ஆயினும் – இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

கலாப்ரியா


ஐந்து நிலத்திலும்
அவள் போல் சாயலில்
ஒருத்தியையாவது
பர்க்க முடிந்தது
ஆயினும் மெய் தேடி
அலைந்த காலில்
ஐந்திணை வேர்களும்
பதியமிட்டு விட்டன

அவள் பெயரைச்
சொல்லியழைத்து
நன்றோ தீதோ
என்னால் வரக்கூடாது

எழுத்தாணியொன்றை
அழுத்தமாய்
நாவில்
அலகு குத்தியிருக்கின்றேன்

2) இதுகாறுமான
எழுத்துகளை
அழிக்கவுண்ணி

காவியம் தொடங்கி
கழிப்பறைச் சுவர்
கல் வெட்டு
வழிகாட்டி மரம்
என
ஒன்றையும் விடாது
அழித்துதிர்த்து
மயிலிறகாய்
மயிர்க் கற்றையாய்
அச்சிறும் வரை
பெய்தோம்

கடலோரம் வரை
பிரயாசையுடன்
எடுத்துச் சென்றோம்

வெற்றி பெற்று
சற்று ஓய்வாய்
நிலவுதிக்கும் வரை
கலவியைக் குறி வைத்து
காதல் மேற்கொண்டோம்

என் பெயரழிய நீ
எப்படிச் சம்மதிப்பாய்
என்றாய்
உணர்ச்சி மேலிட்டும்
ஒரு வகைக் கேலியோடும்

அலையின் மூர்க்க வருடலில்
அச்சிறுந்து
கரையெங்கும்
கற்றையாய் எழுத்துக்கள்
உள் வாங்கும் கடலுக்கு
உன்னையும் ஒப்புக்கொடுத்து

உன் மார்க்கச்சையுடன்
இரண்டு முற்றுப் புள்ளிகளுடன்
ஊர் திரும்பினேன்
என் பெயரற்று

– கலாப்ரியா

Series Navigation

கலாப்ரியா

கலாப்ரியா