பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

பா.சத்தியமோகன்


1058.

சிவலோகம் உடையவர் தம் திருவாசல் முன் நின்று

இவ்வுலகப் பிறவி கடக்கும் சிவநெறி நின்ற நந்தனார்

இறைவனைப் பணிகின்ற பணி முடிந்து பணிந்து எழுந்தார்

அவ்வாறு செல்லும் போது

அடுத்துள்ள பின் பக்கம் ஓரிடம் பள்ளம் இருந்தது கண்டு

குளமாகத் தோண்டினார்.

1059.

மாலைபோல் மலர்கின்ற பொன் இதழ் சூடிய

திருமுடி கொண்ட சிவபெருமான் திருவருளால்

இடம் அகன்ற குளத்திற்கு ஏற்றவாறு தோண்டினார் பிறகு

இறைவர் எழுந்தருளியிருக்கும் கோவில்விட்டு

வலமாகச் சூழ்ந்து வந்து பணிந்து எழுந்து

கூத்தாடி விடைபெற்று தமது ஊர் அடைந்தார்.

1060.

ஈசர் மகிழ இத்தன்மையுள்ள மெய்த்திரு தொண்டுகள் பலவும்

தலங்கள் பலவற்றுக்கும் செய்து வந்தார்

அன்பு மிகுந்து எழுந்து சித்தமோடு

திருத்தில்லையில் உள்ள திரு அம்பலம் சென்று இறைஞ்ச

மிகப்பெரும் காதலுணர்வு ஓயாமல் வந்து உதித்தது அவருக்கு.

1061.

அன்றிரவு அவர் கண் துயிலவில்லை

விடிந்த பின் –

“தில்லையில் சேரும் தன்மை என் குலத்துக்கு பொருந்தவில்லை”

என எண்ணினார் பிறகு

“இந்த எண்ணமும் எம்பிரான் ஏவலே” என எண்ணி

கிளம்பும் எண்ணத்தை ஒழித்தார்.

மென்மேலும் எழுந்தது காதல் !

“நாளைப் போவேன்” என்றார்.

1062.

“நாளைப் போவேன்” என நாட்கள் பல கழிந்தன

பூளைப் பூ போன்ற பிறவிப்பிணிக்கட்டு நீங்கத் துணிவு கொண்டவராக

பாளைப்பூக்கள் நிறைந்த பாக்குமரங்கள் சூழ்ந்த

அந்த பழைய ஊர் விட்டு

ஆண் வாளை மீன்கள் பாயும் வயல்கள் சூழ்

தில்லையின் பக்கம் அடைந்தார்.

1063.

செல்கின்றபோது

அந்தத் தில்லையின் திரு எல்லை பணிந்து எழுந்தார்

எழுந்து பெருகும் செந்தீ வளர்க்கும் வேள்விகளில் எழும் புகையும்

பெரிய அந்தணச்சிறுவர் மறைகள் ஓதும் மடங்கள் இருப்பதுவும் கண்டார்

அவை கண்டதும்

தம் கீழான குலம் நினைத்தே அஞ்சி மேலே செல்லாமல் நின்றார்.

1064.

நின்ற நந்தனார் தில்லை சென்று சேர அரிய பெருமை நினைத்தார்

“முன் சென்று இவையும் கடந்து

ஊரைச் சூழ்ந்த மதிலின் வாயிலில் புகுந்தால்

மலை போன்ற மாடங்கள்தோறும் பொருந்திய

வேதிகைகளுடன் பொருந்திய மூவாயிரம் ஆகுதிகள் அங்குள்ளன “ என்பார்.

1065.

“இங்ஙணம் இருத்தலால் அங்கு சென்று சேர்தல்

எனக்கு அரிது” என அஞ்சி

அத்தலத்தில்

மதிலின் வெளிப்புறத்தில்

ஆராத பெருங்காதல் ஒப்பிலாமல் ஓங்கி வளர

உள்ளம் உருகிக் கை தொழுது

கூறுவதற்கு அரிய நகரின் எல்லையை வலம் வந்தார்.

1066.

இவ்வண்ணமாக இரவும் பகலும் வலமாக வந்து

அந்நகரில் சென்று சேர்வதற்கு இயலாத தன்மை எண்ணி

மனம் வருந்திய தொண்டர் நந்தனார் அயர்வு அடைந்து

“மை போல் கரிய திருமிடறு உடைய இறைவரின்

திரு அம்பலத்தின் நடனம் எவ்வாறு காண்பது”

என நினைத்தே வருந்தி உறங்கினார்.

1067.

“துன்பம் தரும் இழிபிறவி இது தடையாக உள்ளது”

என மனதில் எண்ணித் துயின்ற நிலையை

அம்பலத்துள் ஆடும் இறைவர் அறிந்து அருளினார்

நிலை பெற்ற திருத்தொண்டரின்

வருத்தமெல்லாம் தீர்ப்பதற்கு

அவர் முன்பு கனவில் புன்முறுவலோடு அருள் செய்யலானார்.

1068.

“இப்பிறவி போய் நீங்குவதற்கு தீயினில் நீ மூழ்கி

முப்புரி நூல் மார்பருடன் முன் வருவாயாக” என மொழிந்து

அவ்வாறே தில்லைவாழ் அந்தணர்க்கும் கனவில் தோன்றி

தீ அமைத்துத்தர அருளி

மெய்ப்பொருளான இறைவர் மேவினார் சிற்றம்பலத்தே.

1069.

தம் இறைவன் இட்ட பணி கேட்ட தவமறையோர் எல்லோரும்

அம்பலவாணரின் கோவில் திருவாசல் முன்பு அச்சமுடன் கூடி

“எம்பெருமான் அருளிய பணி செய்வோம்” என ஏத்திச் சென்று

தம் அன்பு பெருக வருகின்ற திருநாளைப் போவாரிடம் வந்தனர்.

1070.

‘ஐயனே அம்பலவர் அருளால் இப்போது உம்மிடம் வந்தோம்

கொடிய தீயை அமைத்து உமக்குத் தருவதற்காக” என விளம்ப

நைந்து வருந்தும் திருத்தொண்டர்

“நான் உய்ந்தேன்” எனத் தொழுதார்

தெய்வமறை முனிவர்களும்

தீ சமைத்துத்தரச் சொன்ன சேதியை மொழிந்தனர்.

1071.

மறையவர்கள் மொழிந்தபின்

தென் திசை மதில் புறத்தில் உள்ள திருவாயில் முன்

சிவபெருமானின் நிறைந்த பேரரருளால்

மறையவர்கள்

நெருப்பு அமைத்த குழியை அடைந்து

இறைவனின் திருவடியை மனதில் கொண்டே

அத்தீயினைச் சுற்றி வலம் வந்தார்.

1072.

கைகளைக் கூப்பித் தொழுது

சிவபெருமான் திருவடி நினைத்து தீயுள் புகுந்தார்

எய்திய அதே கணத்தில் மாயை பொருந்திய பொய் உரு ஒழித்து

புண்ணிய மாமுனி வடிவாய்

மேனியில் வெண் நூல் விளங்க

சடை முடி கொண்டெழுந்தார்.

1073.

செந்தீயின் மேல் அவர் எழும்போது

செந்தாமரை மலர் அமரும் அந்தணரான நான்முகன் போல் தோன்றினார்

அப்போது

உயர்ந்த வானத்தில் துந்துபி முரசின் முழக்கம் எழுந்தது

வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து

புதிய இதழ்கள் கொண்ட மந்தாரப் புது மலர்களை

மழையெனப் பொழிந்தனர்.

1074.

இறை அருள் செல்வமுடைய அந்தணர்கள் கைதொழுதார்

போற்றிப்பரவ அரிதான தொண்டர்களும் பணிந்து மனம் களித்தனர்

அரிய வேதங்கள் சூழ்ந்து துதிக்கும் அம்பலத்தின்

ஆடுகின்ற திருவடி வணங்குவதற்காக

திருநாளை போவாரான மறை முனிவர் செல்லத் தொடங்கினார்.

1075.

தில்லை வாழ் அந்தணர்களும் உடன் செல்ல

திருநகரத்தின் உள்ளெ புகுந்து

கொல்லை வாழும் மான் கரத்தில் கொண்ட சிவபெருமானின்

திருக்கோபுரம் தொழுது இறைஞ்சி விரைவாய் உட்புகுந்தார்.

உலகம் உய்வதற்காக அருட்கூத்து ஆடும் எல்லை அடைந்தார்

அதன் பிறகு யாவரும் பார்க்கவில்லை.

1076.

அங்கு நிகழ்ந்தது கண்டு அந்தணர்கள் அதிசயித்தார்

அரிய முனிவர்களும் துதித்தனர்

வந்து சேர்ந்த திருத்தொண்டரின் வினை மாசு அறுத்து

அழகிய தாமரை போன்ற அடிகளை வணங்கித் தொழுத வண்ணமிருக்க

எல்லையிலா ஆனந்த அருள் புரிந்தார் பெரும்கூத்தர்.

1077.

மாசு உடம்பை விடுவதற்காகத் தீயில் குளித்து மேலெழுந்து

குற்றமிலா மறைமுனியாகி

அம்பலவாணர் திருவடி அடைந்தவரின் புகழுடைய திருவடி வாழ்த்தி

திருக்குறிப்புத் தொண்டர் வினைப்பாசம் போக்க முயன்றவரின்

திருத்தொண்டை இனி உரைப்போம்.

திருநாளைப் போவார் புராணம் முற்றிற்று.

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்