கவிக்கட்டு —- 46

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

சத்தி சக்திதாசன்


புதிதாய்ப் பிறந்தவளோ !

புதிதாய்ப் பிறந்தவளோ
பெண்ணாய்ப் புலர்ந்தவளோ
இசையாய்ப் பொழிந்தவளோ
மலராய் மலர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ

கனவாய் விளைந்தவளோ
மணமாய்த் தவழ்ந்தவளோ
பனியாய்க் குளிர்ந்தவளோ
நிலவாய் ஒளிர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ

நினவாய் வாழ்ந்தவளோ
நிழலாய்த் தொடர்ந்தவளோ
நிஜமாய் மொழிந்தவளோ
நீராய் நனைந்தவளோ – இவள்
புதிதாய்ப் புலர்ந்தவளோ

மலையாய் உயர்ந்தவளோ
மனமாய் உறைந்தவளோ
மதியாய் உதிர்ந்தவளோ
மரமாய் நிமிர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ

நேற்றாய் நெகிழ்ந்தவளோ
இன்றாய் இனிப்பவளோ
நாளை இருப்பவளோ
நானே முகிழ்த்தவளோ – இவள்
புதியாய்ப் பிறந்தவளோ

சிறகாய் விரிந்தவளோ
சிரிப்பாய் கனிந்தவளோ
சிறப்பாய் வளர்த்தவளோ
சிந்தனையாய் சுழன்றவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ

எனக்காய்ப் பிறந்தவளோ
என்னையே நினைந்தவளோ
என்னோடு கலந்தவளோ
என்னையே நிறைத்தவளோ – இவள்
புதிதாய்ப் புலர்ந்தவளோ
****

என்னை நீ விட்டு

பொட்டு வைத்தவொரு
பட்டுப் பெண்னென
சிட்டு நீ வருகையில்
தொட்டு நினவுகள்
எட்டுத் திசைகளில்
முட்டிச் சிதறியே
மொட்டு விரிந்தது
சொட்டு விலகியே
கட்டு உணர்வுகள்
பூட்டுத் திறந்தொரு
மட்டுத் தந்தொரு
வீட்டு ஆசைகள்
கேட்டு வாங்கியே
பாட்டுச் சொல்லிய
ஏட்டு அறிவுகள்
கட்டுக் கவிதைகள்
தட்டிக் கொடுக்கவும் – ஏனெனை
விட்டு நீ விலகினாய்

****

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்