நெப்போலியன்
விழித்திருக்கும் பொழுதே
எரித்து விடுகிறார்கள்….
தூங்கலாமா தம்பி தூங்கலாமா ?
பேருந்தில் !
யாத்திரைகளில்
நித்திரை நிரந்தரமற்றது
பயணங்களில்
தூக்கம் தவிர்க்கமுடியாதது
நடத்துனரும் – ஓட்டுனரும்
தூங்காமலிருத்தலால்தான்
சுகமான பிரயாணத்தின்
நிம்மதி நிறுத்தங்கள்.
ஜன்னலோரம் விரியும்
நகரும் உயிர் ஓவியங்களை
ரசிக்கத் துப்பின்றி
துப்புவார் வெற்றிலை எச்சிலை
தூங்கியபடியே சிலர்.
பத்திரிக்கைப் பக்கம் புரட்டி
பாதியில் கொட்டாவி வர
பல் தெரிய ஒழுகும் எச்சிலுடன்
உறங்குவார் சிலர்.
தூக்கத்தின் உச்சம்
தொட்டாலும்
தம் நிறுத்தம் வந்ததும்
அனிச்சையாய்
சுருட்டி எழும்
தொடர்கதையாய் சிலர்.
கட்டணமின்றி பயணித்தலின்
அபராதத்தையும்
கறைபடிந்து சாயம் உதிர்ந்த
திருக்குறளையும்
கரம் சிரம் புறம் காத்தலின்
எச்சரிக்கையையும்
ஆண்கள் – பெண்கள்
பாகுபாட்டினையும்
அரைத்தபடி சிலர்.
காதல்
மரணம்
ஜனனம்
விசேஷம்
லாபம்
நஷ்டம்
விரோதம்
துக்கம்
சந்தோஷம்
எதிர்பார்ப்பு
இயலாமை
துரோகம்
துன்பம்
தீவிரம்
என,
அத்தனையும் அள்ளிக்கொண்டு
வெவ்வேறு நிறுத்தங்களில்
வீசியெறிந்து செல்லும்
பேருந்தில்
நிறுத்தங்கள்தோறும்….
சில
புண்ணிய மூட்டைகளும்
பல
பாவ மூட்டைகளும்
சலிப்பின்றி சுமந்தபடியே
நகரும் பிரயாணம்.
பேருந்தில்
இருக்கைகளைப் பொருத்தும்
பக்கத்தில்
இருப்பவனைப் பொருத்தும்தான்
தூக்கப்பிராப்தம்
எந்தநேரம் தன்மேல்
மோதிச்சாய்வான்
என்ற கவன ஓட்டத்திலேயே
தன் தூக்கம் உடையும்.
புதிதாய் திருமணம்
சுதி சேர்க்கும் காற்று
அணைப்பால் அயர்ந்தபடியே
ஆயிரம் கனவுகளுடன்
அவர்களின் தூக்கம்
நிறுத்தங்கள்
பயணங்களில்
தேவையில்லை எனும்
சித்தாந்தத்துடன்.
அட்டைக்குறிப்புடன்
பிச்சை எடுத்தல்…
ஆயிரம் தகவல்களுடன்
அழகிய டைரி…
கீ செயின்
சாத்துக்குடி
திருட்டு வி சி டி
தேசிய வரைபடம்
அரைஞாண் கயிறு
அதிசய லேகியம்
இத்தனை
இரைச்சல்களுக்கிடையேயும்
இறுக்கமாய் தூங்குவார்
தூங்கு தூங்கி.
தூக்கம் சோம்பலின் வாசல்
சுறுசுறுப்பின் மரணம்
கனவின் பிரசவகாலம்
கவலையின் வெளியேற்றம்
ஆசையின் தூண்டில்
இருப்பினும்,
நிற்கவே இடமில்லாத
வேளைகளில்
நித்திரை எப்படி வரும் ?
ஒரு காதலிற்கான
புறப்பாட்டுடன்
போர்வீரனாய் காத்திருக்கும்
கணங்களில்
கண் எப்படி அயரும் ?
இடம் பிடிக்க
விரித்த கைக்குட்டையே
களவாகிப்போன
தருணங்களில்
வருமா உறக்கம் ?
விழித்திரு தம்பி விழித்திரு…
பேருந்தெனினும்
பிரயாணமெனினும்
பொறுமையெனினும்
போராட்டமெனினும்
விழித்திரு தம்பி விழித்திரு…
விழித்தலால்
உலகம் பொருள்படும்
உண்மை கருவுரும்
உயரம் உறவாடும்
அலுவலகத்தில் தூங்கினால்
அல்வா வேலை.
போர்க்களத்தில் தூங்கினால்
போகும் உயிர்.
சட்டசபையில் தூங்கினால்
சாகும் ஜனநாயகம்.
கடைதனில் தூங்கினால்
கவிழும் வரவு.
வகுப்பறையில் தூங்கினால்
வாழ்க்கை பாழ்.
ஆலயத்தில் தூங்கினால்
கடவுள் பொய்.
தம்பி….
பேருந்தில் தூங்கினால்
வாழ்க்கைப் பேருந்தில் தூங்கினால்,
வாய்ப்புகளின்
நிறுத்தங்களைத் தவறவிட்டு
வாழ்க்கையின்
இலட்சிய
எல்லைகளைக் கோட்டைவிட்டு
வெறும் பதராய் வீணாவோம்
வெற்று முட்டைகளாய் சீரழிவோம்.
விழித்திருக்கும் பொழுதே
எரித்து விடுகிறார்கள்….
தூங்கலாமா தம்பி தூங்கலாமா ?
பேருந்தில் !
—- நெப்போலியன்
சிங்கப்பூர்
( தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்மன்ற வளாகத்தில் 13 04
2005 புதன்கிழமையன்று மாலை
5 மணியளவில் நடைபெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பிறந்த தின விழா ‘ தூங்காதே தம்பி தூங்காதே – சிந்தனை கவியரங்கம்
‘ நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் பா. விஜய் , கவிஞர்கள்
செ. முகேஷ், தங்கம் மூர்த்தி, ராஜேந்திரன், ச. பிருதிவிராஜ், மு. முத்து
சீனிவாசன், ஆரா, கரு.சிவஞானம், சுவாதி இவர்களின் முன் படிக்கப்பட்ட
கவிதை )
—-
kavingarnepolian@yahoo.com.sg
- நெடுந்தீவு ஆச்சிக்கு
- நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
- பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்
- டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்
- தன்னலக் குரலின் எதிரொலி
- சருகுகளோடு கொஞ்ச துாரம்
- சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்
- மெல்லக் கொல்லும் விஷங்கள் …
- அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)
- கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்
- மழைக்குடை மொழி
- சிறுவாயளைந்த அமிர்தம்
- தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்
- வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்
- பெரியபுராணம்-37
- 21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்
- பாவேந்தரின் பதறல்கள்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)
- மீனம் போய் மேடம்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1
- அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்
- கடப்பாரை
- அவர்கள் வரவில்லை
- மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- கிருஸ்ணபிள்ளை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
- மரண வாக்குமூலம்