முந்தைய சூழல் ஒன்றுக்காய்

This entry is part of 25 in the series 20050429_Issue

றகுமான் ஏ. ஜமீல்


பசுமை வெளிகளாயினும்
பாம்புகளின் புதராயினும்
அந்த அலாதியான
முந்தைய சூழல் ஒன்றுக்காய்
மனம் ஏங்கிற்று.

அந்தி மழையில் தொப்பாகி
கோழி இறகால் காது குடைந்து
ஒரு வகை சுகம் அனுபவிக்கும்
இந்த நொடியில்.
அந்த கடல் பேய்களை
ஒருமுறை மீட்டுப்பார்க்கையில்
ஈரற்குலை கருகி
உயிர் கசிகிறது.

எல்லாமே எல்லாமே
இயல்பு நிலைக்குத் திரும்பிட்டு
பறவைகள்
விலங்குகள்
இத்தியாதி இத்தியாதி.

எங்களது இரவும் பகலும்
கடலாமைக் குஞ்சுகள்மாதிரி சிதறி
சல்லுக்கும் புல்லுக்கும்
மாறி மாறி இழுபட்டு
வாழ்தல் நிர்க்கதியாகி.

கடவுள் துயில்கையில்
மண்டையைக் கொத்திப்பிளந்து
கடற்பரப்பை மண்மூட்டைகளிட்டு நிரப்பவும்
என் மகவுகள் தடித்த குரலில்
உரத்துச் செல்லிட்டு.

காற்றின் பல்லிடுக்கில் சிக்கி
நொறுங்கி சிதறலுறும்
தட்டுவம்மி சருகுமாதிரி
அலைந்து திரியவும்
அலுப்புற்று சாயவும்
இந்த ஜென்மம் போதாது போலும்.

பசுமை வெளிகளாயினும்
பாம்புகளின் புதராயினும்
அந்த அலாதியான
முந்தைய சூழல் ஒன்றுக்காய்
மனம் ஏங்கிற்று.

றகுமான் ஏ. ஜமீல், இலங்கை

Series Navigation