வாய்திறந்தான்

This entry is part of 35 in the series 20050304_Issue

நெப்போலியன்


—-

வாய்திறந்தான்
நல்ல பேச்சாளர்.

திண்ணைப்பேச்சு
திருமணப்பேச்சு
அரசியல்பேச்சு
ஆன்மீகப்பேச்சு
இலக்கியப்பேச்சு
இரங்கல்பேச்சு
என
பேச்சிற்கொரு
ரேட் வைத்திருப்பார்.

பட்டுஅங்கவஸ்திரம்
பைஜாமாகுர்தா
கோட்டுசூட்டு
வேட்டிசட்டை
என
விதவிதமாய்
உடையணிந்து மேடையில்
பட்டையக் கெளப்புவார்.

அன்பிற்குரிய பெரியோரே
வளர்த்து ஆளாக்கிய தாய்க்குலமே
என் இனிய தமிழ் மக்களே
உடன்பிறப்பே
அப்பனே முருகா வணக்கம்
சகோதர சகோதரிகளே
லேடாஸ் அண்ட் ஜென்டில்மேன்
என
கலப்படக்கலவையாய்
பேச்சைத் துவக்குவார்.

பருப்பு தலைப்பு என்றால்
செருப்பைப் பற்றி சிறப்பாய் கூறுவார்
பூசணிக்காயைப் பேச வந்தவர்
பால்கோவாவின் கதையளப்பார்.

அலைகடல் வெள்ளமென கூட்டம்
விரல்விட்டு எண்ணிவிடும் கூட்டம்
அடிக்க ஆசிட்டும் முட்டையும்
அள்ளி வந்த கூட்டம்
என
கூட்டம் பல கண்டவர்.

பேருந்து
புகைவண்டி
மிதிவண்டி
மாட்டுவண்டி
விமானம்
கருவாட்டு லாரி
கார் ஆட்டோ
என
பேச்சிற்காகவே
நாள் முழுவதும்
பயணிப்பவர்
நாளுக்கொரு ஊரும்
ஊருக்கொரு உணவுமென
இரவும் பகலும்
பேசியே கரைபவர்.

துண்டு
சால்வை
கிரீடம்
மலர்மாலை
முறுக்குமாலை
நோட்டுமாலை
கேடயம்
பொற்கிழி
பணமுடிப்பு
என
இதர மேடை வரும்படிகளும் நிறைய.

வாய்திறந்தான்
ஒருநாள்
மேடையிலேயே
இறந்துபோனார்
அன்று அவர்
பேச இருந்த தலைப்பு
‘ மெளனம் ‘
என் உயிர்த்தோழர்களே
என ஆரம்பித்தவுடனேயே
சரிந்து விழுந்தார்
இறக்கும் சமயத்திலாவது
உருப்படியான
ஒரு பேச்சைப் பேசிய
திருப்தி
அவர் முகத்தில் இருந்தது
வாய் மூடியபடி !

—- நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation