யாமறிந்த மொழிகளிலே…

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

ராமலக்ஷ்மி


‘யாமறிந்த மொழிகளிலே

தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம் ‘

தமிழ் தலைவன்

சொல்லி வைத்தான்.

இரண்டாம் கருத்துக்கே-

இங்கிடமில்லை.

தணியாத

தமிழ்த்

தாகம்- என்றைக்குமே

தவறில்லை.

**

ஆனால்

‘பிறந்த மண்ணில்

பிறந்த மொழியை

மறந்து விட்டு

எங்கிருத்தோ பறந்து

வந்த மொழியிலே- திரைப்

படங்களுக்குப் பெயரிட்டால்

பரவசப் பட முடியுமா ‘

என்கின்ற

படபடப்பும் தேவையில்லை.

**

அந்நிய மொழியே

ஆயினும்

ஆங்கிலம்-

அன்னை இந்தியாவால்

அங்கீகரிக்கப் பட்டு-

ஆண்டு பலவாயிற்று.

அதை ஒதுக்கி வைத்த

சீனர்கள்-

தவறுணர்ந்து திருந்தியதும்

கவனிக்கத் தக்கதாயிற்று.

**

மாநில மொழி யாவும்

இந்தியத் தாய்

ஈன்றெடுத்தவை- எனில்

ஆங்கிலம் அவளால்

சுவீகரிக்கப் பட்டு-

சுவாசத்தில் கலந்து

விட்ட ஒன்றாயிற்று.

**

வந்த மொழிக்கு

வந்தனம் செய்ததால்

சொந்த மண்ணின்

சொத்தை

‘சொத்தை ‘- என

இகழ்ந்ததாகி விடாது.

ஒரு ‘ஆட்டோகிராப் ‘-

தமிழின்

தரத்தைத்

தரணியிலே

தாழ்த்தி விடாது;

**

பாஷைக்கோ-

படம் செய்வோருக்கோ-

பரிந்து வரும்

பேச்சன்று இது;

கவனம் செலுத்த வேண்டிய

காரியங்கள்-

கணக்கின்றி குவிந்திருக்க-

தேசத்தின் திறமைகளை- வீணே

திசை திருப்பும்

முயற்சிகளுக்கு- ஓர்

முற்றுப் புள்ளி வாராதாயெனும்

முனைப்பே இது.

**

உரக்க ஒரு முறை

உரைத்ததோடு

நிறுத்திடல் நலமன்றோ ?

உறைப்பவருக்கு

உறைக்கும்.

ஒவ்வொரு முறையும்

தடை சொல்லி

தட்டி ஏந்துதல்

வெட்டி வேலையன்றோ ?

**

சந்தியில் நின்று

சத்தம் எழுப்புவதை

விட்டு விட்டு

சமூகம் முன்னேற-

சனங்களின் சக்தியைச்

சரியான பாதையில்

முடுக்கி விட்டால்

தமிழோடு

தமிழனும்

வளர்வான்;

உயர்வான்!

**

வாழ்க தமிழ்

வளர்க தமிழன்!

***

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி