பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பா. சத்தியமோகன்


650.
அடையாதவரின் திரிபுரங்கள் அழித்த
காளை ஊர்தி உடைய வேதவாய்மைக் காவலர்
திருக்காளத்தி கண்ணப்பரின் திருநாடு யாதெனில்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற
பூஞ்சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.
651.
இத்திருநாட்டில் இவரது திருப்பதி யாதெனில்
முத்துக்கள் கொழிக்கும் அருவிச்சாரல் நீண்டிருக்கிற
மலைகள் சூழ்ந்த பக்கத்தில்
மதம் பொருந்திய யானைகளின் கொம்புகளால் வேலி இடப்பட்ட
ஒரே தன்மையுடைய மதில் சூழ்ந்த பழம் பதி அது –
உடுப்பூர் ஆகும்.
(பதி- இடம் )
652.
அப்பதியின் குன்றில் வாழ்வார் குன்றவர் ஆவார்கள்
வளைவான காது கொண்ட நாய்கள் கட்டப்பட்டிருக்கும்
திரண்ட விளா மரத்தின் கிளைகளில்
பக்கத்தில் வார் வலைகள் தொங்கும்
காட்டுப் பன்றியும் புலியும் கரடியும்
காட்டுப் பசுவும் மான்களும் இருக்கும்
இல்லங்களின் முன்பு மலை நெல் அரிசி உலரும் எங்கும்.
653.
அப்பதியில் எங்கும் வன்மையான புலிக்குட்டிகளுடன்
வெற்றி பொருந்திய யானைக் கன்றுகளுடனும்
புல்லிய தலையுடைய வேடச் சிறுவர் விரும்பி விளையாடுவர்
அன்புடன் ஆசைமிக அணைகின்ற பெண்மானுடன்
கூடி விளையாடும் வேட்டுவச் சிறுமியரும் உள்ளனர்.
654.
வெல்லும் படைக்கலமும் அஞ்சாமையும் உடைய வேடர்கூட்டம் தோறும்
கொல் ! எறி ! குத்து ! என ஆர்த்துக் குழுமிய ஓசை தவிர
சில பரல்களுடைய உடுக்கையும் ஊது கொம்பும்
சிறுமுகம் கொண்ட சிறு பறையும் கூடி ஒலிக்கின்ற ஒலியைவிட மிகுந்து
ஒலித்து ஓடுகின்ற அருவிகள் எங்கும் உள்ளன.
655.
அவ்வூரில் எங்கும் வழிப்பறியை தம் தொழிலெனக் கொண்ட வேடர்கள்
கவர்ந்து வந்து வெவ்வேறு வடிவம் பொருந்திய பசுக்கூட்டங்கள் தவிர
இடியின் குரல் ஏறும் வானம் தன்னில் சூழும் மேகங்களுக்கு
எதிர் முழக்கம் விடுகின்ற மதயானைக் கூட்டங்களும் உண்டு.
656.
மை போன்ற கரிய மேனி, வன் தொழில் உடையவர் மறவர்
அச்சமும் அருளும் அடையமாட்டார்
உடையாக வன் தோல் அணிவர்
மலைத் தேனும்; நறவு கலந்த சோறும் உண்பர்
நஞ்சு தோய்ந்த தீய அம்பு உடையவர்
இவ்வேடர் குலத்திற்கு அதிபதி நாகன் என்பவன்.
(நறவு – தேன்)
657.
பெற்றிமையால் முன்பு செய்த தவம் உடையவர் ஆயினும்
பிறப்பின் சார்பால் குற்றமே குணமாக வாழ்வான்
உயிர்க்கு கொடுமை செய்வதில் சிறந்தவன்
வில்லாற்றலின் வன்மை கொண்டவன்
சினம் கொண்ட சிங்கம் போன்றவன்
அவனது குறிஞ்சி நில வாழ்வில்
மனைவியாய் அமைந்தவள் தத்தை என்பவள்.
658.
அவள் —
பெறுதற்கரிய சிறப்புடைய மறவர் குடியில் ஒன்றான தொல்குடியில் வந்தவள்
புலிப்பல் தாலியை பல கறைகள் கோர்த்து
பிடரியின் கீழும் நீண்டு தொங்கும்படி பூண்டவள்
மயில்பீலியும் இலைத் தளிர்களும் மோத
வண்டுகள் மொய்க்கும் மலர்மாலை சூடிய உச்சிக் கொண்டையுடன்
அச்சம் பொருந்திய பெண் சிங்கம் போன்றவள்.
659.
ஒப்பிலாச் சிறப்புமிக்க இவர்கட்கு
இனி புதல்வர் பேறு அரிது என அனைவரும் கூற
பிள்ளைப் பேறு வேண்டிக் காதலுடன்
மணம் மிகு மலர் மாலை சூடிய செவ்வேல்முருகவேளின் முன் சென்று
பக்தி பரவிய நாள்தோறும் கடமை பூண்ட நெறியில் நிற்பார்.
660.
சேவற்கோழிகளையும் வரியுடைய மயில்களையும் காணிக்கை தந்து
தோரண மணிகள் தூக்கி கடம்ப மலர் மாலைகள் தொங்கவிட்டு
போரில் வல்ல அழகு நீளவேலுடைய முருகக் கடவுளுக்கு புகழ் அமைந்த
குரவைக் கூத்தாய் பெரிய அணங்காடல் செய்வித்து பெருவிழா செய்த பின்பு —
661.
பொருந்திய வடுக்கள் விளங்கும் உடல் கொண்ட
வேடர்களின் தலைவனான நாகனுக்கு
முப்புரம் எரித்த சிவபெருமானின் மகனான
வெற்றி பொருந்திய மயில் ஊர்தியும்
கிரவுஞ்ச மலை கிழித்த திண்மை கொண்ட பெரிய கையும்
வெற்றியும் உடைய முருகபெருமான் அருளாலே —
662.
வேடரது குலம் விளங்குமாறு
கர்ப்பம் ஆனாள் தத்தை
குற்றமற்ற பலிகள் தந்து தன் கடமையை வெறியாட்டுடன் செய்ய
மாதங்கள் மெல்லச் சென்றன
அளவிலாமல் செய்த தவத்தால்
தண்மை கொண்ட நிறைமதியை
உவர்கடல் பெற்றது போல மகனை ஈந்தபோது —
663.
யானையின் மிகப் பெரிய கொம்பில் தோன்றிய முத்தும்
மூங்கிலில் விளையும் செழிப்பான முத்தும்
மலையில் விளையும் மற்ற மணியும்
வேடர் மகிழ்ச்சியால் பெய்யும் மழையே என ஆனது
வரியுடைய வண்டுகள் எழுந்து பறக்க
வானத்தின் மலர் மழை எங்கும் பெய்தது
சிறிய உடுக்கைகள் தவிர வானவரின் துந்துபிகளும் முழங்கின.
664.
அரிய மலைக்குறவரில் பெரிய குடிகள் வாழும் சிறிய ஊர்
பெரிய விழா எடுத்தது
பெருங்களி கொண்டது
கரிய மலை கரிய மேகத்தை ஏந்தியது போல
தந்தை நாகன் தன் மலை போன்ற தோள்கள் நிறைய
மகனை எடுத்துக் கொண்டான்.
665.
கரிய கதிர் ஒளி வீசும் அக்குழந்தையும்
பெரிய புலிக்குட்டி போல மிக ஓங்கி
வேடர் மட்டுமின்றி உலகமே புகழும் குறிகள் பலவும் காட்டி
எதிர்காலப் பெருமையைச் சாற்றும் தன்மையுடன் தோன்றியது.
666.
பெருமை கொண்ட அக்குழந்தை
கையால் எடுப்பதற்கு அரியதாய் இருந்ததால்
திண்ணன் என அழைப்பீர் என்றான் நாகர்
ஆர்ப்பரித்தனர் வலிய சிலை வேடர்
புண்ணியத்தின் பொருளான ஒப்பிலாத சிறப்பின் வடிவு கொண்ட குழந்தைக்கு
கண்ணுக்கு அழகாக தங்கள் அணிகலன்கள் அன்றே அணிவித்தார்.
667.
மலையில் வாழும் கடவுள் காக்க
தம் மறவர் குடி மரபிலே வந்த குற்றமிலா
பழைய முறைமைக்கு ஏற்ப பொருந்தியதைப் போற்றிச் செய்து
மணம் கமழும் இளம் தளிர்கள் சூட்டி
இடையிடையில் அமைத்துக் கோத்த
இடுப்பில் அணியும் பலகறை மணிக் கோவை கட்டி
எழிலுடன் வளர்க்கும் காலத்தில் —
668.
முறையாய் வரும் பருவங்கள் தோறும்
வளம் மிக்க சிறப்புடன் தெய்வப்படையல் செய்து
வேடர்க்கெல்லாம் மங்கல வாத்தியம் முழங்க
மகிழ்ச்சி உண்டாக்கி அருமையான புதல்வனைப் பெற்ற
ஆர்வம் தோன்ற நடத்தினார்.
669.
முதலாண்டு நிறைந்து அடுத்த ஆண்டு தொடங்கியது
இடும் அடியின் தளர்ச்சி நீங்கி சிறுநடைப் பருவம் வர
சிறிய புல்லிய மயிர்த்தலையில்
பூணாக விளங்கும் புலிநகச்சுட்டி சாத்தி
மூண்டெழும் சினமுள்ள முள்ளம்பன்றியின் முள்ளை அரிந்து
இடையிடையில் கயிற்றில் கோத்த
புலிப்பல் மாலை மார்பில் தூங்க —
670.
பசும் ஒளி வீசும் மணிகளுடன்
பலவித மணிகள் கோர்த்த சதங்கையும் ஏங்குமாறு
காசோடு கட்டிய அரைஞாணும் அணிந்து
ஒளி பொருந்திய யானைக் காலால் ஆன தண்டையும்
மணிகள் பொருந்திய குதம்பையும் மின்ன
குற்றமிலாக் கோலம் காட்டி வீதியில் விளையாடிடும் நாளில் –
671.
குளிர் பூமாலை அணிந்த தந்தை தாய்
மனம் களிக்க வந்தார்
புண்ணிய கங்கை விட புனிதமான
தூய்மையான திருவாய் நீரில் நனைந்து
அமிழ்தமாக ஊறி ஒழுகும்
மழலையின் தீஞ்சொல்
வண்ண மென் பவளச் செவ்வாயைக் குதட்டிக் கூறி
வளர்ந்து வரலானார்.
672.
பழக்கப் படுத்தப் பட்ட போரிடும் புலியின் அகலத் திறந்த வாயை
சிறிய குகை என எண்ணியகுழந்தை தன் பொற்கையை நீட்டும்
பரிவுடன் தந்தை கண்டு
பசுந்தழை கொண்டு ஓங்கியதும்
சூரிய சந்திரர் என்ற இருசுடர்களின் துன்பம் தீர்க்கும்
எழில் வளரும் கண்ணீர் மல்கும்
குழந்தையின் தாயான தந்தை வாய்
வெளிப்படுத்தும் முத்தம் துளியான முத்தாகும்.
673.
உடுக்கை போன்ற குறட்டை உருட்டி ஓடியும்
நயைக் கட்டிய கயிறைச் சுற்றி அறுத்தும்
வேட்டைச் சிறுவர் கட்டிய சிறு இல்லங்களை சிறிய கால்களால் அழித்தும்
அவர்தம் குடில்களில் குறுநடைக் குறும்பு செய்தும் –
674.
இவ்வாறு பலவும் செய்தே
ஐந்து வயது நிரம்பியது
ஆறாம் ஆண்டில் வனையப்பாடும் வாரையும் கண்ணியையும் கொண்டு
மரம் வளர்ந்த பூஞ்சோலைகளில் ஆடி
குடிகள் மிக்க குறிஞ்சியினைச் சுற்றி
யானைக் கொம்புகளால் ஆன உழலை உடைய
வேலிப்புறம் அடுத்த சிறிய காட்டிற்குப் போய் —
(உழலை – கடந்து செல்லும் மக்களுக்கான வழி தந்து மீளும் சுழல் அமைப்பு)
675.
திண்ணனார் மிக வேகமுடைய முயல் குட்டியோலும்
காட்டுப் பன்றிக் குட்டியும் புலிக்குட்டியும்
வளைந்த காதுடைய செந்நாய்க்குட்டியும்
முடுகிய விசையோடு ஓட அதனுடன் ஓடிப் பிடித்து
முற்றத்து மரத்திரளில் கட்டி வளர்த்த விலங்குகள் ஏராளம்.
676.
வேடர்குல முதியவளான குறத்தி
கதிரவன் ஒளிமிகு பகல் கழிந்த அந்தியில் விரைந்து
புகை சுற்றிய உணவு ஊட்டி
இம்மகவை ஓரிடத்தில் உறங்கச் செய்து
இரவு நீங்கியதும் ஊன் தந்து விளையாடவிட்டு
சில ஆண்டுகள் சென்றதும் அவர்
வில்கலை கற்கும் பருவம் அடைந்தார்.
677.
வில்கலை பயிலும் பருவத்தை
தன் மகன் அடைந்ததை தந்தை பார்த்து
சிந்தையுள் மகிழ்ந்து
தன் தடித்த தோளால் தழுவி
வில்கலை பயில்விக்க வேண்டி
அத்துறையில் வல்லவரை அழைத்தான்
நல்நாள் குறித்து ஆராய்ந்து பிற வேடர்க்கும் கூறினான்.
678.
வேடர் தம் மன்னரான நாகன்
வெற்றி வேல்முருகன் அருளால் பெற்ற
அறிவுடையாரை விடச் சிறந்த திண்ணன்
வில் பிடிக்கிறான் என்று உடுக்கையில் ஒலிக்கச் செய்து
அவ்வோசை கேட்ட மற்ற
மறக்குலத் தலைவர்கள் எல்லோருக்கும் —
679.
மலையில் விளையும்
மணியும் பொன்னும் முத்தும்
புலியின் தோலும் யானைக் கொம்பும்
மயிற்பீலியின் சுமையும் தேனும்
அளவிலாப் பலவகை ஊனும் பழமும் கிழங்கும் எடுத்து வந்தனர்
பல திசையிலிருந்த வில்பயிற்சி மிக்க வீரர்.
680.
பல்கிய வளங்கள் யாவும் நிறைந்திட
தனக்கு ஒப்பிலாத அந்த சிறிய ஊரின்
எல்லைக்குள் அடங்காதபடி எங்கும் வந்து கூடினர்
எங்கும் பல சுற்றத்தவர் கூடி பாராட்ட
தெய்வத்துக்கு வழிபாடு செய்து
வில்விழா தொடங்கட்டும் என்றான் வேடர் தலைவன் நாகன்.
681.
படைக்கலம் அமைக்கின்ற வினைஞர் உதவிட
கான ஊனை அமுதம் ஆக்கும்
வில்லைக் காப்பு சேர்த்தனர் –
தேனுடன் மலர்கின்ற கொன்றை மலரை அணிந்த
சிவபெருமானின் வில்லான மேருமலை
பாற்கடலில் அமுதை நஞ்சாக்கியதற்கு பரிகாரமாக.
682.
வில்லைக்காப்பு கட்டும் வன்மையுடைய
புலி நரம்பால் செய்த நலமிகு காப்பினை
நலமிக்க நல்ல வேளையில்
வேடர் குலம் விளங்கத் தோன்றிய
அரிய குன்று போன்ற
திண்ணனாரின் கையில் சேர்ந்து
மலை வாழ் மக்கள் யாவரும் வாழ்த்தெடுத்து இயம்பினார்கள்.
683.
மலையரிசிச் சோறும்
வேறு வேறு வகையான புல் அரிசிச் சோறும்
அடர் மலையில் விளைந்த தினைமென் சோறும்
மூங்கிலின் வலிய அரிசிச் சோறும்
சமைகின்ற வேடர்கள் அதனுடன் ஊனும் கிழங்கும் கலந்து
குன்றுபோல் குவித்தனர் எங்கும் கூடினர்
சினம் மிக்க வில் வேடர் பலரும்.
684.
அளவற்ற வேடர்கள் அவர்கள்
செந்தினைமாவும் தேனும் கலந்து அருந்துவார்
தேனில் தோய்த்து வெந்த இறைச்சி உண்பார்
விளாம்பழத்தைத் தேன்கலந்து கவளமாக உண்பார்
இறந்த ஈயல் உணவை நசையோடு உண்பார்
வெவ்வேறு அளவிலா பல உணவுகளிலும் மேலோர் ஆயினர் வேடர்.
685.
பக்கத்திலுள்ள மலையினின்று வந்தவரும்
அரிய உடுப்பூர் சிறுகுடி மக்களும்
இத்தகு இயல்பு கொண்ட அவ்வுணவை உண்டு
தேக்கிய வேடிச்சியரும் வேடரும் ஆன அனைவரும்
உயர் கதிரவன் நீங்கும் வரை
அளவிலாப் பலவகை தேனையும் குடித்து
மயக்கம் பொருந்திய களிப்பில் பெருகி வரிவில் விழாக் கொண்டாடினர்.
686.
பச்சிலையால் படலைகளைச் சுற்றிப்
பலவகை மலர் மாலைகள் சூடி
மணிகள் கட்டிய வடத்தோல் கட்டி
உடலில் பலகறைகளால் ஆன அணிகள் அணிந்து
குற்றமிலாச் சிறப்பு கொண்ட வெட்சி முதலான
துறைகளுக்குரிய மாலைகள் அணிந்து
குற்றம் நீங்கப் பெற்ற வில் ஆசிரியன் ஏந்தும்
வலியவில் அருகில் சேர்ந்தனர்.
687.
தொண்டகமுரசும் ,கொம்பும், துடிகளும்
துளையுடைய மூங்கில் வாத்தியமும்
எண் திசையும் நிரம்பி விம்மியதால் எழுந்த பேரோசையில் கூடி
திண்மையான வீரர்களின் ஆரவாரம்
நீண்ட வானத்தில் நிரம்பிச் செல்ல
அத்திருவிழா சிறப்பு மிக அவ்வூரை வலம் வந்தார்கள்.
688.
வேடர்கள் வரிக்கூத்தாட
வேடிச்சியர் துணங்கைக் கூத்தாட
மிக மகிழ்வில் அச்சம்தரும் தெய்வ மகளிர் ஆட
வெற்றி தரும் வில்விழாவை நாள் தோறும் கொண்டாடினர்
ஏழாம் நாளில் முந்தைய நாட்களைவிட
இருமடங்கு அதிக கொண்டாட்டம் கொண்டனர்.
689.
கதிரவன் வான்வெளி உச்சியில் மேவிய போதில்
எங்கும் மங்கல வாழ்த்து மல்க
அவ்வேடர்கள் தம் தொல்மரபில் வந்த வில்கலை வல்லவரிடம்
ஒளிரும் கரிய போர் செய்வதில் வல்ல
காளை போன்ற திண்ணனாரைப்
போர் செய்ய வில்லைப் பிடிப்பித்தார்கள்.
690.
என்னை ஆளும் வேடர்குல ஆண் சிங்கம் போன்ற திண்ணனார்
அழகிய பெரிய மலைச் சாரலில்
விருப்பம் மிக்க வில் தொழில்களம் சேர்ந்து
விதிமுறை வணங்கி மேவிய
அந்நாள் தொடங்கி வன்மையுடைய
வில் ஆளும் தொழிலை முற்றும் கற்றார்.
691.
விதவிதமான வில்கலையும் மற்ற படைக்கலையும்
மலரும் படி கற்று
கண்ணகலா அழகு பொங்க
கலைகள் நிரம்பி வளரும் திங்கள் போல
பதினாறு வயது எய்தினார்
அளவிலாமல் தோன்றிய சிவபுண்ணியங்கள்
மேன்மேலும் வளர்வதவன் பொலிவு போல.
692.
இவ்வாறு திண்ணனார் 16 வயது நிரம்பிய நாளில்
வன்மையில் பெரிய குறவர் வாழும்
பெரும் குறிச்சிக்குத் தலைவன் நாகன்
மை வண்ண மலை நெடுந்தோள் கொண்ட நாகன்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பிலாத காலம்
கையில் ஏந்திய வில்லால் வேட்டையாடிய நாகன்
பகை கூட்டத்தினர் பசுக்கூட்டங்கள் பல கவர்ந்து
தனது கானகம் காத்து வந்த நாகன்
உடல் வண்ணம் தளர்ந்தான்
மூப்பின் பருவம் எய்தினான் அதனால்
வில்லுழவின் பெருமுயற்சியில் மெலிவு ஆனான்.
693.
அழகிய மலைத்தடமும் சாரல்களும் காடுகளுமான எங்கும்
பன்றி,புலி ,கரடி, காட்டுப்பசு, மரை, மான் முதலிய
மிருகங்கள் மிக நெருங்கி அழிக்கத் தொடங்கிய போது
மாதம்தோறும் வேட்டையினை செய்யாமல் விட்டதனால் இப்படியென
சிலை வேடர் யாவரும் திரண்டு சென்று
தங்கள் குல முதல்த் தலைவனாகியுள்ள
குளிர்மாலை அணிந்த நாகன்பால் வந்து சொன்னார்.
(சிலை வேடர் : வில்வேடர் )
694.
சொன்ன உரை கேட்டான் நாகன்
சூழ்ந்து வரும் மூப்பின் தொடர்ச்சியை நோக்கியபடி
முன்னே நின்றவர்க்கு உரை செய்வான் :
மூப்பினாலே முன்புபோல வேட்டையிலே முயல இயலவில்லை
என் மகனை உங்களுக்கு நாதனாக
எல்லோரும் கைக்கொண்மின் என்றதும்
அனைவரும் நாகனுக்கு இரங்கினர்
பின் மகிழ்ந்து தம் தலைவன் நாகன் அடி வணங்கி
இப்படி சொல்லலாயினர்.
(நாதன் : தலைவன்)
695.
இத்தனை காலமும் நினது வில்லாட்சியின் கீழ் தங்கினோம்
இனிதாய் உண்டு தீங்கின்றி இருந்தோம்
இனியும் தலைவ ! நினது அருள் கட்டளை வழி
நிற்பது தவிர அடுத்த நெறி வேறுளதோ !
அதுதவிர உடல் வன்மை மிக்க திண்ணனை
உன் மரபில் சால மேம்படவே பெற்றளித்தாய்
விளங்கும் மேன்மை வாய்ந்த
சிலை மைந்தனை இங்கு அழைத்து நுங்கள்
மலையாட்சி அருள் என்றனர் வேடர்கள் மகிழ்ச்சியாக.
696.
சிலை வீரர் உரை செய்ததும்
நாகன் திண்ணனை முன் கொண்டு வரச் செப்பி விட்டு
மலை மருவும் நெடிய கானகத்தில்
கன்னி வேட்டைக்கு என் மகன் போக
காட்டுத் தெய்வங்கள் மகிழ பலி ஊட்டுவதற்கு
தலை மரபின் வழிவந்த தேவராட்டியை அழைப்பீர் என்றதும்
அங்கிருந்தோர் சென்று நிலைமை கூற
நரை மூதாட்டி மகிழ்ந்து விருப்போடு விரைந்து வந்தாள்.
697.
கானகத் தளிர்களால் ஆன மாலை சூடி
கலைமான் கொம்பிலிருந்து அரிந்த குழை காதில் அணிந்து
மானின் வயிற்றில் தோன்றிய கத்தூரிப் பொட்டு இட்டு
மயில் கழுத்து போன்ற சங்கு மணி வடம் பூண்டு
முலை தொங்கித் திரங்கிச் சரிந்து தாழ
மேல்தழையுடன் மயிலிறகும் தொங்க அங்கே வந்து
பூவும் மலை நெல்லும் சேர்ந்த அட்சதை நல்கி
போரில் வல்ல வேடர் கோமான் நாகனைப் போற்றி நின்றாள்.
(குழை: காதணி)
698.
குறத்தியின் கோலத்தோடு விளங்கிய தேவராட்டியை நேர்நோக்கி
அன்னையே நீ வறுமை நீங்கி இனிதாக வாழ்கிறாயா
என வினவிய நாகன்
உன் நலம் பெருக என வாழ்த்தியதும்
நல்ல மென் ஊனும் ஈசலும் தேனும்
வெற்பில் விளையும் வளமும் பிற வளமும்
வேண்டிய யாவும் அன்று நீ வகுத்து வைத்தபடி பெற்று வாழ்கிறேன்.
அழைத்த பணி என்ன என்றாள்.
(வெற்பு : மலை)
699.
நிலை தவறா என் குலமைந்தன் திண்ணன்
எம் குலத்தலைமை நான் கொடுக்க ஏற்றுக் கொண்டு
நாண் பூட்டிய கொடுவில் வேடர்களைக் காக்கும் பொறுப்புரிமை புகுகிறான்.
அவனுக்கு என்றும் வேட்டை வினை
என்னை விட மேலாக வாய்த்திடவும்
புதிய புதிய புலம் கவரும்படி வெற்றி ஏற்படவும்
காட்டில் உறைகின்ற தெய்வங்கள் விரும்பி உண்ணுமாறு
காடுபலி செய்க என்றான் கவலை இல்லா நாகன்.
(காடுபலி : தெய்வவழிபாடு)
700.
நாகன் மொழி கேட்ட தேவராட்டி
மனம் மகிழ அன்புடன் வருமெனக்கு
எக்காலமும் இல்லாத நல்ல குறிகள் ஏற்பட்டன
இதனாலே உன் மைந்தன் திண்ணன்
வெற்றிவில் ஏந்தி உன் அளவை விட மேம்படுவான் என் விரும்பி வாழ்த்தி –
வெற்றி தரும் வனதெய்வங்கள் மகிழ
பலி ஊட்டத் தேவையானயாவும் குறைவின்றிக் கொண்டு போனான்.
701.
தெய்வத்தால் நிகழ்ந்த குறமுதியாள் சென்ற பின்பு
வில் உடைய திண்ணனாரின் தந்தை அழைக்க
சிறப்பு மிகு கரிய குடுமியும் வாசமாலையும் உடைய
நீலமணி மலை வந்தது போல
வில் பொருந்திய வேடர் சூழ வந்தார்.
காதல் புரி தந்தையின் கழல் வணங்கினார்
மலை போன்ற புயம் இரண்டும் பொருந்தத் தழுவி
செழும்புலித் தோல் இருக்கையில் சேர வைத்தான் நாகன்.
702.
முன்னிருந்த மைந்தன் முகம் நோக்கிய நாகன்
மூப்பு எனை வந்து அடைந்ததால்
முன்பு போல் எனது முயற்சியால் வேட்டையாட
இனி எனக்கு எண்ணமில்லை
என்னை விட மேலாக வேடர்குல காவல் செய்க
பகைவரை வென்று விலங்கு வேட்டை ஆடி என்றும்
உனது மரபுரிமை தாங்குக என வாழ்த்தி
அரச அடையாளமான தோலும் வாளும் கொடுத்தான் அன்றே.
703.
தந்தை நிலை உள் புரிந்து கொண்டார் பரிவு கொண்டார்
தங்கள் குலத் தலைமைக்கு பற்றுக்கோடு தேவைப்படும் குறையை
குறிப்பினால் புரிந்து மறுக்காமல் மேற்கொண்டு
முன்னவன் நாகன் கழல் வணங்கி
அவன் தந்த வாளையும் உடைத் தோலையும் வாங்கிக் கொண்டு
தன் உள்ளம் அரசபாரம் கொள்ள நின்ற திண்ணனார்க்கு
திருத்தந்தை முகம் மலர்ந்து சொல்கிறான்:-
704.
நம் குலவேடர்களை நம் சுற்றத்தாரை
நான்கொண்டு தாங்கியதை விட நலம் செய்து
பகை முனையில் அயல்புலங்கள் கவர்ந்து
அதனால் அடைந்த வலிய வில் விளைவிக்கும்
வளம் குன்றாச் சிறப்புடன் வாழ்வாய்!
விரும்பத்தக்க வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
காலம் தாழ்த்தாதே புறப்படு
இவ்வலிய வில்வேடர்களோடு என்றான் நாகன்.
705.
சிவந்தவிழி ஆண்சிங்கம் போன்ற திண்மையுடைய திண்ணனார்
செய்த தவத்தினால் பெருமை பெற்ற தந்தையின் கால்களில் வணங்கி வீழ்ந்து
விடை கொண்டு வெளியே சென்றார்.
இருள் புலரும் விடியற்காலை வில்சாலையில்
வில்கொண்டு செய்யும் வேட்டைக் கோலம் கொள்வதற்காக
அலங்காரம் செய்யும் கையை உடைய வினைஞரோடு புகுந்தார்.
706.
நெறிமிக்க தலைமயிரைச் சுருள்போல நேராய் நிமிரும்படி கட்டி
அதில் இலைத் தளிர் மாலை சார்த்தி
மணமுடைய முல்லை மாலையுடன்
வெட்சிப் பூவையும் குறிஞ்சிப் பூவையும்
நிறைந்த வண்டினன் மொய்க்குமாறு சிறப்பாய்ச் சேர்த்து –
707.
முன் நெற்றி மீது
மயில் இறகின் அடியில் இடையிடையே
குன்றின்மணி சேர்த்து குறுக்கிய
மயிற்க்கற்றைப் பொருத்தி மின்போல் ஒளிர
சங்கால் செய்த வெண்ணிறத்தோடு இருபுறமும் பொருந்த
காதில் நின்றன அவை முழு மதி போல.
708.
கழுத்தில் வெண்கறையால் ஆன ஒளிமாலை சேர
சங்குமணி மற்றும் பலமணிகள் கோர்த்து
இடையில் பன்றிக் கொம்புகள் பிறைபோல தூங்கின
இவற்றை வேங்கையின் வலிய தோலில் பதித்து
சன்ன வீரம் எனும் வெற்றிமாலை விளங்க –
709.
மார்பில் தந்தத்தால் ஆன சிறுமணிமாலை தொங்க
தோளில் வாடுலையம் எனும் அணிகள் மின்ன
பொருந்திய கங்கணமானது தன் மேல் விளங்கும் முன் கையில்
வில்லில் பூட்டிய நாணை மேக ஒலி போல
எறிய உதவும் கைக்கோதை கட்டி –
710.
இடையில்
மயிலிறகு பொருந்திய புலித்தோல் ஆடை மீது
கடல் அலையில் தோன்றும் வெண்மையான பல கறைகள் கோர்த்து
விளிம்பாய் ஓரத்தில் கட்டி
வரிசையாய் விளங்கும் நீண்ட உடை தோலையும்
வாளின் பக்கத்தில் சூழ்மணமுடன் துவர் ஏற்றிய வாரையும்
சேர்த்துக்கட்டும் விசியை அமைத்து –
( திருவருளால் தொடரும் )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்