஞர்கள்
கோப்பையில்
சதைக்காதலின்
சூடான தீயை ஊற்றி
உங்களுக்கு நீட்டுகிறார்கள்.
உங்களை ‘சூப் வைத்து ‘
உங்களுக்கே
குடிக்க தரும்
கலைஞர்கள் அல்லவா இவர்கள்.

அந்த அதிகாலை
ஆதாம்-ஏவாள்களின்
தொப்பூள் கொடியை ஏற்றி
‘கொடிதினம் ‘
கொண்டாடிக்கொண்டிருக்கும்
இந்த குரோமஸோம் பிசாசுகளின்
கனவுப்பிறாண்டல்களில்
கன சதுரமாய் நீண்டுகிடக்கும்
கல்லறைப்பெட்டிகளில்
கொஞ்சம் கண்மூடுங்கள்.
உங்கள்
இமைகள் உரியும் வரை.
உங்கள்
இதயங்கள் தெரியும் வரை.

====ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>

ருத்ரா

ருத்ரா